dinamalar telegram
Advertisement

ஓய்வு பெறும் வயது உயர்வு இளைஞர்களுக்கு அதிர்ச்சி

Share

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 58 ஆக இருந்தது. 2020மே மாதம், அது, 59 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.

இது, வரும் மே 31ம் தேதி வரை ஓய்வு பெறும் நிலையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். முதல்வரின் இந்த அறிவிப்பு, அரசு பணியில் உள்ள ஒரு தரப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள ஏராளமான இளைஞர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாலும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, ஓய்வூதிய பலன்களை கொடுக்க முடியாத நிலை உள்ளதாலும், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதாவது, ஓய்வு வயதை உயர்த்தாமல் இருந்தால், வரும் நிதியாண்டில் மட்டும், அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறுவோருக்காக, ஓய்வூதிய பலன்களாக, 5,000 கோடி ரூபாயை கொடுக்க வேண்டி இருக்கும். அது, தள்ளிப் போடப்பட்டுள்ளது. 'அரசின் இந்த முடிவால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வு நடத்துவதை தள்ளி வைக்கலாம். இதனால், அரசு வேலை கனவுகளோடு, பல ஆண்டுகளாக படித்து வரும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். 'அரசு துறைகளில், 4.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, 80 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்காமல், காலி பணியிடங்களை நிரப்ப முயற்சிக்காமல், ஓய்வு வயதை உயர்த்தி இருப்பது சரியல்ல.

'மேலும், வேலைப்பளு காரணமாக, ஏற்கனவே ஏராளமான அரசு ஊழியர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உட்பட, பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் அரசின் இந்த உத்தரவால், சிரமங்களுக்கு ஆளாவர். ஏராளமானவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பறிபோகும்' என, அரசு ஊழியர்கள் சங்கங்கள் பல புகார் தெரிவித்துள்ளன. நலத் திட்டங்களுக்காக, குறிப்பாக, கடன் தள்ளுபடிக்காக பல ஆயிரம் கோடியை செலவிடும் அரசுக்கு, பணி ஓய்வு பெறுவோருக்கு, அவர்களுக்கான பலன்களை கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. இருப்பினும், அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அரசு ஊழியர்களில் சில பிரிவினரை திருப்திபடுத்தவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்டு உள்ளதாகவே, விமர்சனங்கள் எழுந்தன.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, முதலில், 55 ஆக இருந்தது. 1979ல், 58 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கும், அதே ஓய்வு வயது தான் இருந்தது. 1998ல் தான், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 60 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, தங்களின் ஓய்வு வயதையும், 60 ஆக உயர்த்த வேண்டும் என, தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், தற்போது, உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அரசின் இந்த உத்தரவால், மருத்துவ கல்வி இயக்குனரகம் பலனடைந்துள்ளதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மாநிலத்தில், கொரோனா பரவல் இன்னும் ஓயாத நிலையில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய, 1,400க்கும் மேற்பட்ட டாக்டர்கள், தங்களின் பணியை தொடர வேண்டி இருக்கும். அத்துடன், புதிதாக துவங்கப்படும் மருத்துவ கல்லுாரிகளுக்கு, சீனியர் டாக்டர்களின் சேவையும் கிடைக்கும் என, மருத்துவ கல்வி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அங்கும் பதவி உயர்வில் பாதிப்பு வரும் என்பது உண்மையே. மேலும், வேலை தேடும் அனைத்து இளைஞர்களுக்கும் அரசு பணி வழங்குவது என்பது நடக்காத காரியம். எனவே, அரசு வேலைக்காக முயற்சி செய்வோர், வேறு வேலைகளை தேட வேண்டியது நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில், அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயது அதிகரிப்பு என்பதற்கு பதிலாக, சுகாதாரத் துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு மட்டும், ஓய்வு வயதை அதிகரித்து இருக்கலாம். அனைத்து துறையினருக்கும் உயர்த்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

இதனால், அரசு பணியில் இருந்து, வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்க நினைப்போருக்கு, அதாவது, பெஞ்ச் தேய்க்கும் பேர்வழிகளுக்கு, இந்த முடிவு சாதகமாக அமையும் என, புகார் கூறப்படுகிறது. எனவே, சட்டசபை தேர்தலுக்கு பின், அமையும் புதிய அரசாவது, இந்த விஷயத்தில், பரவலாக ஒரு கருத்து கேட்பை நடத்தி, அதனடிப்படையில், மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement