dinamalar telegram
Advertisement

பொருளாதாரம் வளர்ச்சி பெற சவால்களை சந்திப்பது அவசியம்

Share

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் குறுகிய காலமே நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவே இல்லை. இந்த நிலையில், ஜனாதிபதி உரையுடன் கடந்த வெள்ளியன்று துவங்கிய, பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில், 2020 - 21ம் ஆண்டிக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.


முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்து கொடுத்த அறிக்கையை தான் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார நிலவரங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளதுடன், வரும் நிதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் கடைசியில், நாடு முழுதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதில் இருந்தும், 37 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவதில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் ஊரடங்கு, ஏராளமானவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளது. சமூக கட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளையும் பெருமளவு அதிகரித்துள்ளது. உடனடியாக தீர்க்க முடியாத, பல ரணங்களை, ஏராளமானவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

ஊரடங்கால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கடுமையாக சரிந்ததாலும், இரண்டாவது காலாண்டில் சற்று மீண்டுள்ளது. அதே நேரத்தில், முந்தைய ஆண்டுகளின் நிலவரத்தை விட, வரும், 2021 -22ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ௧௧ சதவீதமாக இருக்கும் என, ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளது. அப்படி ஒரு வளர்ச்சியை நாடு கண்டால், அது பெரும் சாதனையாக இருக்கும்.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறையின் அளவு, 3.5 சதவீதத்தை தாண்டி உயரும். மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களால், நாட்டின் மொத்த விவசாயிகளில், 85 சதவீதமாக உள்ள, சிறு, குறு விவசாயிகள் நன்மை பெறுவர். மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாக, வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில், முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வருவாய் இழப்பை சரி செய்ய, நுகர்வு மற்றும் தேவையை அதிகரிக்கும் வகையில், கடன்கள் வழங்குவதில் தாராளம் காட்ட வேண்டும். பொதுச் செலவுகளை, குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மூலதன செலவுகளை அரசு அதிகரிக்க வேண்டும் என்று, ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதும் சரியானதே.

பொது சுகாதாரத்துறையில் குறைபாடுகள் உள்ளன. அதன் உள்கட்டமைப்பு வசதிகளை, பெருமளவு அதிகரிக்க வேண்டும் என்பதை, கொரோனா தொற்று பரவல் காலத்தில், மத்திய, மாநில அரசுகள் உணர்ந்துள்ளன. எனவே, அந்த துறையில், அதிக அளவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், அதிக அளவில் கடன் வழங்கி, வாராக்கடன்கள் எண்ணிக்கை உயர்வது தவிர்க்கப்பட வேண்டும்.

இல்லையெனில், மூலதன செலவுகளை மேற்கொள்ள முடியாமல், மந்த நிலைமை உருவாகி விடும். மேலும், 11சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது, அன்னிய முதலீடுகள் பெருமளவில் வருவதை பொறுத்தே அமையும். அவற்றை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும்.

மேலும், கல்வி, சமூக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும். 'கடந்த, 2004 முதல், 2009 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம், 8 சதவீதமாக இருந்தது. உள்கட்டமைப்பு துறைக்கு, குறிப்பாக, கட்டுமான துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததால், அந்த வளர்ச்சி வீதத்தை காண முடிந்தது. எனவே, நிதிப் பற்றாக்குறை, பணவீக்கத்தை பற்றி கவலைப்படாமல், பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

'அப்போது தான், நல்ல பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்; வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும்' என, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ள யோசனை ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அவர் தெரிவித்துள்ள யோசனைகள், பரிந்துரைகள் அடிப்படையில், இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பொருளதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல அறிவிப்புகள் வெளியாகலாம்.பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்க வேண்டும் எனில், பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு எதிர்கொள்ளத்தான் வேண்டும். கடன் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும். இந்த குறுகிய கால சிரமங்களை தாங்கினால் தான், நீண்ட காலத்தில் நல்ல பலன் பெற முடியும். அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என, நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement