dinamalar telegram
Advertisement

குளிர்கால கூட்டத்தொடர் ரத்து எதிர்க்கட்சிகளுக்கு 'ஷாக்'

Share

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த ஆண்டு தலைநகர் டில்லியில் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளிலும், கொரோனா பரவல் தொடர்வதாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாலும், குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.


'வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். எனவே, அந்தப் பிரச்னை, சீனாவின் ஊடுருவல், பொருளாதார சரிவு போன்றவை குறித்து, விவாதிக்க வேண்டும். ஆகவே, குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும்' என, லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு பதில் அளித்த சபாநாயகர், குளிர்கால கூட்டதொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் விவகார அமைச்சகம், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா பரவலை தடுக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.லட்சக்கணக்கான பொதுமக்கள் மட்டுமின்றி, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும், தொற்று பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வந்துள்ளனர். லட்சக்கணக்கில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. அதனால், பார்லிமென்டை கூட்டும் போது, சமூக இடைவெளி விட்டு எம்.பி.,க்கள் அமர்வது, இருக்கைகள் ஏற்பாடு உட்பட, பல விஷயங்களில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், குளிர்காலத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கலாம் என்ற, அச்சமும் காரணமாகும்.

ஆனால், எதிர்க்கட்சிகளோ, 'கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்த நேரத்தில் தான், பீஹாரில் சட்டசபை தேர்தலும், பல மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடந்தன. ஏன் அமெரிக்காவில் கூட, அதிபர் தேர்தல் நடந்தது. தற்போது, தொற்று பரவல் வேகம் கட்டுக்குள் உள்ளது. அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கியுள்ளன. அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். 'கொரோனா ஊரடங்கிலும், ஏராளமான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால், மக்கள் துயரங்களை சந்தித்து வரும் நெருக்கடியான இந்த நேரத்தில், பார்லியை கூட்டி, முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதன் வாயிலாக, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து, முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க பயந்து, மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது சரியல்ல' என, விமர்சனம் செய்கின்றன.


சில ஆண்டுகளாக, பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் எண்ணிக்கை, எதிர்க்கட்சிகளின் அமளி உட்பட, பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிப்பதும் ரத்தாகிறது. பல மசோதாக்களை விவாதமின்றியே நிறைவேற்றிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இந்தச் சூழலில், ஒரு கூட்டத்தொடரே ரத்து என்பது, சரியான முடிவல்ல என்பது, சமூக ஆர்வலர்களின் வாதம்.


புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனநாயகத்தின் துடிப்புமிக்க செயல்பாட்டையும், ஒவ்வொரு விஷயம் குறித்தும், விரிவாக விவாதம் நடத்தி, தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அப்படிச் சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த அனுமதித்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


நம்நாட்டில் பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக, நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் இல்லை. ஆண்டுக்கு மூன்று முறை கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்பது மரபு. அதில், பட்ஜெட் கூட்டத்தொடர் தான், அதிக நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது, 120 நாட்களாவது, பார்லிமென்ட் நடைபெற வேண்டும் என, பல குழுக்கள் பரிந்துரைத்தும், அது என்னவோ இன்று வரை அமலுக்கு வரவில்லை. எனவே, இனிமேலாவது இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு, கூட்டத்தொடர் சீராக நடைபெறுவதை கெடுக்காமல், ஜனநாயக கோவிலான பார்லிமென்டில் ஆரோக்கியமான விவாதங்களில் பங்கேற்க வேண்டும். குளிர்கால கூட்டத்தொடர் ரத்தானதால், பட்ஜெட் கூட்டத்தொடரையாவது கூடுதல் நாட்களில் நடத்தினால், நன்றாக இருக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement