dinamalar telegram
Advertisement

உருமாறிய கொரோனா வைரஸ் உஷாராக இருப்பது அவசியம்

Share

கொரோனா வைரஸ் பரவலுக்கு, நேற்று வரை, 8 கோடியே, 7 லட்சத்து, ௧௫ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 17 லட்சத்து, 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் சமீபத்தில், புதுவிதமான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, அந்நாட்டு அரசை மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இதனால், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, இந்தியாவில் பரவலாம் என்ற பீதி கிளம்பியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரிட்டன் நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில நாட்களாக, பிரிட்டன் நாட்டிலிருந்து நேரடியாகவும், மற்ற நாடுகள் வழியாகவும் வந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்துவதும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியையும், மத்திய - மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.


இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில், உருமாறிய கொரோனா வைரஸ், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த யாரையும் பாதித்திருப்பதாக தெரியவில்லை. இது, சற்றே நிம்மதி அளித்தாலும், முன்னர் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில், அஜாக்கிரதையாக இருந்ததை போல, இம்முறை இருந்தால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். அதேநேரத்தில், புதுவித கொரோனா வைரஸ் பரவல், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில், எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது, ஆறுதலான செய்தி.


ஆனால், தடுப்பு மருந்துகள், எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. அதற்கான தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த பல ஆண்டுகளின் நிலவரங்களைப் பார்த்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில், சில விதமான வைரஸ் பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி இருப்பதும், பின், அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதும் நடந்துள்ளது.டெங்கு, பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் பாதிப்பு இன்னும் கூட, நம் நாட்டில் தொடர்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில காலக்கட்டங்களில், இந்த நோய்கள் மக்களை தாக்குவதும், பின் அவை கட்டுக்குள் வருவதும் வழக்கமாகி விட்டது.அவற்றால் பெரிய அளவில், பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படவில்லை.


ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால், சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதோடு, ஏராளமான உயிர் பலிகளும், பொருளாதார இழப்புகளும் நேரிட்டன. உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதால் தான், பிரிட்டன் அரசு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததோடு, பல பகுதிகளில் ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.இதையே, இந்திய அரசு ஓர் எச்சரிக்கையாக எடுத்து, பிரிட்டன் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். பிரிட்டனில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாகவோ, வேறு நாடுகள் வழியாகவோ வரும் பயணியரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வழியாக உருமாறிய வைரஸ் எந்த விதத்திலும், நம் நாட்டில் பரவி, மீண்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது.


அத்துடன், புதிய வைரசை அழிக்கும் வகையிலான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அந்த வைரஸ் பாதிப்பை விரைவில் கண்டறிவதற்கான, கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால், தனிமனித பொருளாதாரம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் பெருமளவு பாதித்தது. அதிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இனியும் ஊரடங்கு பிறப்பிக்கக்கூடிய சூழ்நிலையை மக்களும் ஏற்படுத்தி விடக்கூடாது.


முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என, இன்னும் பல நாட்களுக்கு சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, ஒவ்வொருவரும் குடும்பத்தினரை மட்டுமின்றி, மற்றவர்களை காக்க முடியும்.


லண்டன் இம்பீரியல் கல்லுாரியின் தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் நீல் பெர்குசன் கூறுகையில், ''கொரோனா வைரசை விட, உருமாறிய வைரசால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நவம்பர் மாதத்தில், பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், குழந்தைகள் வெளியில் செல்வது அதிகரித்து, தொற்று பரவலின் வேகம் அதிகரித்திருக்கலாம். எனவே, உருமாறிய வைரஸ் விஷயத்தில், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய வைரஸ் பரவலைக் காட்டிலும், உருமாறிய கொரோனா வைரஸ், 50 முதல், 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்றும், நோய் தாக்குதலின் அறிகுறிகளும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுவதால், அனைவரும் உஷாராக இருப்பதே நல்லது. நோய் வந்த பின் தடுப்பதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement