புதிய கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள ரஜினி தன் உடல்நிலை குறித்த விபரங்களை வெளிப்படை யாக அறிவித்து தமிழக அரசியலில் வித்தியாசத்தை காட்டியுள்ளார்.
தமிழக அரசியல் களம் வித்தியாசமானது. தமிழகம் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் திரைத்துறையில் இருந்து வந்து நாட்டை ஆண்டது இல்லை. கர்நாடகா, ஆந்திராவில் சில நடிகர்கள் சொந்த கட்சி வைத்திருந்ததை தவிர பல மாநிலங்களில் நடிகர்கள் எதாவது கட்சியின் அனுதாபிகளாக இருப்பர்; அவ்வளவுதான். ஆனால் வரிசையாக நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் மாநிலம் தமிழகம் தான். கடந்த பத்தாண்டுகளில் விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்து இப்போது ரஜினி!
இமேஜ் பார்ப்பவர்கள்
பொதுவாகவே தமிழகத்து அரசியல்வாதிகள் அதிலும் முதல்வராக இருந்தவர்கள் 'இமேஜ்' பார்ப்பவர்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தனர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி ஸ்பெஷல். ஜெயலலிதாவிற்கு பிரத்யேக ஆடை 'ஸ்டைல்' இருந்தது. முதன்முதலாக ஜெ. முதல்வரான 1991-96ல் யாரும் இதுவரை அணியாத வித்தியாசமான 'கோட்' அணிந்து வலம் வந்தார்.மொத்தத்தில் பொது இடங்களில் தங்களை 'பளிச்' எனக் காட்டிக் கொள்வதில் இவர்கள் மூவரும் கவனமாக இருந்தனர்.
தங்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்த அதே வேளை தங்களுக்கான உடல்நலக் குறைவு விஷயங்களையும் பொது வெளியில் தாங்களாக சொல்வது இல்லை; அது தொடர்பான எந்த தகவலும் வெளியே கசியாதவாறும் பார்த்துக் கொண்டனர்.எம்.ஜி.ஆர். வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை பெற்ற போது தான் அவரது உடல் பிரச்னை வெளியே தெரிந்தது. முதல்வராக இருந்த கருணாநிதி நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்த போதும் அவரது உடல் உபாதைகள் வெளியே தெரியவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகும் அவரது உடல்நிலை அவர் பெற்ற சிகிச்சை பற்றி இன்னும் சர்ச்சைகள் தொடர்வது நாம் அறிந்ததே!
கடந்த ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சில வாரங்கள் கழித்து அவர் திரும்பிய போதும் அவரது ஆரோக்கியம் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. காங். தலைவர் சோனியாவின் உடல்நலக் குறைவும் அவர் தரப்பில் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. விஜய்காந்த் கூட உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த தேர்தலில் பிரசாரம் செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டதே தவிர அவருக்கு என்ன பிரச்னை என்று வெளிப்படையாக அவர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
தனிப்பட்ட பிரச்னையா
ஆளும் முதல்வருக்கு பிரச்னை என்றால் குடிமகன்களும் கட்சித் தலைவருக்கு பிரச்னை என்றால் தொண்டர்களும் அறிந்திருப்பதில் தவறு இல்லை. அரசியல்வாதிகள் உடல்நிலை அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்று கருதினாலும் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, அமைச்சர்களாக, முதல்வர்களாக பொதுவெளிக்கு வரும் போது அது ஓட்டளிக்கும் குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய விஷயமாகிறது. ஆனால் அரசியலில் இவை எல்லாம் எப்போதும் மூடி மறைக்கப்பட்ட விஷயங்களே.
அந்த பிம்பத்தை ஒரே அடியாக தகர்த்து அரசியலுக்கு வரும் போதே தன்னுடைய உடல்நிலை பற்றி வெளிப்படையாக பேசுகிறார் ரஜினி.'எனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தியுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர்' என்கிறார். மாவட்ட நிர்வாகிகளிடம் பேசும் போது 'நான்தினமும் 14 மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன்' என்றிருக்கிறார் வெளிப்படையாக!
சினிமாவில் 'ஸ்டைல்' மன்னனாக 'சூப்பர் ஸ்டாராக' இருந்தாலும் அந்த துறையில் இருந்து வந்த போதும் எந்தவித ஒப்பனையும் இன்றி கொட்டிய தலைமுடிக்காக எவ்வித மெனக்கெடலுமின்றி ஆடம்பர ஆடைகள் ஏதுமின்றி எளிமையாகவே 'திரையில் மாயாஜாலம் காட்டும் ஹீரோ அல்ல நான் இங்கே; நிஜத்தில் சாதாரண மனிதன்' என்று தன்னை நிரூபிக்கும் விதமாக அரசியலுக்கு வருகிறார். 'மாத்துவோம்... எல்லாத்தையும் மாத்துவோம்' எனச் சொல்வதன் முதல் படியே இது தான்!
- ஆர்.எம்.குமார் மதுரை
ஏதாவது ஒரு செய்தியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள் இருக்கு என்பது சாமானிய மக்கள் புரிந்திருக்கின்றார்கள். கட்சி ஆரம்பித்து கொள்கை வெளியிடவில்லை, மக்களுக்காக இதுவரை எதுவும் செய்ததாக தெரியவில்லை,செய்ய வேண்டிய சூழ்நிலையில் கூட பல புதுமுகங்கள் இவரை விட பல மடங்குகள் அதிகம் செய்து விட்டார்கள், மக்கள் அவரை வித்தியாசம்மான நடிகராக பார்த்து ரசித்தார்கள் என்பது மட்டுமே உண்மை. அவர் ரசிகர்களுக்கு கூட பெரிய அளவில் தொண்டு செய்ய அறிவுறுத்த படவே இல்லை. கடைசியில் ரசிகர்களை நம்பாமல் ஏதோ ஒரு அழுத்தத்தில் வேறு கட்சியிலிருந்து தலைமை முக்கிய பொறுப்புக்கு நியமித்திருக்கின்றார்.