துாங்கும்போது வருவதல்ல கனவு; உங்களை துாங்க விடாமல் செய்வது தான் கனவு என்றார் கலாம். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, இந்த முதல்வர் கனவுதான் துாங்க விடாமல் ஏங்க
வைத்துக் கொண்டிருக்கிறது.
அவருடைய பேச்சிலும், செயலிலும் அது நன்றாகவே வெளிப்படுகிறது. நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம்; சொல்வதைத்தான் செய்வோம் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தவர் கருணாநிதி. ஸ்டாலின் சொல்வதையும் செய்வதில்லை; அவர் செய்யும் தவறைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதில்லை.கடந்த, 2019ம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் ஒன்றல்ல; இரண்டல்ல, 100 அம்ச திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
'நீட்' தேர்வு ரத்து, சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணம், சிலிண்டர் விலை குறைப்பு.
பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயிக்கும் முறையில் மாற்றம் என்று அவர் தந்த வாக்குறுதிகள் எல்லாம், எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் எந்தக் காலத்திலும் செய்ய முடியாதவை.
அந்தர்பல்டி
தி.மு.க., மாநிலக் கட்சி என்பதை அவர் வசதியாக மறந்து விட்டிருக்கலாம்; ஆனால், தேசிய அளவிலான கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தேசியக் கட்சியால் கூட தர முடியாத, 'வேற லெவல்' வாக்குறுதிகள்தான் அவர் கொடுத்தவை.எப்படியும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதேயில்லை; அதனால், நாம் சொல்லும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தேவையே இருக்காது என்பதை, தன் கட்சியின் தேர்தல் அறிக்கை மூலமாக ஆரூடமாக முதலில் வெளிப்படுத்திய பெருமை ஸ்டாலினையே சேரும்.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை நீதிமன்றத் தீர்ப்புகளே உறுதிப்படுத்தி விட்ட நிலையில், அதையும் ஒரு வாக்குறுதியாகத் தரும் தைரியம், ஸ்டாலினுக்கே மட்டும் இருக்கிறது. வேண்டாத மருமகள் கால் பட்டாலும் குத்தம், கைபட்டாலும் குத்தம் என்பதைப் போல, மத்திய அரசு எது செய்தாலும் ஸ்டாலினுக்கு குற்றமாகவே தெரிகிறது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ வாபஸ் வாங்கியதில், காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளே வெறும் கண்டனம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டபோது, அதை எதிர்த்து இந்தியாவில் போராடிய மாநிலக்கட்சி தி.மு.க., மட்டும் தான். பாகிஸ்தான் ரேடியோவிலேயே அதைச் சொல்லிப் பாராட்டிய கொடுமையெல்லாம் அப்போது நிகழ்ந்தது.
டில்லி போராட்டத்தில் கலந்து கொள்வதாகச் சொன்ன ஸ்டாலின், அதில் பங்கேற்கவில்லை. திடீரென்று, 'நாங்கள் 370 சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்க்கவில்லை; அதை நீக்கிய விதத்தை எதிர்த்து தான் போராடுகிறோம்' என்று அந்தர்பல்டி அடித்தார்.ஸ்டாலினுக்கு அரசியல் தெளிவில்லை, தேசிய நலன் குறித்த தொலைநோக்கு இல்லை என்பதை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு அதுதான். அதற்குப் பின் தன்னுடைய அறிக்கைகளாலும், முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களாலும் அதை அவ்வப்போது நிரூபிக்கிறார்.
அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது தான் எதிர்க்கட்சியின் கடமை என்று நினைக்கிறார் ஸ்டாலின். மத்திய, மாநில அரசுகளை அவர் எதிர்ப்பது இப்படித்தான். கொரோனா ஊரடங்கின்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு, 1,000 ரூபாய் கொடுத்தால்,5,000 ரூபாய் கொடுக்கச் சொல்வார். கொரோனா காலத்தில் அரசு விழா அவசியமா என்று கேட்பார். அவரே பெரும்கூட்டத்தைக் கூட்டி கிராமசபையை நடத்துவார். அதிலும் யாராவது கேள்வி கேட்டால், 'ஆளும்கட்சி அனுப்பிய ஆளா....வெளியே போங்க!' என்கிறார்.
தமிழக அரசு எது செய்தாலும் அதை எதிர்க்கும் ஸ்டாலின், சமீபத்தில் ஒரே ஒரு விஷயத்தில் அமைதிகாத்தார்... அது எதற்குத் தெரியுமா? தியேட்டர்களில், 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தமிழக அரசு அபத்தமானஉத்தரவைப் பிறப்பித்தபோது.கொரோனா எளிதில் பரவிவிடும் என்பதைக் கூட சிறிதும் உணராமல், நடிகர்கள் விஜயும், சிம்புவும் கேட்டனர் என்று அந்தக் கோரிக்கையை ஏற்று, விஜய் ரசிகர்களை நன்றி கூற வைத்தார், முதல்வர் இ.பி.எஸ்., அது ஓர் அவசியமே இல்லாத அரசியல் நகர்வு.
நம்பிக்கை தொலைந்துவிட்டது
உண்மையிலேயே மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருந்தால், அந்த உத்தரவை அவர் உடனே எதிர்த்திருக்க வேண்டும்; ஆனால், வாயே திறக்கவில்லை.ரஜினியின் அறிக்கை குறித்தும் அவர் எதுவுமே சொல்லவில்லை...காரணம், ரஜினி, விஜய், சிம்பு ரசிகர்களைப் பகைத்துக் கொண்டால், தேர்தலில் அவர்களின் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும். முதல்வர் கனவு நிறைவேறாது என்பது தான்.
லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்து, வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று ஸ்டாலின் கணக்குப் போடுகிறார்.ஒரு நாளுக்கு ஓராயிரம் முறை, 'அடுத்தது தி.மு.க., ஆட்சி தான்' என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். மக்களின் நம்பிக்கையையும், ஓட்டுகளையும் ஸ்டாலின் பெறுவது இருக்கட்டும்; முதலில் அவருடைய கட்சிக்காரர்களிடம் அந்த நம்பிக்கையை அவர் விதைப்பது நல்லது.
சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்டு அவர் வெளியே ஓடிவந்த நாளன்றே, தி.மு.க., தொண்டர்களிடம் அவர் மீதான நம்பிக்கை தொலைந்துவிட்டது.கருணாநிதியாக இருந்திருந்தால், ஓ.பி.எஸ்., அணிக்கு ஆதரவு அளித்து எப்படியாவது ஆட்சியைக் கவிழ்த்திருப்பார் என்று இன்றைக்கு வரைக்கும் உறுமிக்கொண்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
ஸ்டாலினுக்கு அரசியல் தெளிவு, தலைமைப்பண்பு மட்டும் இல்லையென்று சொல்வதற்கில்லை. அவரின் உண்மை உடன்பிறப்புடனே ஒத்துப்போகிற சகிப்புத்தன்மையும் அவருக்கு இல்லை; மெஜாரிட்டியை இழந்த ஓர் அரசைக் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றுகிற அரசியல் சாதுர்யமும் இல்லை; என்னுடைய கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று மார்தட்டும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கடிவாளம் போடும் துணிச்சலும் அவரிடமில்லை. அவரிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான்... முதல்வராகும் கனவு!.
பிரசாந்த் கிஷோரின் வியூகத்தில் அவர் ஆட்சியைப் பிடித்து விட்டாலும் அவரால், கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்பாடாக வைத்திருக்க முடியுமா, ஊழலற்ற ஓர் ஆட்சியைத் தர முடியுமா, சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்காத அளவுக்கு அமைதியாக ஆட்சி நடத்த முடியுமா என்று மக்களிடம் அச்சமிருக்கிறது. அவர் முதல்வராவது அத்தனை எளிதான காரியமாகத் தெரியவில்லை.மு.க.ஸ்டாலின் என்பதற்கு முத்துவேலர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் என்பதுதான் இதுவரை எல்லோருக்கும் தெரிந்த அர்த்தமாக இருந்தது. இப்போது அது புதிய விளக்கத்தைப் பெற்றிருக்கிறது. அதுதான்...முதல்வர் கனவு ஸ்டாலின்!
- கோவை செல்வா
குனிந்து . பணிந்து .தவழ்ந்து ..படுத்து ..ஊர்ந்து சசிகலா காலில் முத்தமிட்ட எடப்பாடியை முதல்வராக்கலாமோ ? தன் மானமில்லாதவர்கள் தங்களின் கருத்துக்கள் மூலம் அவர்களை வெளிப்படுத்திறார்கள் என்பது தெளிவு .. நாளை நமதே நாற்பதும் நமதே என்று ஊளையிட்டது ஓரு கூட்டம் பின்னர் வழிமொழிந்தோர் அறிவிலிகள் ..ஆனால் அனைத்தையும் முறியடித்தது யார் ? ஆக எவ்வளவு தான் அடிகொண்டாலும் அதையும் வெட்டி வெற்றி என்று கூறும் கூட்டத்தில் மற்றோர் நுழைவது மடைமையன்றோ