தன்னுடைய ஆன்மிக அரசியல் நேர்மறையானது, அதில், மற்ற கட்சிகளை பற்றிய விமர்சனம் இடம் பெறாது என்று, நடிகர் ரஜினி கூறுவது, சரியான அணுகுமுறையல்ல. நேர்மையான கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களுக்கும், தனி மனித அவதுாறுகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துக் கொள்ளாமல் குழம்புகிறார்.
முன்னாள் முதல்வரும், காங்., கட்சியில் இருந்தவருமான காமராஜின் தோல் நிறம், அதே கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான பக்தவத்சலத்தின் முகம், சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் ஜாதி, அ.தி.மு.க.,வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் மலையாள பின்னணி, பிரதமராக இருந்த இந்திராவின் ரத்தக் காயம் மற்றும் ஜெயலலிதாவின் பெண்மை ஆகியவற்றைக் கொச்சைப்படுத்திப் பேசி, மட்ட ரக, தனி மனித விமர்சனங்களைக் கண்ட தமிழகம் இது.அதுவும், மூன்றாம் வரிசை அரசியல்வாதிகள் அல்ல; முன்னணி அரசியல்வாதிகளே இப்படிப்பட்ட அநாகரிகப் பேச்சுகளை உருவாக்கி, அதில் வாரிசுகளையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
இயக்கும் சக்தி
இப்போது, 'ட்விட்டர், பேஸ்புக்' ஆகிய சமூக வலைதளங்களில், கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி, அநாகரிகமான வகையில், தனி மனித விமர்சனங்களை வைப்பதற்கு முன்னோடியாக விளங்கியது, சம்பந்தப்பட்ட அந்த முன்னணி அரசியல்வாதிகளே! அத்தகைய ஈனத்தனமான தனி மனித துாற்றல்கள் தான் தவறு; நேர்மையான, ஆரோக்கியமான கண்டன, விமர்சனங்களை முன் வைப்பதில் தவறில்லை. ரஜினி, மிகப் பெரிய ஆன்மிகவாதி. ஆன்மிகத்தில், கடவுளுக்கு, ஆர்ப்பாட்ட ஆராதனை செய்யச் சொல்லவே இல்லை.
அமைதியாக, நொடிக்கு நொடி மாறும் சிந்தனையை மெள்ள மெள்ள அமர்த்தி, வெளிப்புற ஓசைகள் விழாமல் இறுகக் காதை மூடி, மூச்சில் மட்டும் கவனம் செலுத்தினால், 'ஓம்' என்ற ஒலிமட்டும் கேட்கும். இது தான், ஈரேழு பதினான்கு உலகையும் இயக்கும் சக்தி. உங்களுக்கும் உள்ளது; எனக்குள்ளும் உள்ளது; ரஜினிக்குள்ளும் உள்ளது; மைக்கேலிடமும் உள்ளது; அகமதிடமும் உள்ளது; திருமாவளவனிடமும் உள்ளது; வீரமணியிடமும் உள்ளது; பிச்சைக்காரர்களிடமும் உள்ளது; திருடர்களிடமும் உள்ளது; எறும்பிடமும் உள்ளது; யானையிடமும் உள்ளது; பாம்பிடமும் உள்ளது; மீனிடமும் உள்ளது; காற்று, நெருப்பு, நிலம், நீர் எனஅனைத்திடமும் உள்ளது.
வாழ்க்கைத் தத்துவம்
இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர் ரஜினி. எனவே, யாரிடமும் பேதம் பார்க்கக் கூடாது; யாரையும் பழிக்கக் கூடாது; யாரையும் துச்சமென மதிக்கக் கூடாது என்பதாக யோசிக்கிறார்.உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன், ரஜினி சார்! ஆனால், உங்களிடம் இருந்த குறைகளைக் கண்டறிந்து நீக்கியதால் தான், உங்களால் ஆன்மிகத்திற்குள் நுழைய முடிந்தது என்பதை, நீங்கள் புரிந்து கொண்டீர்கள் அல்லவா! ஆன்மிகம் தான் வாழ்க்கைத் தத்துவம் என்பதையும் உணர்ந்தீர்கள் அல்லவா!
தற்காலிக சுகம்
கவுதம புத்தர், ஞானம் அடைவதற்கு முன், அரசராக இருந்தவர். ஓர் அரசருக்கு, 29 வயதுக்குள் எத்தனை எத்தனை போகங்கள் இருந்திருக்கக் கூடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். புத்தர் வாழ்க்கை வரலாறு படித்தவர்கள் அனைவரும் அதை அறிவர். சாலையில் சென்றபோது, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணத்தையும், ஒரு முதியவரையும், நோய்வாய்ப்பட்ட ஒருவரையும் பார்த்ததும், 'ஓ... வாழ்க்கை இது தானா... துன்பம் தருகிறதே...' என்பதை உணர்ந்த பின், ஞானத்தைத் தேடத் துவங்கினார். தான் அனுபவித்த போகங்கள் அனைத்தும், தனக்குத் தற்காலிக சுகம் மட்டுமே தந்தன என்பதை உணர்ந்தார்.
எனவே, 'இது இதெல்லாம் தவறு; உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள்; நிரந்தர அமைதியும், ஆனந்தமும் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தினால் கிடைக்கும்' என்பதைச் சொல்லிக் கொடுத்தார்.நீங்கள் வழிபடும் பாபாவும் அதைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார். நீங்கள் இப்போது, ஒரு குருவின் ஸ்தானத்திற்கு வரப் போகிறீர்கள்; அதாவது ஒரு மாநிலத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கப் போகிறீர்கள்.நீங்கள் என்ன செய்ய வேண்டும்...
'இங்கு இந்திந்த ஊழல்கள் நடக்கின்றன. உங்களுக்கு, பணம் என்ற மாயையைக் காட்டி, உங்களை ஏமாற்றி, உங்களை நிர்வகித்து, உங்களுக்கு உரிய பணத்தையும், நிலத்தையும், மின் வௌிச்சத்தையும், வழிபாட்டுத் தலங்களையும், உங்கள் உணவையும் அபகரிக்கப் பார்க்கின்றனர். 'உங்கள் வாழ்க்கையைப் பெரிய அளவில் மேம்படுத்தப் போதுமானதாக இல்லாமல் கிடைக்கும் அந்தப் பணம் உங்களுக்கு வேண்டாம். உழைப்பே, நம் தாரக மந்திரம்; நேர்மையே நம் மூச்சு' என்பதை, மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டும்!
இமாலய ஊழல்கள் என இதுவரை கண்டறியப்பட்டவை, தற்போது நடக்கும் ஊழல்கள், குடும்ப அரசியல், மொழி, இனம் போன்ற பம்மாத்து, ஊழல் மற்றும் திறமையின்மையால் நாட்டையே இருளில் மூழ்கடித்த மின்வெட்டு, தொழில்துறை முடக்கம், நில அபகரிப்பு, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல்...திரைத் துறை முதல் பல்வேறு தொழில்களை குடும்பமயமாக்கியது, இந்துக்களை மட்டும் மனம் நோக வைக்கும் மதவாதம், இதன் மூலம் சிறுபான்மையினரை ஏய்த்து அவர்களின் வாக்குகளை களவாடும் போக்கு, இந்துக்களின் வாக்கு இழப்பு ஏற்படும் என்ற இப்போதைய நிலையில் அவர்களை தாஜா செய்யும் சந்தர்ப்ப வாதம், ஓட்டுக்கு துட்டு இவற்றையெல்லாம் தோலுரித்து காட்ட, நீங்கள் தயக்கம் காட்டக் கூடாது, ரஜினி சார்!
நாகரிகமாக, அதே சமயம் மிகக் கடுமையாக கண்டனம் செய்ய வேண்டும்!
நீங்கள் கட்சி துவங்குவதற்கு முன்பே, உங்களைப் பற்றிய ஏச்சும், பேச்சும் பேசுபவர்கள், நீங்கள் அரசியலுக்கு வந்த பிறகு, நாற்றமெடுக்கும் வார்த்தைகளையும், இழி பேச்சுகளையும் பேசுவர். ஆன்மிகத்தில் இருக்கும் உங்களுக்கு, இந்தப் பேச்சுகள் கோபத்தையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்தாமல் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்!ஏனெனில், காது கூசும் அளவுக்கான சொற்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அப்படிப் பேசுபவர்கள் உள்ளும், கடவுள் இருக்கிறார் என, அமைதியாகக் கடந்து, அரசியலை வென்று, வெற்றிக் கொடி நாட்டுங்கள், ரஜினி! ஆல் தி பெஸ்ட்! - பி.என். கபாலி, சென்னை
Muthukumaran B yess