பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. தி.மு.க., தலைவர் தேர்தல் நடக்கிறது. வழக்கமாக நடக்கும் காட்சி தான். தலைவர் பதவிக்கு, கருணாநிதி தவிர, வேறு யாரும் மனு போட மாட்டார்கள். அதுவும் கூட, அவர் பணம் கட்டி, மனு செய்வது இல்லை. கட்சி முன்னணியினர் போட்டி போட்டு, பணம் கட்டி, அவருக்காக மனு செய்து விடுவர்.
ஒரு தேதியை குறிப்பிட்டு, 'அறிவாலயத்தில் பொதுக்குழு கூடி தலைவரை தேர்வு செய்யும்' என அறிவிப்பர். அந்த நாளில், அனைவரும் சங்கமிப்பர். மேடையில் தலைவர், பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். கருணாநிதியை அங்கு அமர அழைத்தால், போக மாட்டார்.
அவையடக்கம்
'முறைப்படி தேர்தலை நடத்துங்க. தலைவரானதும் வருகிறேன்' என, 'அவையடக்கத்துடன்' கூறி, கீழே பொதுக்குழு உறுப்பினர்களில், பத்தோடு, பதினொன்றாக, முன்வரிசையில் அமர்ந்து கொள்வார். தேர்தல் அதிகாரியும், - அன்று ஒரு நாள் மட்டும் தான் அவருக்கு மரியாதை - 'தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு அளிக்காததால், கலைஞர் ஏகமனதாக தேர்வு செய்யப்படுகிறார்' என, அறிவிப்பார்.
பல நுாறு பேர் போட்டியிட்டு, அதில் தங்கள் தலைவன் மட்டும் ஜெயித்தது போல, கட்சியினர் எழுப்பும் கரகோஷத்தில், அண்ணா சாலையே அதிரும்.அதன்பின், கருணாநிதி பந்தாவாக மேடைக்கு வந்து, தலைவர் இருக்கையில் அமர்வார்.
நிறைவாக அவர் பேசுகையில், 'உட்கட்சி ஜனநாயகத்தை கட்டிக் காப்பதிலும், உயர்த்தி பிடிப்பதிலும், நாட்டிலேயே தி.மு.க.,வுக்கு நிகரான கட்சி வேறு கிடையாது' என, புளகாங்கிதம் அடைவார்.கட்சியினரும் கசிந்துருகி, 'கலைஞர் வாழ்க' என தொண்டை நரம்பு புடைக்க கோஷமிட்டு, மதியம் அங்கு தரப்படும் சைவ சாப்பாட்டை சாப்பிட்டு, கலைந்து செல்வர். 'தலைவர்னா தலைவர் தான் பா... உட்கட்சி ஜனநாயகம் பத்தி என்ன அருமையா பேசினார்' என, புல்லரித்தபடியே ஊருக்கு பஸ் பிடிப்பர்.
நடப்பு அரசியலுக்கு வருவோம்!
சென்ற வாரம், மதுரையில், தன் ஆதரவாளர்களை திரட்டிய கருணாநிதியின் மூத்த மகன், மு.க.அழகிரி, ஸ்டாலினுக்கு எதிராக பல சரவெடிகளை கொளுத்தி போட்டார்.ஸ்டாலின் மீது குறை சொல்கிறேன் பேர்வழி என்று, தி.மு.க.,வில் காலம் காலமாக நடந்து வந்த உட்கட்சி ஜனநாயகம் என்ற கருப்பு காமெடியின் - அதாங்க, பிளாக் ஹியூமர் - பின்னணியை கிழித்து, தோரணம் கட்டி தொங்கவிட்டு விட்டார்.
அதாவது, திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசாக, தனக்கு கட்சியில் தென்மண்டல அமைப்பு செயலர் பதவியை கருணாநிதி தந்து விட்டதில், ஸ்டாலினுக்கு பொறாமை.அதனால், தன் வீட்டுக்கு அமைச்சர்கள் பட்டாளத்துடன் வந்த ஸ்டாலின், தனக்கு பொருளாளர் பதவி வேண்டும் என கேட்டதாகவும், உடனே, தான் தந்தைக்கு போன் செய்து பேச, அன்று மாலையே ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி அறிவிப்பு வெளியானது எனவும் அழகிரி, திருவாய் திறந்தருளினார்.இது ஏதோ, 'அப்பா, நம்ம கோபாலபுரம் வீட்டை, தம்பி கேட்கிறான்.
அவனுக்கே குடுத்துடு. எனக்கு ஆட்சேபனை இல்லை' என சொல்வது போல இருக்கிறதா!கருணாநிதியிடம், கட்சியில் ஸ்டாலினுக்கு பதவி தருவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினால், 'தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. மேலும், நான் தி.மு.க., தான்; ஆனால், நான் மட்டுமே தி.மு.க., கிடையாது. எங்கள் கட்சிக்கு பொழுக்குழு, செயற்குழு, உயர்மட்ட குழு எல்லாம் உள்ளது. அதில் விவாதித்து தான், முடிவு செய்வோம்' என, அமர்த்தலாக பதில் தருவார்.
ஆனால், ஜஸ்ட் ஒரு போன் காலில், அழகிரி, தன் அருமை தம்பிக்கு, கட்சியில் பொருளாளர் பதவியை பெற்று தந்துள்ளார். உட்கட்சி ஜனநாயகமாவது, வெங்காயமாவது!அது சரி... கட்சியில் பொதுக்குழு, செயற்குழு எல்லாம் வெறும், 'செட் பிராப்பர்ட்டி'கள் மட்டுமே. அதாவது, தேர்தல் கமிஷனை ஏமாற்ற போடப்படும் நாடகமே. எங்கள் குடும்பத்தினருக்கு பதவி தேவைப்பட்டால், நாங்களே கூடி பேசி எடுத்து கொள்வோம். யாரும் வாயை திறக்க முடியாது; கூடாது.
காலம் காலமாக கருணாநிதி நிழல் போலவே வலம் வந்த அன்பழகனிடம், ஒப்புக்கு சப்பாணியாக கூட கருணாநிதி கலந்தாலோசிக்கவில்லை.
உட்கட்சி ஜனநாயகம், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகிய மூவர் கால்களில் உதைபடும் பந்தாகவே இருந்துள்ளது.அடுத்து, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தந்த கதையையும் அழகிரி அருமையாக விவரித்தார். அழகிரியை தனியே அழைத்து கருணாநிதி சம்மதம் கேட்டு, அவர், 'ஓகே' என்றதும் தான், துணை முதல்வர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளார்.
கட்சி பதவியாவது போகட்டும். துணை முதல்வர் என்பது, அரசு பதவி. அமைச்சரவையில் விவாதிக்காமல், தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை கலந்து பேசாமல், தன்னிச்சையாகவே முடிவு செய்யப்பட்டுள்ளது.அப்போதும் கூட, ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்களை ஆட்சி செய்யும் முதல்வரான கருணாநிதி சிந்திக்கவில்லை. தன் இளைய மகனுக்கு பதவி தந்தால், மூத்த மகன் கோபித்து கொள்வானோ என்ற பதைபதைப்பில், ஒரு பாசமிக்க தந்தையாக பக்குவத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்.
இதன் வாயிலாக, அரசு நிர்வாகம் எல்லாம், எங்கள் குடும்ப நலனுக்காகவே செயல்பட்டது என்ற உண்மையையும், அழகிரி உரித்து காட்டியுள்ளார்.அதேபோல, அழகிரி உதிர்த்த மற்றொரு நன்முத்து, 'எத்தனை பேரை அமைச்சர்களாக்கினேன் தெரியுமா? எல்லாரும் கருணாநிதியால் கோடீஸ்வரர்களாகி விட்டனர். என்னை மறந்து விட்டனர்' என, மனம் வெதும்பி தள்ளினார்.
இதில், இரண்டு உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. தி.மு.க.,வில் உழைத்தவனுக்கு பதவி கிட்டாது என்பதும், தலைவர், வாரிசுகளுக்கு காவடி துாக்கியவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளதும், அப்படி பதவி பெற்றவர்கள், அதை வைத்து, கோடி கோடியாக சம்பாதித்தனர் என்பதும் தெளிவாகிறது.இதன்மூலம், தி.மு.க., ஊழல் ஆட்சி நடத்தியதையும், அழகிரி உள்ளங்கை நெல்லிக்கனியாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இனி எதிர்கால அரசியலுக்கு செல்வோம்!
தப்பித் தவறி, தேர்தலில் தி.மு.க., ஜெயித்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். அன்று கருணாநிதி இருந்த இடத்தில் இன்று ஸ்டாலின்; ஸ்டாலின் இடத்தில், அவரது மகன் உதயநிதி இருப்பார்.தற்போதே, உதயநிதி சிபாரிசு இருந்தால் தான், கட்சியில் பதவி என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. இனி, உதயநிதி கைகாட்டுபவருக்கே அமைச்சர் பதவிகள் வழங்கப்படும். அவருக்கு பிடித்த அதிகாரிகளையே, அந்தஸ்தான இடத்தில் நியமிப்பர்.
நல்லவேளை, ஸ்டாலினுக்கு போட்டியாக அழகிரி இருந்தது போல, உதயநிதிக்கு போட்டியாக, யாரும் இல்லை. அந்த வகையில், கருணாநிதிக்கு இருந்த தொல்லை, ஸ்டாலினுக்கு இல்லை.ஸ்டாலின் மட்டும் முடிவு எடுத்தால், செயற்குழு, உதயநிதியுடன் சேர்ந்து எடுத்தால், பொதுக்குழு என, கதையை முடித்து விடலாம்.இவர்களை ஆட்சியில் அமர வைக்க, அடி, உதை பட்டு, கொடி கட்டி, வெயில், மழையில் வாடும் தொண்டன் கதி? ஹலோ... யாரு அது... கேக்கக் கூடாத கேள்வியெல்லாம் கேக்குறது? துாக்கி அப்பால போடுங்கப்பா!
- ஜேயெஸ், சென்னை.
மதியம் அங்கு தரப்படும் சைவ சாப்பாட்டை சாப்பிட்டு, கலைந்து செல்வர்....இப்ப தெரியுது, இவனுங்க பிரியாணிக்கு எதுக்கு பாக்ஸிங் பண்றங்கனு...