கடந்த, 11ம் தேதி நடந்த, பாரதி யாரின் பிறந்த நாளை ஒட்டி, வானவில் பண்பாட்டு மையம், உலகளாவிய பாரதி திருவிழாவை நடத்தியது.
அதில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''சுப்பிரமணிய பாரதி, 'கவிஞர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் என, பல பரிமாணங்களை கொண்டவர். அவர், வாரணாசியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். நான், அந்த தொகுதியின் பிரதிநிதியாக இருக்கிறேன். பயம் என்றால் பாரதிக்கு என்னவென்றே தெரியாது. அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பதில்லையே,'' என, பாடினார்.
இந்த பேச்சு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'மோடி, வரும் சட்டசபை தேர்தலுக்காக, 'அரசியல்' செய்வதற்காக, மகாகவி பாரதியை புகழ்ந்து பேசுகிறார்' என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால், மோடி தமிழில் பேசுவது புதிதல்ல. குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த காலகட்டங்களில் கூட, தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும் அவருக்கு பற்று இருந்துள்ளது. குஜராத்தில், அவரது தனி ஆலோசகராக இருந்த, கைலாசநாத், ஊட்டியில் படித்து, ஐ.ஏ.எஸ்., முடித்து, குஜராத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.
பெருமை
அப்போதே,தமிழகத்தில் பல பத்திரிகை ஆசிரியர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்துள்ளனர்.அதில், துக்ளக் ஆசிரியர் 'சோ' மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினி ஆகியோரும் சிறந்த நண்பர்களாக இருந்துள்ளனர். 2014ல் அவர் பிரதமரான பின், அவர் பங்கேற்ற பல நிகழ்ச்சியில், தமிழ்மொழியின் சிறப்புகளை பற்றியும், தமிழ் அறிஞர்களின் சிறந்த ஞானம் பற்றியும் பேசி பெருமை கொண்டுள்ளார்.
* கடந்த, 2018 பிப்., மாதம் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில், 'அன்புமிக்க, சகோதர, சகோதரிகளே வணக்கம்; தமிழ்மொழி, அதன் பாரம்பரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாரதி மண்ணின் மக்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். சமஸ்கிருதத்தை விட, தமிழுக்கு தொன்மை உள்ளது; அதை அனைவரும் கற்க வேண்டும்' என்றார்.
1893 செப்., 11ல் அமெரிக்கா சிக்காகோவில் நடந்த, உலக சமய மாநாட்டில், இந்தியராக விவேகானந்தர் பேசிய,' சகோதர, சகோதரிகளே' என்ற உரைக்கு பின், தற்போது, மோடி பேசிய உரை, அமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்தது.
அதே ஆண்டு, மாமல்லபுரத்தில், தமிழர் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை, தோளில் துண்டுடன், சீன அதிபர், ஜீ ஜிங் பிங்குடன் கடற்கரை கோவிலில் வலம் வந்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.
பறைசாற்றினார்.
ஆக., 15 சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசுகையில், 'நீல குறிஞ்சியின் சிறப்பு பற்றி பேசி, இந்த விழா காலத்தில், நீலகிரியில், 12 ஆண்டுக்கு ஒரு முறை மலரும், நீல குறிஞ்சி பூத்துள்ளது பெருமையாகும்' என்றார். கடந்த, 2019 செப்., மாதம், ஐ.நா.,வில் உரையாற்றியபோது, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற, கனியன் பூங்குன்றனாரின் வரிகளை கூறி, தமிழின் பெருமையை உலகறிய பறைசாற்றினார்.
* அதே ஆண்டு, ஆக., 15ல் டில்லியில் நிகழ்த்திய உரையில், 'நீரின்றி அமையாது உலகு' என்ற திருவள்ளுவரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.
* அக்., 10ல், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த, 56வது பட்டமளிப்பு விழாவில் மோடி பேசுகையில், 'உலகின் தொன்மையான மொழி தமிழ். நான் அமெரிக்காவில் பேசிய வார்த்தைகள், இன்னமும் அமெரிக்காவில் எதிரொலித்து கொண்டு உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழி தமிழ். தமிழகத்தின், இட்லி, தோசை, வடை, சாம்பார் ஆகியவை தனித்துவமான உணவாக இருக்கும்' என்றார்.
இது போன்று, தமிழ், தமிழ் அறிஞர்கள், இலக்கியங்களை பற்றிய பெருமையை, ஒரு முதல்வராக; ஒரு பிரதமராக இருந்த, வேறு மாநில தலைவர் யாரும் உரக்க சொன்னதில்லை.
கடந்த, 50 ஆண்டு காலத்தில், தேர்தல் காலங்களில் மட்டும், தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரும், தேசிய கட்சிகளின் தலைவர்கள், தமிழில், 'நன்றி, வணக்கம்' என்ற இரண்டு வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு சென்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
உலகின் பழம் பெரும் மொழி
'மோடி தமிழகத்தின் பா.ஜ.,வை பலப்படுத்த வேண்டி, 'அரசியல்' லாபத்துக்கு இவ்வாறு பேசுகிறார்' என்ற விமர்சனம் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்தாலும், ஐ.நா., சபை முதல், அமெரிக்கா வரை, நம் செம்மொழியாம் தமிழ் மொழியை அவர் பேசி, பெருமை கொள்ள செய்திருக்கிறார். இது ஒருவேளை அரசியலாக இருந்தாலும், அதில் என்ன தவறு இருக்கிறது.
உதாரணமாக, மோடி பல இடங்களில், தமிழின் பொன்மொழிகளை பேசிய விதம் குறித்து கேட்டறிந்த, தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, 'பிரதமர் மோடி சுட்டிக்காட்டும் வரை, உலகின் பழம் பெரும் மொழி எனும், தமிழ் மொழியின் பெருமை குறித்து நான் அறியாமல் இருந்துள்ளதை குறித்து, வெட்கப்படுகிறேன். 'ஊட்டியில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் படித்த போது கூட, நான் தமிழை கற்றிருக்க வேண்டும். தற்போது, தமிழை கற்கவும், அதன் பெருமையை அறியவும் முயற்சி செய்வேன்' என, சமீபத்தில் கூறி உள்ளார்
.
இது போன்று பல வெளிநாட்டு; உள்நாட்டு தொழிலதிபர்கள் நம் மொழியின் பெருமையை பேசுவது பெருமை தானே. ஆனால், 'நம் மாநிலத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், மத்திய அரசு, தமிழை பின்னுக்கு தள்ளி அழித்து வருகிறது' என்ற கட்டுக்கதையை ஒவ்வொரு தேர்தலிலும் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நம் நாட்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பினும், நம் சுவாசமான தமிழ் மொழி, பிரதமர் பேசும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இடம் பெறுகிறது என்றால், நமக்கும் பெருமை தானே!
- பிரதீபன், ஊட்டி
என்னது?