dinamalar telegram
Advertisement

பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா மத்திய அரசு?

Share

பெட்ரோல், டீசல் விலை, சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, லிட்டர் பெட்ரோல் விலை, 92.59 ரூபாய்; டீசல் விலை, 85.98 ரூபாய். கடந்த, 12 நாட்களில் மட்டும், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2.63; டீசல் விலை லிட்டருக்கு, 3.08 ரூபாயும் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.


இந்நிலையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும், சம்பந்தம் இல்லை. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தான், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், உள்நாட்டின் விற்பனை விலையை நிர்ணயம் செய்கின்றன. 'மத்திய, மாநில அரசுகள் கலந்து ஆலோசித்தால், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்கலாம். அவற்றின் விலை குறைய வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும்' என, வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மற்ற பொருட்களை எல்லாம், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளதால், பெட்ரோலிய பொருட்களையும், அந்த வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. அதற்கு காரணம், பிரதான வரி வருவாய் பாதிக்கப்படும் என்பதே.



பெட்ரோல், டீசல் மீது, மத்திய அரசு கலால் வரியும், மாநில அரசுகள் வாட் வரியும், கூடுதல் வரியும் விதிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை, 2020 அக்டோபரில், பேரல் ஒன்றுக்கு, 40.7 டாலர்களாக இருந்தது; கடந்த பிப்ரவரி 16ல், பேரல் ஒன்றுக்கு, 62.64 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது, 54 சதவீத உயர்வாகும். கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி, விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தின. அதனால், அத்தியாவசிய பணிக்கான வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் ஓடாததால், பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்தது. உலக நாடுகள் பலவற்றிலும் அவற்றின் தேவை குறைந்ததால், 2020 ஏப்ரலில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.


ஆனால், கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசிகள் அறிமுகமான பின், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதாவது, பேரல், 40 டாலர் என்பதில் இருந்து, 63 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, கச்சா எண்ணெயை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தி அளவை குறைத்ததே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர காரணம். அதனால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது, பெட்ரோலின் அடிப்படை விலை, 31.82; டீசலின் அடிப்படை விலை, 33.46 ரூபாய். இதன்பின், மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு, 32.98; டீசல் மீது லிட்டருக்கு, 31.83 ரூபாய் அளவுக்கு கலால் வரி விதிக்கிறது.இதையடுத்து, டீலர் கமிஷன், 2.50 முதல், 4 ரூபாய் வரை போகிறது. அடுத்து, பெட்ரோலுக்கு, 15 சதவீதம் வாட் வரி மற்றும் 13.02 ரூபாய் கூடுதல் கட்டணமும், டீசலுக்கு, 11 சதவீதம் வாட் வரி அதனுடன், 9.62 ரூபாய் கூடுதல் கட்டணமும் தமிழக அரசு வசூலிக்கிறது.


இவை எல்லாம் சேர்ந்து தான், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலை விரைவில் லிட்டருக்கு, 100 ரூபாயை தொட்டு விடும் என்பதில், எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், இந்த விலை உயர்வு தொடர்ந்தால், சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு, அவை அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு, அந்த சுமை மக்கள் மீது சுமத்தப்படும். பல சேவைகளின் கட்டணமும் எகிறும். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க முன்வந்தால், விலை உயர்வு கட்டுக்குள் வரும். அதே நேரத்தில், ஜி.எஸ்.டி., அறிமுகமான பின், மாநில அரசுகளின் பிற வரி வருவாய்கள் குறைந்துள்ளதால், அவை பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கும், வாட் வரியை குறைக்குமா என்பது சந்தேகமே. எனவே, மத்திய அரசு தான், இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். எடுத்தால், பெட்ரோலிய பொருட்கள் விலை லிட்டர், 100 ரூபாயை எட்டாமல் தடுக்க முடியும்.

கடந்த ஆறு ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் வாயிலாக மட்டும், மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டிஉள்ளதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த விஷயத்தில், குறிப்பாக, விலை குறைப்பு விஷயத்தில், மத்திய அரசு நல்ல முடிவு எடுத்தால், அது, மோடி அரசு மீது மக்களுக்கு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். அதை விரைவில், மத்திய அரசு செய்யும் என, நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement