dinamalar telegram
Advertisement

கடன் தள்ளுபடி அறிவிப்பால் தி.மு.க., வெற்றிக்கு 'செக்'

Share

'ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., தலைமையிலான அரசு பதவியேற்றால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; மாணவர்கள் வாங்கிய கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட வாரியாக நடத்தி வரும், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சியிலும், மக்கள் கிராம சபை கூட்டத்திலும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வந்தார்.

இந்நிலையில், சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது, 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் இ.பி.எஸ்., 'கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய, 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பலன் அடைவர்' என, தெரிவித்துள்ளார். மக்களை கவரும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை முறியடிக்கும் வகையில், இவ்வாறு செய்துள்ளார்.

தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால், லட்சக்கணக்கான விவசாயிகள் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு எதிரான வழக்குகள், சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2017ல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டத்தின் போது, தொடரப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தற்போது, விவசாய கடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக அரசு, ௧௦ ஆண்டுகளில், 1.06 கோடி விவசாயிகளுக்கு, 60 ஆயிரம் கோடிக்கு மேல் பயிர்க்கடன் வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜனவரி, 31ம் தேதி வரை மட்டும், 11 லட்சம் விவசாயி களுக்கு, 9,173 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளது. இதுதவிர, புயல் மற்றும் வறட்சி நிவாரணமாக, 10 ஆண்டுகளில், 1.4 கோடி விவசாயிகளுக்கு, 20 ஆயிரத்து, 281 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த, 2016ல், ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்றதும், அந்த ஆண்டு மார்ச், 31 வரை நிலுவையில் இருந்த, 5,319 கோடி ரூபாய் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனால், 12.02 லட்சம் விவசாயிகள் பலன் பெற்றனர். இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில், புதிய தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் முதுகெலும்பாக உள்ளது விவசாயம். விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படிப்பட்ட விவசாயமும், அதைச் சார்ந்து உள்ள விவசாயிகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகளே. அதனால், பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகும் விவசாயிகள், தற்கொலை செய்து கொள்வது போன்ற கொடூரங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

எனவே தான், இத்தகைய தள்ளுபடி சலுகைகள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், இந்த கடன் தள்ளுபடி சலுகைகளால், பெரு விவசாயிகள் மட்டும், பலன் அடைவது தவிர்க்கப்பட வேண்டும். சிறு விவசாயிகள் அதிக அளவில் பலன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஏற்கனவே ஏராளமான சிறு விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளிலும், இதர வங்கிகளிலும் கடன் பெற முடியாமல், வட்டி தொழில் செய்வோரிடம், கடன் வாங்கி சிக்கலுக்கு ஆளாகும் நிலைமை, இன்றும் பல பகுதிகளில் தொடர்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும். அவர்களும் எளிதாக பயிர் கடன் பெறும் வகையில், விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற சலுகை அறிவிப்புகளால், விவசாய கடன் பெற்றவர்கள், அது எப்படியும் தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில், அதை செலுத்தாமல் காலம் தாழ்த்துவது அதிகரிக்கும்.

எனவே, இதுபோன்ற கவர்ச்சி அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. இதனால், மாநிலத்தின் நிதி நிலைமை, கூட்டுறவு வங்கிகளில் நிதி நிலைமை மோசமாகும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையில், தி.மு.க., குறிப்பிடவிருந்த, இந்த பயிர்க்கடன் தள்ளுபடியை, முதல்வர் முன்னதாகவே அறிவித்து விட்டதால், அந்தக் கட்சியின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், தேர்தல் நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், அது நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகமும், சில தரப்பில் எழுந்துள்ளது. அதை தீர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எது எப்படியோ, ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் வாயிலாகவே, சட்டசபை தேர்தலில், தி.மு.க., எளிதாக வெற்றி பெற முடியாத அளவுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., 'செக்' வைத்துள்ளார் என்பது மட்டும் உறுதி!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement