Load Image
Advertisement

பதவி வெறி படுத்தும் பாடு!

உஜ்ஜயினி நாட்டை போஜராஜ மன்னன் ஆண்டு கொண்டிருந்த போது, அவனது நாட்டின் எல்லைப் பகுதியில் வசித்து வந்த மக்கள், ஒரு நாள் திரண்டு வந்து, 'மன்னா! எங்களைக் காப்பாற்றுங்கள். காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து எங்கள் உயிர்களை பறித்து, உடமைகளை துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன. தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று முறையிட்டனர்.

இந்தக் காலமாக இருந்தால் ஆட்சியில் அமர்ந்து இருப்பவர்கள், 'தைரியமாகப் போங்கள். நான் காவல் துறையிடம் சொல்லி தக்க நடவடிக்கை மேற்கொள்ள சொல்கிறேன்' என்று சொல்லி வழி அனுப்பி வைத்திருப்பர்.ஆனால், போஜராஜன், 'அஞ்சாதீர்கள். நாளை நானே நேரில் வந்து என்ன ஏது என்று பார்த்து, தக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்' என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

தான் வாக்களித்தது போலவே, மறுநாள், மந்திரி பிரதானிகளையும், படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு, எல்லைப் பகுதி மக்களைக் காப்பாற்றப் புறப்பட்டான்.காட்டில் போஜராஜனும் அவனது படை பரிவாரங்களும் வேட்டையாடி, சிங்கம், புலி, கரடி போன்ற ஏராளமான விலங்குகளைக் கொன்று குவித்தனர்.சுழன்று சுழன்று வேட்டையாடியதில், மன்னனும், மன்னனுடன் வந்திருந்தவர்களும் மிகுந்த களைப்படைந்தனர். பசி வேறு அவர்களை சோர்வடையச் செய்தது.

குடிக்க தண்ணீரும், புசிக்க பழங்களும் ஏதாவது, எங்காவது கிடைக்குமா என்று ஒரு பிரிவினர் தேடிச் செல்ல, ஓரிடத்தில், பரண் மீது நின்றபடி, விளைந்திருந்த பயிர்களை பறவைகள் சேதப் படுத்தி விடாமல், கவண்கல் வீசி காபந்து பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், இவர்களை துாரத்தில் பார்த்ததும், 'வாருங்கள்! வாருங்கள்! பசியோடும் களைப்போடும் இருக்கும் நீங்கள், இந்த ஏழையின் குடிலுக்கு வந்து இளைப்பாறுங்கள்.


'கேணியில் இருந்து நீர் இறைத்துக் குடித்து தாக சாந்தி செய்து கொள்ளுங்கள். விளைந்திருக்கும் கம்புப் பயிரை உண்டு பசியாறுங்கள்' என்று வரவேற்றான். அவன் பெயர் சரவணபட்டன்; விவசாயி.அவனது வரவேற்பை நம்பி அருகில் சென்ற போது, பரணிலிருந்து கீழே இறங்கியவன், 'யார் நீங்கள்? இங்கு ஏன் வந்தீர்கள்? என் தோட்டத்தில் விளைந்து இருக்கும் பயிர்களை நாசமாக்க வந்திருக்கிறீர்களா? மரியாதையாக போய் விடுங்கள்' என்று மிரட்டி துரத்தினான்.
வீரர்களும் திரும்பத் துவங்கினர். அவர்கள் போவதைக் கண்ட சரவண பட்டன் மீண்டும் பரண் மீது ஏறினான். பரண் மீது ஏறியதும் அவனது சுபாவமே மாறியது.


'அடடா! பசியாற வந்தவர்கள் ஏன் எதுவும் உண்ணாமல் திரும்பிச் செல்கிறீர்கள்? வாருங்கள்! வாருங்கள்!' என்று மீண்டும் அழைத்தான். அவர்கள் அவனது அழைப்பை ஏற்று அருகில் சென்றதும், பரணிலிருந்து இறங்கி, பழையபடி, அனைவரையும் விரட்டத் துவங்கினான்.இது போல, பரணில் ஏறினால், அழைப்பதும், கீழே இறங்கியதும் விரட்டுவதுமான அவனது செயல் வித்தியாசமாக இருக்கவே, வீரர்கள் அனைவரும் போஜராஜனிடம் சென்று நடந்ததைக் கூறினர்.போஜராஜனும் மந்திரிகள் மற்றும் அழைத்து வந்திருந்த படை வீரர்கள் அனைவருடனும் வந்து, அந்த சரவண பட்டரை பரணிலிருந்து இறங்க வைத்து, பரணின் கீழே அகழ்ந்து பார்க்க உத்தர விட்டான்.

வீரர்கள் அந்த இடத்தை அகழ்ந்து பார்த்த போது, அந்த அகழ்வில், முப்பத்திரண்டு படிகளும்., ஒவ்வொரு படியிலும் ஒரு பதுமையுமாக பிரமாண்டமான ஒரு சிம்மாசனம் தெரிந்தது. காடாறு மாதம், நாடாறு மாதம் என்று அட்டவணை போட்டுக் கொண்டு, காளி அளித்த ஆயிரம் ஆண்டு ஆட்சி புரிய அளித்த வரத்தை, தன் மதியூக மந்திரி பட்டியின் ஆலோசனைப்படி, இரண்டாயிரம் ஆண்டுகள் ஆண்ட விக்ரமாதித்த மகாராஜாவின் சிம்மாசனம்தான் அது.அந்த சிம்மாசனத்தின் ஆகர்ஷண சக்திதான், அந்த சரவண பட்டன் என்ற விவசாயிக்கு தயாள குணத்தையும், அந்த ஆகர்ஷண சக்தியின் ஈர்ப்பில் இருந்து விலகியதும் சுயரூபத்தையும் காட்ட வைத்தது என்பதை, போஜமன்னன் உட்பட மன்னனைச் சுற்றி இருந்த அனைவரும் உணர்ந்தனர்.


அது போல, இன்றைக்கு மத்திய அரசு எந்த வேளாண் சட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளதோ, அந்த வேளாண் சட்டத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களும், 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் தன் தேர்தல் அறிக்கையில் தெளிவாக, விரிவாக, விபரமாகக் குறிப்பிட்டிருப்பது தான்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதை எதை செய்வோம் என்று தேர்தல் அறிக்கை என்ற ஒன்றின் மூலம் அறிமுகப் படுத்தி, விளம்பரப் படுத்தி, தெருத் தெருவாக, வீடுவீடாக, ஒவ்வொரு தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்திலும் முழங்கியதோ, அதே வாக்குறுதிகளை இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் மத்திய அரசு அமலுக்கு கொண்டுவர முயலும் போது அலறுகிறது.

ஆட்சியில் இல்லாத போது, அரசியல் கட்சிகளுக்கு, குறிப்பாக தி.மு.க.,வுக்கு,- பொது மக்கள் மீது பீறிடும் அக்கறை, தற்போது பொங்குவது போல, அளவிட இயலாதது.எப்படி, விக்ரமாதித்தனின் சிம்மாசனத்தின் மீது அமைக்கப் பட்டிருந்த பரண் மீது நின்று கொண்டிருக்கும் போது, சரவண பட்டனுக்கு தர்ம குணமும், தயாள மனமும் பீறிட்டு எழுமோ, அதுபோல, தி.மு.க.,விற்கு, சட்டசபைக்கோ, பார்லிமென்ட்டுக்கோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நாட்டு மக்கள் நினைவுக்கு வருவர்.

என்ன என்ன மாதிரியான - நிறைவேறாத/நிறைவேற்றவே முடியாத - வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கினால், மக்கள், தன் நிலை மறந்து தம் கட்சிக்கு வாக்களிப்பர் என்று சிந்தித்து, அது மாதிரியான வாக்குறுதிகளை அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவர்.வாக்களிக்கும் அப்பாவி மக்களும், 'இந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவர்... அதற்கு உண்டான நிதியை எப்படி திரட்டுவர், எப்படி திரட்ட முடியும்...' என்றெல்லாம் கொஞ்சம் பகுத்தறிந்து சிந்திக்காமல், சரவண பட்டனின் அழைப்பை ஏற்று அவன் குடிலுக்குச் சென்ற, போஜ மன்னனின் படை பரிவாரங்களைப் போல, தி.மு.க., சொன்ன சின்னத்தில் முத்திரை குத்திக் காத்திருப்பர்.


தேர்தல் முடிந்ததும், வென்றாலும் சரி; தோற்றாலும் சரி; அதன் பிறகு தன் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் குறித்து, தி.மு.க.,வுக்கு சிந்தனையே இருக்காது. அவர்கள் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதியும் நினைவிருக்காது. அவர்கள் சிந்தனை முழுதும் கிடைத்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு, எத்தனை தலை முறைக்கு எப்படி சொத்து சேர்ப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளே நிறைந்திருக்கும்.மறுபடியும் தேர்தல் வரும் போது, பழைய வாக்குறுதிகளையே துாசு தட்டி எடுத்து மீண்டும் மறுபதிவு செய்து வாக்களிக்கக் கோருவர். என்ன ஒரு வித்தியாசம் எனில், சரவணபட்டன், போஜ மன்னனின் படை பரிவாரங்களை விரட்டி விட்டான். இவர்கள் விரட்டி விட மாட்டார்கள். ஏனெனில் மறுபடியும் வாக்கு கேட்டு வர வேண்டுமல்லவா!இது தான் அரசியல்; இது தான் தி.மு.க.,

இதிலிருந்து வாக்களிக்கும் மக்களாகிய தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், காங்கிரஸ், தி.மு.க., குறிப்பாக கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், ஏ டு இசெட் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆகியோருக்கு பதவியில் இல்லாத போது தான், மக்கள் நலன், கண்களுக்குத் தெரியும். பதவியில் அமர்ந்து விட்டால், அதுவே மக்களுக்கு கேடாய் தெரியும்.நாட்டு முன்னேற்றம் முக்கியமா; நாட்டு மக்கள் நலன் அவசியமா... எந்த அரசியல் கட்சிக்கு வாக்களித்தால் அவை நிறைவேறும்; எந்த அரசியல் கட்சிக்கு வாக்களித்தால் அவை முடங்கும் என்பதை, வாக்களிப்பதற்கு முன் ஒரு முறைக்கு ஒன்பது முறை சிந்தித்து வாக்களிப்பது, நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. நாட்டு முன்னேற்றத்துக்கும் நல்லது. ம.கிருஷ்ணகுமார், நெய்வேலி.வாசகர் கருத்து (23)

 • vbs manian - hyderabad,இந்தியா

  கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக தமிழ் நாடு சாபத்துக்கு உள்ளாகி விட்டது. மக்களிடையே உணர்ச்சி பூர்வமான விஷயம் பேசி மூளையை மழுங்கடித்து விட்டார்கள். ஏழை பிற்படுத்தப்பட்டவர் ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம் என்று சொல்லியே தங்கள் கஜானாவை நிரப்பி விட்டனர். பொது வாழ்வில் ஒழுக்கம் நாணயம் நேர்மை தேய்ந்து மறைந்து விட்டன. ஒரு சுனாமியோ பூகம்பமோ வந்துதான் எல்லாவற்றை அழித்து சீர் செய்ய வேண்டும்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  மெயில் ஐடி அல்லது போன் நம்பரோடு பதிவிடவும்.

 • Anand - chennai,இந்தியா

  அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்....

 • j Karthikeyan -

  திமுகவை விமர்சனம் செய்வதை நிறுத்து, ஆளும்கட்சியின் மீது விமர்சனம் செய்

 • J.Isaac - bangalore,இந்தியா

  . உண்மை தன்மை அறிய மெயில் ஐடி அல்லது போன் நம்பர் போடவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement