சென்னை முகப்பேரில் உள்ளது அம்பத்துார் அரசு தொடக்கப்பள்ளி.
இந்தப் பள்ளி வளாகத்தினுள் பசுமை மாறாமல் ஒரு புளிய மரம் அகன்று விரிந்து பரந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இந்தப் பள்ளிக்கே புளியமரத்துப் பள்ளி என்றும் ஒரு பெயர் உண்டு ஒரு காலத்தில் இந்த புளிய மரத்தின் கீழ்தான் பள்ளி இயங்கியதாகவும் சொல்வர் காரணம் மரத்திற்கு வயது 95.
இந்த மரத்தின் கீழ்தான் பள்ளிக் குழந்தைகளின் விளையாட்டு மைதானம் உள்ளது. குழந்தைகள் குதுாகலமாக விளையாடுவதைப் பார்த்து மரத்திற்கு நிறையவே சந்தோஷம் மரத்தின் கீழ் விளயைாடுவதை நினைத்து குழந்தைகளுக்கு சந்தோஷம்.
இந்த மரத்தின் கீழ் ஒரு நல்ல நிகழ்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் இங்கு படிக்கும் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு பொங்கலுக்காக புத்தாடை எடுத்துக் கொடுத்து அவர்களுடன் கரும்பும் இனிப்பும் சாப்பிட்டு கொண்டாடினர்.
இந்த சிறப்பு நிகழ்வில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கியதுடன் அவர்களுடன் விளயைாடியும் மகிழ்ந்தார்.
பள்ளிக்குழந்தைகள் யாழிசை,மகேஷ்வரி ஆகியோர் அருமையாக கவிதை பாடி மகிழ்வித்தனர்.
இது போல அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தாடை கொடுத்து மகிழ்வது அமைப்பிற்கு இது ஒன்பதாவது வருடமாகும்.
அமைப்பின் உறுப்பினர் சம்பத்,பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் முன்னெடுத்த இந்த விழாவில் பிரஸ் கிளப் செயலாளர் பாரதி,புகைப்படக்கலைஞர்கள் அமைப்பின் தலைவர் ராஜூ,செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏாராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளித்தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததுடன் விருந்தினர்களுக்கு புத்தகம் வழங்கியும் மகிழ்வித்தார்.
இத்தனை நிகழ்வையும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தது அந்த புளிய மரம்.
-எல்.முருகராஜ்
95 வயது புளியமரத்தடியில் ஒரு பொங்கல் விழா
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!