dinamalar telegram
Advertisement

கழிவு அகற்றும் இழிநிலை

Share

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது, கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில், மனிதர்களுக்குப் பதிலாக, இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம், நாடு முழுதும் விரைவில் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.இது தொடர்பான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

.'கழிவுகளை அகற்றும் போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்கப்படும், கழிவு நீர் சீரமைப்பு இயந்திரங்கள் வாங்க, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு மானியம் வழங்கப்படும்' என்பது உட்பட சில அம்சங்கள், மசோதாவில் இடம் பெற்றுள்ளன. நாட்டில் தற்போது, சாக்கடைகளில் இறங்கி, கழிவு நீர் அடைப்புகளை சரிசெய்யும் பணியில், கிட்டத்தட்ட, 67 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாண்டுகளில் மட்டும், இந்தப் பணியில் ஈடுபட்டவர்களில், 340 தொழிலாளர்கள், விஷ வாயு தாக்கி இறந்துள்ளனர்.

அதிலும், 55 பேர் இறப்புடன், தமிழகம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு அடுத்ததாக, இந்தப் பட்டியலில், உ.பி., ஹரியானா, குஜராத் மற்றும் டில்லி போன்ற மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.அதே நேரத்தில், அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று நடத்திய, 'சர்வே'யில், 'தமிழகத்தில் எட்டு நகரங்களில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில், 3,000த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.'ஆனால், அரசு ஆவணங்களின்படி, இப்பணியில் ஈடுபட்டுள்ளோர் எண்ணிக்கை, 426 பேர் தான்.

கழிவுகளை அகற்றும் போது, இறக்கும் தொழிலாளர்களில், 45 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்' என, கூறப்பட்டுள்ளது.கழிவு நீர் அடைப்புகளை சரி செய்ய, சென்னை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்த இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த, பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை. தொழிலாளர்கள் வாயிலாகவே, அடைப்புகளை சரி செய்ய முற்படுகின்றனர். அரசின் தடைகளை மீறி, இப்பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது தொடர்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து, 75வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ள நிலையிலும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைமை தொடர்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது.


இதற்கு, திட்டமிடப்படாத வகையில் நகர மயமாக்கல் அதிகரிப்பது, கழிவு நீர் அடைப்புகளை சரி செய்ய இயந்திரங்கள் அறிமுகமாகி இருந்தாலும், அவற்றை வாங்க போதிய நிதி ஒதுக்காதது, இயந்திரங்களை பயன்படுத்த முன்வருவோரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது போன்றவையே காரணம்.மேலும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எந்த விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்யாத நிலையிலும், அவர்களுக்கு அனுமதி வழங்கி, வீட்டு மனைகள் விற்க அனுமதிப்பதும், இந்த அவலம் தொடர காரணமாகின்றன.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்ய, 25 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அது முழுமையாக நடைமுறைக்கு வராததால், இன்றளவும் தொழிலாளர்கள் உயிரிழப்பு தொடர்கிறது. தொழில்நுட்பம் உட்பட, பல்வேறு துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியை, இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலை நாடுகளில் இந்த பிரச்னையை தீர்க்க பின்பற்றப்படும் முறையை இங்கும் அறிமுகம் செய்வதற்கும், அதிக முக்கியத்துவம் தர வேண்டும். துப்புரவு பணி இயந்திரங்களை இயக்கும் பணியில் மட்டும், துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.மேலும், ரயில்வேயில் மனித கழிவுகளை தொழிலாளர்கள் அகற்றும் பணிக்கு முடிவு கட்ட, 'பயோ டாய்லெட்'கள் அறிமுகம் செய்யப்பட்டது போன்ற, மாற்று ஏற்பாடுகளையும் கண்டறியலாம். தமிழகத்தில் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் மட்டுமின்றி, நகராட்சி, பேருராட்சிகள் போன்ற வற்றிலும், பாதாள சாக்கடை திட்டங்கள் வர வேண்டும்.

இதற்கெல்லாம், மத்திய அரசின் புதிய சட்ட மசோதா வகை செய்ய வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.கழிவு நீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு களை சரி செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், 'மாஸ்க்' அணியாமல், போதிய உபகரணங்கள் அணியாமல், அப்பணியில் ஈடுபட்டால், யாரும் புகார் தரலாம் என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், 24 மணி நேரமும் இயங்கும், 'ஹெல்ப் லைன்' ஒன்றை துவக்கியுள்ளது.இது நல்ல முயற்சி. மேலும், மலம் அகற்றும் மனிதத்தன்மையற்ற செயலுக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதும் அவசியம். அதற்கு மத்தியஅரசின் மசோதா, ஒரு ஆரம்பமே என, நம்பலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement