தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் நாங்கள், தனிமையில் அரசியல் ஆதரவின்றி நிற்கிறோம். எங்கள் குரலை ஒலிக்க, எந்த தலைவரும் இல்லை. இப்போதுள்ள அரசியல் தலைவர்களில் யாரும், கிறிஸ்துவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பவராக இல்லை.
ஆனால், கிறிஸ்துவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமென விரும்புகின்றனர். அது போன்ற தலைவர்களால், எங்களைப் போன்ற பொதுவான கிறிஸ்துவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.கிறிஸ்துவர்கள் பலர், பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்களாக இருந்து எண்ணற்ற பிள்ளைகளின் அறிவு வளர்க்க பாடுபட்டனரே தவிர, ஆசிரியர்களின் ழ்வாதாரம்கூட உயரவில்லை. அவர்களுக்கும், அரசியல் ரீதியான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இனியும், எந்த திராவிடக் கட்சிகளும், எங்களை ஊறுகாய் போன்று பயன்படுத்திவிடக் கூடாது என்றே, ஒவ்வொரு கிறிஸ்துவரும் எண்ணுகிறோம்.
இஸ்லாமியருக்கு பல கட்சிகள்
இஸ்லாமியர்களுக்கென இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் போன்ற பல கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால், கிறிஸ்துவர்களுக்கென கட்சி ஏதுமில்லை. தற்போது இருக்கும் கிறிஸ்துவ அமைப்புகள், சமூக அமைப்புகளாகவே இயங்குகின்றனவே தவிர, அரசியல் ரீதியாக வெளிப்படையாக இயங்குவதில்லை.
கிறிஸ்துவர்கள் என்றால், அவர்களின் பிரதிநிதி பாதிரியார்கள் என்றே அரசியல் தலைவர்கள் பலரும் கருதுகின்றனர். எஸ்றா சற்குணம், ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் தான், எங்களின் பிரதிநிதிகள் என கருதுகின்றனர்; இவர்கள், எங்களின் பிரதிநிதிகள அல்ல; கிறிஸ்துவத்துக்கு முழு நேர ஊழியம் செய்பவர்கள்.
இவர்களைக் காட்டிலும் எவ்வளவோ பேர் அரசியல் ரீதியாக செயல்படும் திறனைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், அவர்கள் தங்களை கிறிஸ்துவர் எனக் கூறிக் கொண்டால், மற்ற மதத்தினருடன் ஒட்டிப் போக முடியாதே எனக் கருதி, ஒதுங்கிக் கொள்கின்றனர்.அதனால், எங்களுக்கென ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் போய்விட்டது. எங்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவதாக கூறிக்கொள்ளும் பலரும், பிரதமர் மோடியை தனிப்பட்ட காரணங்களுக்காக பிடிக்காமல் இருப்பதால், கிறிஸ்துவர்கள் அனைவரும் ஏதோ மோடிக்கு எதிரானவர்கள் என்று பேசுவதும், பிரசாரம் செய்வதும் வழக்கமாகி வருகிறது. நான் அறிந்தவரை, மோடி எந்த கிறிஸ்துவர்களுக்கும், எந்த மதத்தினருக்கும் முழுமையாக ஆதரவோ, எதிர்ப்போ தெரிவித்ததாக பார்க்கவில்லை; படிக்கவுமில்லை. உண்மையான கிறிஸ்துவர் யாரும் மத மாற்றத்தை ஆதரிப்பதே இல்லை. மற்ற மதத்தினரை, கிறிஸ்துவத்துக்கு மாற்ற வேண்டும் என, பைபிளும் சொல்லவில்லை.சில பாஸ்டர்கள் மத மாற்றம் செய்கின்றனர்; அதற்காக வெளிநாடுகளில் பணம் பெறுகின்றனர். அந்த பணத்துக்கு கணக்கு காண்பிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்பதால், பிரதமர் மோடியை தம் விரோதியாக பார்க்கின்றனர். ஆனால், இதற்கான சட்டம், 2010ல், காங்., ஆட்சிக் காலத்திலேயே இருந்ததை, பலரும் ஏனோ அறிந்திருக்கவில்லை.
மோடிக்கு எதிரான கருத்துக்கள்
இதன் காரணமாகவே, இவர்கள் தி.மு.க.,வை பல ஆண்டுகளாக முழுமையாக ஆதரித்து வருகின்றனர். 'சர்ச்'களில் கடமை தவறாமல் பைபிள் படித்த பின், பல சிற்றுார்களில் பாதிரியார்கள் அரசியல் பேசுவது வழக்கமாக உள்ளது.பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் அங்கே பரப்பப்படுகின்றன; அதோடு சரி... அரசியல் ரீதியான செயல்பாடுகள் எதுவும் பொதுவெளியில் நடைபெறுவதில்லை. எனவே தான், எங்களுக்கான ஒரு தலைவர் வேண்டும் என, உணர்கிறோம்.
இதற்கு முந்தைய, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளின்போது கீதா ஜீவன், சுரேஷ்ராஜன், ஜெனிபர் சந்திரன், வளர்மதி ஜெபராஜ், லாரன்ஸ் போன்ற கிறிஸ்துவர்களுக்கு பெயரளவிற்கே, ஒவ்வொரு கட்சி ஆட்சியின்போதும் அமைச்சர் பதவிகள் தரப்பட்டன. இவர்கள் யாரும், கிறிஸ்துவர்களின் குரலை எதிரொலிக்கும் விதமாக தனியாக கட்சி நடத்தும் தகுதி பெற்றிருக்காதவர்கள். இவர்கள், எந்த கிறிஸ்துவருக்கும் பெரிய விதத்தில் உதவி செய்ததாக தெரியவில்லை.
காங்கிரசும் புறக்கணிப்பு
கிறிஸ்துவர்களின் பிரதிநிதிகளாக கூறிக்கொள்ளும் தற்போதுள்ளவர்களில் யாரும், எங்களுக்காக வெளிப்படையாக குரல் கொடுக்கவுமில்லை.கடந்த முறை, தி.மு.க., ஆதரவுடன் மத்தியில் காங்., தலைமையில் கூட்டணி ஆட்சி இருந்தபோது, தமிழகத்திலிருந்து ஏழு பேர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர்; இவர்களில் ஒருவர் கூட கிறிஸ்துவர் இல்லை. எந்த அரசியல் கட்சிகளுமே, தமிழகத்தில் எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளித்ததில்லை என்பது தானே யதார்த்தம்!
பெரும்பாலும், தமிழகத்திலுள்ள கிறிஸ்துவர்கள், 30 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவளித்து வந்துஉள்ளனர். ஆனால், ஐந்து கட்சிகளுக்கு தாவிய திருநாவுக்கரசருக்கு, மாநில தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்த காங்கிரஸ் தலைமை, அதே கட்சிக்காக ஆரம்பம் முதலே உழைக்கும் பீட்டர் அல்போன்சுக்கு வாய்ப்பு தராமல் நட்டாற்றில் விட்டது. எனவே தான், கிறிஸ்துவர்களுக்காக குரல் கொடுக்க, ஒரு தலைவர் வேண்டும். அவர் தலைமையில், புதிய கூட்டணி ஒன்றை துவக்க வேண்டும்; அதற்கு, திருமாவளவன் போன்றவர்களும் துணை நிற்க வேண்டும் என்கிறோம்.
தான் கிறிஸ்துவர் எனச் சொல்லக் கூடிய தலைவர்கள் கூட, அவர்களது குடும்ப அளவில் மட்டும் செயல்படுகின்றனரே தவிர, கிறிஸ்துவர்களுக்கான தலைவர்களாக ஒருபோதும் செயல்பட்டதில்லை. வைகோ குடும்பத்தில் சிலர் கிறிஸ்துவர்களாக மாறியிருந்தாலும், அவர் நேரடியாக இதுவரை ஒப்புக் கொண்டதில்லை.
நீங்கள் தான் எங்கள் தலைவர்:
அன்பு கமல் அவர்களே...உங்கள் சகோதரர் சாருஹாசன், கிறிஸ்துவ மதத்தை தழுவியுள்ளார். அவரின் பல, 'வீடியோ'க்களை, 'யு டியூபி'ல் பார்த்திருக்கிறேன். உங்களது இரண்டாவது சகோதரர் சந்திரஹாசன், 2017ல், லண்டனில் இறந்தபோது, கிறிஸ்துவ முறைப்படி தான் அடக்கம் செய்தீர்கள். ஒரு முறை, பி.பி.சி., பேட்டியில், பத்திரிகையாளர் கரன்தாபரின் கேள்விக்கு பதிலளித்த நீங்கள், 'நான், கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டரில் இணைந்து பணியாற்றினேன்; கிறிஸ்துவத்தை பரப்பினேன்' (2018, பிப்., 26) என, கூறியுள்ளீர்கள்.
அது மட்டுமின்றி, 'கிறிஸ்துவ மிஷனரிகள் இந்தியாவுக்குள் வந்தபின் தான், இந்நாட்டில் கல்வி நிறுவனங்களும், மருத்துவமும் வளர்ந்தது' என்று நேரடியாக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறீர்கள். 'எம்மதமும் சம்மதம்' என்றும், 'ஜாதியில்லை' என்றும் சொல்லி வந்தாலும், மற்றவர்களைப் போல அல்லாமல், கிறிஸ்துவர்கள் மீது உங்களின் குடும்பத்துக்கு, தனி பாசமும் நம்பிக்கையும் உண்டு என்பதை நன்கறிவோம்.
அதனாலேயே சொல்கிறோம்... நீங்கள் ஏன், கிறிஸ்துவர்களுக்கான தலைவராக இருக்கக்கூடாது என்று!நீங்கள் எங்களின் தலைவரானால், உங்கள் பின்னால் லட்சக்கணக்கான கிறிஸ்துவ இளைஞர்கள் அணி திரள்வர்!எங்களின் சகோதரர் பாஸ்டர் மோகன் லாசரஸ் சொல்வது போல, தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை, 24 சதவீதமாக இல்லாவிட்டாலும், நான் அறிந்தது வரை, 14 முதல், 15 சதவீதமாவது இருப்போம். எங்களுக்கு ஒரு நல்ல தலைவர் தேவை. அந்த தலைவர், நீங்களாக இருங்கள் கமல் அவர்களே!அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!
ரஜினியை நம்ப இயலாது
உண்மையைச் சொல்ல ஒருபோதும் நீங்கள் பயப்பட மாட்டீர்கள் என்றறிவோம். நடிகர் விஜயை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். சகாயம் ஐ.ஏ.எஸ்., விருப்ப ஓய்வு பெற்று விட்டார்; அவர் போன்ற நல்ல கிறிஸ்துவர்கள், இன்னும் பலர் இருக்கின்றனர்; அவர்களையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஒரு கிறிஸ்துவர், முதல்வர் ஆவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யாருமில்லை; எங்களுக்கான குரலாக, எங்களுக்கான தலைவராக மாறுங்கள் கமல்!
இப்போது, ரஜினியும் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அவரது நோக்கம், ஆன்மிக அரசியல் என்கிறார். இதுவரை அவர் ரிஷிகேசுக்கு மட்டுமே சென்று வந்துள்ளார் என்பதால், அவர் சொல்லும் ஆன்மிக அரசியல், ஹிந்து ஆன்மிக அரசியல் என்றே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், தமிழக சட்டசபை தேர்தலில் மூன்று முனை போட்டி ஏற்படலாம். யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல், 'தொங்கு சட்டசபை' போன்ற நிலையும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.எனவே, முடிந்தால் காங்கிரசையும் கூட்டணிக்குள் கொண்டு வாருங்கள். ஏன், ஒரு கம்யூனிஸ்டையும் கூட்டி வாருங்கள். திராவிடக் கட்சிகளை பிடிக்காதவர்களை, அவர்கள் சிறு கட்சியாக இருப்பினும் சேர்த்து, நான்காவது அணி அமையுங்கள்.
வரவுள்ள தேர்தலில், நீங்கள் நான்காவது அணி உருவாக்கி, கிறிஸ்துவர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துவீர்களேயானால், குறைந்தது, 25 - 30 'சீட்'களை பெற்று விட முடியும். நம் லட்சிய பயணத்தில் இது, முதல் படியாகவும் அமையும்; எங்களின் குரலாக, எங்களின் தலைவராக மாறுவீர்களா கமல்?
- எம்.மைக்கேல்ராஜ்,
நாகர்கோவில்
https://www.youtube.com/watch?v=Xo6xpHZn9rc&feature=share
https://www.youtube.com/watch?v=ZO7iBggZC5k&feature=share
https://www.youtube.com/watch?v=SjnOWATy9AM&feature=share
https://www.youtube.com/watch?v=A01JVLKHbTM&feature=share
உன்னை நீ எப்படி விரும்புகிறாயோ அப்படியே நீ பிறரையும் நேசி - தி பைபிள் நீ யாரை விரும்புகிறாயோ, அவர்களை நீ அதை விட மிக அதிகமாக, மிக வெகு விரைவில், அதை விட அதிகமாக வெறுப்பாய் - ஸ்ரீமத் பகவத்கீதை நீ யாரையும் அதிகமாக நேசிக்காதே, யாரையும் அதிகமாக வெறுக்காதே - திரு குர்-ஆன் OMG, PLEASE DO SOMETHING