Load Image
Advertisement

ரஜினி, கமல் இதை செய்வீர்களா? உரத்தகுரல்


நம் நாட்டில் உற்பத்தி, உழைப்புக்கு ஏற்ப மக்களின் வாழ்வாதாரம் இல்லை. இதற்கான முக்கிய காரணங்கள் லஞ்சம், ஊழல்; அவற்றின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் அரசியல்வாதிகள்,
அதிகாரிகள்; தேய்ந்து போன பழைய சட்டங்கள்.இந்நாட்டில் ஒரு சாராரிடம் பணம் சேர்கிறது. மற்றொரு சாரார், ஏழையாகவே இருக்கின்றனர். சட்டத்தில் அடிப்படை மாற்றங்களும், சமூக சிந்தனையில் மாற்றங்களும் ஏற்பட்டால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும்.இந்திய மக்கள் தொகையில், 8 சதவீதம் பேர் மட்டுமே, வருமான வரி செலுத்துகின்றனர். பல அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர், சில வியாபாரிகள் முறையாக வரி செலுத்துகின்றனரா என்பது, அவர்களுக்கே வெளிச்சம்.'தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம்' எனக் கூறும் ரஜினி, கமல் போன்றோர் இவ் விவகாரத்தை கையில் எடுக்கலாம்.

கணக்கு காண்பித்தவரா?உங்கள் கட்சி சார்பில், தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவராக இருக்க வேண்டும். அதுமட்டும் போதாது, உண்மையான வருமானம் காட்டி, அதற்கு வரி செலுத்தியிருக்க வேண்டும். 'தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள்வருமான வரி செலுத்தாமல் இருப்பின், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க மாட்டோம்' என, இவ்விரு தலைவர்களும் அறிவிக்க வேண்டும்.
இப்படி கூறும்போது, 'ஏழைகள் தேர்தலில் போட்டியிடக் கூடாதா, வருமான வரி செலுத்தும் பணக்காரர்கள் மட்டும்தான் போட்டியிட முடியுமா' என, சிலர் கேட்கலாம்.

இந்நாட்டில், ஏழைகளுக்கு எத்தனை கட்சிகள், 'சீட்' கொடுத்திருக்கின்றன? சீட் கேட்கும் போதே, 'நீங்கள் எத்தனை கோடி ரூபாய் செலவு செய்வீர்கள்?' என்று தானே, கேள்விகேட்கின்றனர்.அதையும் மீறி, எந்த ஏழை தொண்டனாவது, சீட் கேட்டு போனால், அடிக்காத குறையாக விரட்டி விடுவர்; அதுதானே, தற்போதைய நிலை.


அப்படியொரு ஏழை, நல்லவர், வருமான வரி செலுத்தும் தகுதியை பெற்றிருக்கா விட்டாலும், அவர் தேர்தலில் போட்டியிட தகுதியிருந்தால், அந்த தேர்தலுக்குப் பின், தன் வருமானத்தை மறைக்காமல் நிச்சயம், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு வருமானக் கணக்கை தாக்கல் செய்வார் என உறுதியளிக்கலாம்.மேற்கண்ட உறுதிமொழியை மக்களுக்கு அளிக்க ரஜினியும், கமலும் தயாரா? அப்படி அளிக்கா விட்டால், உங்களை நம்பி எப்படி ஓட்டு போடுவது. உங்கள் சீர்திருத்தத்தை, வேட்பாளர்கள் தேர்வில் இருந்தே ஆரம்பியுங்கள்.

அதேபோல, தேர்தலில் போட்டியிட நீங்கள் சீட் தரும் வேட்பாளர்கள் மீது வருமான வரி, அமலாக்கத் துறை, சுங்கத் துறை தொடர்பான எந்த வழக்கும் நிலுவையில்இருக்கக் கூடாது. அது கிரிமினல் வழக்காக இருந்தாலும் சரி; சிவில் வழக்காக இருந்தாலும் சரி. 'வழக்கு தொடர்பில்லாத நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்குவோம்' என, வெளிப்படையாக அறிவிக்க,உங்களால் முடியுமா?

குற்றச்சாட்டு இல்லாதவரா?முன்னாள் அரசு ஊழியர்களுக்கு, உங்கள் கட்சியில் சீட் தருவீர்கள் என்றால், அவர்கள் பணியில் இருந்த காலத்தில், அவர்கள் மீது, '17 பி' குற்றச்சாட்டு உட்பட எந்த குற்றச்சாட்டும் பதிவாகியிருக்கக் கூடாது.சாதாரண கடைநிலை ஊழியராக இருந்தாலும் சரி, முன்னாள் துணைவேந்தராக இருந்தாலும் சரி. எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளானவர் அல்ல என்பதை உறுதி செய்தபிறகே சீட் தர வேண்டும். ஒருவேளை சீட் பெற்று, தேர்தலில் வெற்றியும் பெற்ற பின், அவர்கள் மீது, முந்தைய பணிக்காலத்தில் குற்றச்சாட்டுகள் இருந்தது தெரியவந்தால், தேர்தலில் பெற்ற பதவியை ராஜினாமா செய்ய முன்வர மாட்டார்கள்.

நீங்கள் அவரை, கட்சியில் இருந்து நீக்க முடியும்.அப்படி நீக்குவீர்களா?அதுமட்டுமின்றி, திராவிட கட்சிகளுக்கு மாற்று என, நீங்கள் இருவரும் கூறி வருவதால், அக்கட்சிகள் சார்பில், முன்பு தேர்தலில் போட்டியிட்டு மேயர், எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற மக்கள் பிரதிநிதித்துவ பதவி வகித்தவர்கள், உங்கள் கட்சியில் சேர்ந்தால், அவர்களுக்கு சீட் தர மாட்டோம் என, கூறுவீர்களா?


இணையத்தில் நிதி விபரம்ரஜினி, கமல் அவர்களே... உங்கள் கட்சி சார்பில் போட்டியிட, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களின் சுய விபரங்களை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன், அதாவது, 15 நாட்களுக்கு முன், உங்கள் கட்சி இணையதளத்தில் அறிவியுங்கள்.அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தால், பொதுமக்கள், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தெரிவிக்கலாம் எனச் சொல்லுங்கள். மக்கள் அளிக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வேட்பாளரை நிச்சயம் மாற்றுவோம் என உறுதி கூறுங்கள். அத்துடன், உங்கள் கட்சிக்கான நிதி ஆதாரங்களை, தேர்தல் கமிஷன் கேட்காவிட்டாலும், வருமானவரித் துறை கேட்காவிட்டாலும், நேர்மையாக ஒரு காரியத்தை செய்யுங்கள். அதாவது, உங்கள் கட்சிக்கு நிதி வழங்கும் நன்கொடையாளர்கள் விபரம், நிதி வழங்கிய முறையை இணையத்தில் பதிவேற்றிடுங்கள். தற்போது, இதை எந்த அரசியல் கட்சியும் செய்வதில்லை; 'மாற்றத்தை உருவாக்குவோம்' என புறப்பட்டிருக்கும் நீங்களாவது செய்யுங்களேன்.

இந்நாட்டு மக்களில் பலருக்கு, சமூகப் பொறுப்பு, சமூக ஒழுக்கம், கடமை உணர்வு இல்லை; நேர்மையின்மை என்பது, நம் மக்களின் தேசிய குணமாகி விட்டதோ எனத் தோன்றுமளவிற்கு, சம்பவங்கள் நடக்கின்றன. பொதுநலத்தை புறக்கணித்து, சுயநலத்துடன் செயல்படுவோரால், இந்த தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

மக்களை திருத்தி, இந்நாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முயன்ற நல்ல பல தலைவர்களும்கூட, காலப்போக்கில் தோல்வியைத் தழுவி, தாங்களும் வழிமாறியுள்ளனர். 'மக்களை மாற்றவே முடியாது' என, மனம் வெறுத்து, வழக்கமான அரசியல் பாதைக்கு திரும்பிய தலைவர்களின் வரலாறுகளும் தமிழகத்தில் எழுதப்பட்டுள்ளன.

தோற்ற எம்.ஜி.ஆர்.,கடந்த, 1977 - 1980 வரை, தமிழகத்தில் நல்லதொரு ஆட்சியை, மிகுந்த கட்டுப்பாட்டுடன் எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தினார். நுலிழை அளவு கூட ஊழலுக்கு இடமளிக்கவில்லை. ஆனால், என்ன நடந்தது?தன் மீதான ஊழல் புகாரை விசாரிக்க, 'சர்க்காரியா கமிஷன்' நியமித்த காங்கிரசுடன் வேறு வழியில்லாமல் கூட்டணி வைத்த கருணாநிதி, 1980 லோக்சபா தேர்தலை சந்தித்தார். மீண்டும் காங்., வென்று மத்தியில் ஆட்சியை பிடித்தால், 'சர்க்காரியா கமிஷன்படி தன் மீது மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என்றும், 'தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்' என்றும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில், பலமான கூட்டணி அமைத்தார்.

அவர் எதிர்பார்த்தது போன்றே, அந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வி கண்டது. ஆம், அ.தி.மு.க., கூட்டணிக்கு இரு தொகுதிகளே கிடைத்தன. காங்.,குடன் கைகோர்த்த தி.மு.க., கூட்டணி, 37 தொகுதிகளில் வென்றது.

மத்தியில் மீண்டும் இந்திரா பிரதமரானார். தமிழகத்தை இரண்டரை ஆண்டுகள் நேர்மையாக ஆண்ட எம்.ஜி.ஆர்., ஆட்சியை, மக்களின் செல்வாக்கு, ஆதரவை இழந்து விட்டதாக நொண்டி சாக்கு கூறி, டிஸ்மிஸ் செய்தார். எம்.ஜி.ஆர்., வெறுப்பின் உச்சத்துக்கே சென்றார்.
அடுத்து, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. செலவுக்கு பணமின்றி திண்டாடிய எம்.ஜிஆர்., சத்யா ஸ்டுடியோவை அடகு வைத்து, தேர்தலை சந்தித்தார். வயதான மூதாட்டியை எம்.ஜி.ஆர்., வாஞ்சையுடன் கட்டி அணைத்திருப்பது போன்ற பெரிய சைஸ் போஸ்டர்களில், 'நான் என்ன தவறு செய்தேன்? என் ஆட்சியை ஏன் டிஸ்மிஸ் செய்தார்கள்?' எனக் கேட்டு, தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டன.

மீண்டும் மக்களின் ஆதரவை பெற்று, எம்.ஜி.ஆர்., ஆட்சியமைத்தார். ஆனால், இம்முறை சாராயக் கடைகளை திறந்தார்; தனியார் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளை துவக்க அனுமதித்தார். எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும் ஊழல்கள் இருந்தன எனக் கூறுவோருக்கு இவ்விரு துறைகளுமே தீனி போட்டன. நேர்மையான ஆட்சி நடத்திய எம்.ஜி.ஆரையே மக்கள் புறக்கணித்தனர் என்பது வரலாறு.

அரசியல்வாதிகள் மக்களை கெடுக்கின்றனரா, மக்கள் அரசியல்வாதிகளை கெடுக்கின்றனரா என தெரியவில்லை. ரஜினியும், கமலும் பல சோதனைகளையும் மீறி, நல்ல தலைவர்களாக உருவெடுக்க வேண்டிய நிலை உள்ளது.தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கிளம்பியிருக்கும் ரஜினியும், கமலும் முதலில் தங்களின் கட்சி வேட்பாளர்கள்
மட்டத்தில் மாற்றத்தை ஆரம்பித்து, மக்கள் வரையிலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே, என்னைப் போன்ற சாமானியர்களின் ஆசை; அதை நிறைவேற்றுவரா?

- ஆதிபகவன்.

வாசகர் கருத்து (48)

 • ravi chandran -

  மேயற மாட்டை ... கெடுத்த மாதிரி

 • Ashok -

  எல்லோரின் ஆசையும் அதுதான். ஆனால் மக்களும் நம்பிக்கை வைத்து ஓட்டு போடவேண்டும்.

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  நிச்சயம் செய்வார்கள். நல்ல கருத்து.

 • Henry baskar - penang,மலேஷியா

  அரசு அதிகாரிகள் உடனுக்குடன் தாமதமில்லாமல் தங்கள் பணிகளை முடிக்க வேண்டும் அதற்கான சட்ட சீர்திருத்தங்கள் உடனடியாக மாற்றவேண்டும் , லஞ்சம் எதிலும் இருக்க கூடாது லஞ்சம் குடுத்தாலும் வாங்கினாலும் அது பெரிய குற்றமாக கருதி சட்ட நடவடிக்கை மூலம் வேலையை விட்டு தூக்கவேண்டும். நீங்கள் மாற்றம் வேண்டும் என்று சொல்லித்தான் அரசு அமைக்க தேர்தலில் நிற்கிறீர்கள் முதலில் எல்லா அரசாங்க அலுவலங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா இதை உங்கள் தேர்தல் அறிவிப்புகளில் அறிவிப்பீர்களா இதை செய்தாலே நிச்சியம் மாற்றம் ஏற்படும் . செய்வீர்களா?

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //...மக்கள் அரசியல்வாதிகளை கெடுக்கின்றனரா...//.....மக்களும் , அரசியல்வாதியும் வேறு வேறு என்பதுபோல் உள்ளது இந்த கேள்வி ....அரசியல்வாதிகள் வேறு கிரகத்திலிருந்து வரவில்லையே ??...மக்கள் திருந்தாமல் எதுவும் மாறாது ...இந்த கேள்வியை ரஜினி கமலை ஏன் கேட்கனும் ??....தேர்தல் செலவுக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள தொகையே அதிகம் ...ஒரு எம் பி தொகுதிக்கு ஒரு வேட்பாளருக்கு 77 லட்சம் , எம் எல் ஏ தொகுதிக்கு 30.6 லட்சம் ...இவ்வளவு செலவு செய்து மந்திரி ஆகிறவன் மக்களுக்கு என்ன செய்வான் ....இப்போதுள்ள பாராளுமன்றத்தில் 88 சதம் எம் பி கள் கோடீஸ்வரர்கள் ...பாராளுமன்றத்தில் 233 எம் பி கள் மேல் கிரிமினல் குற்றச்சாட்டு ...இதில் கொலை , கொள்ளை , கற்பழிப்பு , வீடு புகுந்து திருடியவன் , பிளேடு போட்டவன் , ஜேப்படி திருடன் , பிக் பாக்கெட் , என்று எல்லா வகையும் உண்டு ....இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement