Load Image
Advertisement

கூட்டணியை ஒழிக்க அஸ்திரம் வீசுமா ஆணையம்

சேஷன் - இந்த பெயரை உச்சரித்தாலே அனைவருக்கும் தேர்தல் ஆணையம் நினைவுக்கு வரும். ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்படும் அமைப்பு என கருதப்பட்ட காலத்தில் ஆணையத்துக்கு மதிப்பு, மரியாதை, கவுரவத்தை ஏற்படுத்தி தந்தவர். ஆணையத்தின் அதிகாரத்தை பட்டவர்த்தனமாக்கி அலுவலர்களுக்கு தைரியமூட்டி துணிச்சலான செயல்பாடு களால் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையை விதைத்தவர்.


தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும் இன்று வரை தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியாமல் தவிக்கிறது. புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரித்தாலும் இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தவர், தொகுதி மாறியவர், இறந்தவர் பெயர் நீக்கம், செய்யப்படாதது உள்ளிட்ட பிரச்னைகள் நீடித்த படியே செல்கின்றன.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியை சேர்ந்தது; ஆட்சியாளர்களுக்கு பயந்து தவறில்லாத பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் நினைப்பதில்லை.


தவறில்லாத பட்டியல் தயாரிக்காத ஒரு அதிகாரி மீது பதவி உயர்வு தடை செய்தல்; பதவியிறக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும். மாநிலம் முழுவதும் தவறில்லாத பட்டியலை ஒரே மாதத்தில் தயாரித்துக் கொடுத்து விடுவர்.அந்தளவுக்கு கீழ்மட்ட அளவில் களப்பணி செய்ய போதுமான 'சிஸ்டம்' இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துவதில்லை.


தற்போது வாக்காளர்களின் ஆதார் எண்ணை பட்டியலுடன் சேர்ப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. அதை செய்தால் போதும்; ஒருவருக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை இருக்காது.100 சதவீத உண்மையான வாக்காளர்களுடன் தவறில்லாத பட்டியல் தயாராகி விடும். தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்றாதவர்களையும் எளிதாக கண்டு பிடித்து விடலாம். அடுத்ததாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் கூறிய கருத்தை மிக முக்கியமாக தேர்தல் ஆணையம் கவனித்தாக வேண்டும்.

ஏனெனில் ஆளாளுக்கு அமைப்புகள் உருவாக்கி தேர்தல் சமயத்தில் 'லெட்டர் பேடு' கட்சிகளாக உருவெடுக்கின்றன. தங்களுக்கு பின்னால் இத்தனை ஆயிரம் ஓட்டுகள் இருப்பதாக ஜம்பம் பேசி பெரிய கட்சிகளிடம் 'சீட்' பேரம் பேசுகின்றன; 'சீட்' கிடைக்காவிட்டாலும் சில லகரங்களோ கோடிகளோ கிடைத்தால் பங்கிட்டு தேர்தலோடு ஒதுங்கி விடுகின்றனர்.இத்தகைய அமைப்புகள் மற்றும் குட்டி குட்டி கட்சிகளை ஓரங்கட்டவோ புறந்தள்ளவோ ஆட்சியில் அமர துடிக்கும் திராவிட கட்சிகள் நினைப்பதில்லை; மாறாக வாரி அணைத்துக் கொள்கின்றன. என்ன காரணம்? ஓட்டு வங்கி!தேர்தல் கூட்டல், கழித்தல் கணக்கில் ஓட்டு எண்ணிக்கையை ஈடுகட்ட இதுபோன்ற உதிரி கட்சிகள், தவிடு அமைப்புகள் பயன்படும் என்கிற எண்ணத்தில் பக்கத்திலேயே வைத்துக் கொள்கின்றன.

மரியாதைஅரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் ஆணையம் இப்போதே நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.அதேபோல் கூட்டணி கலாசாரத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. இல்லையெனில் நல்லவர்கள் மக்கள் விரும்புபவர்கள் மக்கள் பிரதிநிதியாக வர முடியாத நிலை நிரந்தரமாகி விடும்.நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனித்து போட்டியிட்டு எட்டு சதவீத ஓட்டுகளை அள்ளினார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி மீது வெறுப்பில் இருந்தவர்கள் நடுநிலையாளர்கள் விஜயகாந்த்தை தேர்வு செய்தனர். அவரால் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாததை உணர்ந்த அ.தி.மு.க. அடுத்த தேர்தலில் கூட்டணிக்குள் ஐக்கியமாக்கி ஆட்சியை கைப்பற்றியது.எந்தவொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு சுய பரிசோதனை செய்துகொள்ள விரும்புவதில்லை.ஏனெனில் அந்தக் கட்சிக்காரர்களே அவர்கள் கட்சி சார்ந்த வேட்பாளருக்கு ஓட்டு போடா விட்டால் மண்ணை கவ்வ வேண்டி வரும்; மானம் மரியாதை போய் விடும்.

அறிவிப்புஎங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கின்றனர்; ஒரே நாளில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைய வழியில் சேர்ந்திருக்கின்றனர் என கூப்பாடு போடுகின்றனரே தவிர எந்த கட்சிக்கும் தங்களது ஓட்டு வங்கியை மட்டும் வைத்து தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற திராணி இல்லை.கூட்டணி என்கிற பெயரில் ஏகப்பட்ட கட்சிகளை சேர்த்துக் கொள்கின்றனர்; ஜாதி அமைப்புகளை அரவணைக்கின்றனர்; அந்தந்த தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களிடம் மண்டியிட்டு கைகோர்த்து அவர் ஆதரவு எங்களுக்குதான் என மார்தட்டி வெற்றி பெறுகின்றனர்.

இத்தகைய வெற்றி வாக்காளர்களை ஏமாற்றி மோசடியாக பெறுவதற்கு சமம்.இது அரசியல் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும்; தேர்தல் ஆணையத்துக்கும் புரிந்திருக்கிறது. எப்படி கடிவாளம் போடுவதென திக்குத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது.இதற்கு உதாரணமாக கடந்த லோக்சபா தேர்தலில் கோவையில் மா.கம்யூ., வெற்றி பெற்றதை சொல்லலாம்.கடந்த 2009ல் அ.தி.மு..க.வுடன் கூட்டணி அமைத்து மா.கம்யூ. தேர்தலை சந்தித்தது. தி.மு.க. - காங். கூட்டணி அமைத்திருந்தது. மா.கம்யூ., வேட்பாளர் நடராஜன் 2,93,165 ஓட்டு பெற்று எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் பிரபுவை விட 38 ஆயிரத்து 664 ஓட்டு அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அ.தி.மு.க. தயவு அக்கட்சிக்கு உறுதுணையாக இருந்தது.

வெளுத்தது சாயம்!கடந்த 2014 தேர்தலில் திராவிட கட்சிகளை தவிர்த்து இரு கம்யூ. கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. அப்போதும் நடராஜனே களமிறங்கினார்; அவருக்கு 38,664 ஓட்டுகளே விழுந்தன. அதே மா.கம்யூ., 2019ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கைகோர்த்து மீண்டும் தேர்தல் களம் கண்டது. எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 1,81,234 ஓட்டு அதிகம் பெற்று நடராஜன் வெற்றி பெற்றார். இத்தகைய வெற்றியை அவரே கூட எதிர்பார்க்கவில்லை.அதாவது 2009ல் அ.தி.மு.க. தயவால் வெற்றி; 2019ல் தி.மு.க. கூட்டணியால் வெற்றி; 2014ல் கம்யூ. சுயபரிசோதனை செய்தபோது பின்னுக்கு தள்ளப்பட்டது அக்கட்சி; இப்போது தனித்து நின்றால் அந்த ஓட்டு வங்கியும் கிடைக்குமா என்பதும் சந்தேகமே!இதை ஒவ்வொரு கட்சியும் நன்கு உணர்ந்திருப்பாலேயே கூட்டணி கணக்கு போட்டு கைகோர்க்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் கமல் கட்சி துணிச்சலாக தனித்துப் போட்டியிட்டது. களமிறங்கிய வேட்பாளர்கள் யாருமே மக்கள் அறிந்தவர்கள் அல்ல; கமல் மட்டுமே நட்சத்திர பேச்சாளர்; அவரும் கூட பிரமாண்டமாக பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தவில்லை. திறந்தவேனில் நின்று டார்ச்லைட் மூலம் வெளிச்சத்தை காட்டிச் சென்றார்.கோவையில் அக்கட்சி சார்பில் நின்ற வேட்பாளருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓட்டு கிடைத்தது. கடந்த 2014ல் கம்யூ. கட்சிகள் பெற்ற ஓட்டுகளை காட்டிலும் மும்முடங்கு அதிகம்.இதிலிருந்து என்ன புரிகிறது... அரசியல் கட்சிகளின் வேஷம் கலைய ஆரம்பித்து விட்டது; மக்கள் தெளிந்து வருகின்றனர்.


ஆனால் அரசியல் வியாதிகளை ஓட ஓட விரட்டவும் அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளை தேர்வு செய்யவும் போதிய கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருக்கிறது தேர்தல் ஆணையம்.தற்போதைய நடைமுறையில் அதிக ஓட்டு 'வாங்கியவர்களை' வெற்றி பெற்றதாக அறிவிக்கிறது. அதை தவிர்த்து தேர்தல் களத்தில் நிற்பவர்கள் அனைவருமே தனித்து போட்டியிட வேண்டும் என அறிவிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், அங்கீகாரம் பெற்ற கட்சிகள், அகில இந்திய அளவில் பெரிய கட்சிகள் என பீற்றிக் கொள்ளும் அனைத்துக் கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து மட்டுமே போட்டியிட வேண்டும்.பதிவாகும் மொத்த ஓட்டுகளில் அதிகமான ஓட்டு பெற்றிருந்தால் வெற்றி என்கிற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.அதிகமான ஓட்டு பெற்றிருந்தாலும் எதிர்த்து போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டுகளை சேர்த்தால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாக பெற்றிருந்தால் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

காத்திருப்புஅதாவது ஒரு சட்டசபை தொகுதியில் 6 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்; 5 லட்சம் ஓட்டு பதிவாகிறது என உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.ஒரு வேட்பாளர் 2 லட்சம் ஓட்டு பெறுகிறார். மற்ற வேட்பாளர்கள் 1.5 லட்சம் ஒரு லட்சம் மற்றும் அதற்கு கீழாக மீதமுள்ள 3 லட்சம் ஓட்டுகளை பங்கிட்டுக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.மொத்தம் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 2 லட்சம் ஓட்டு மட்டுமே பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதாவது மூன்றில் ஒரு பங்கு ஓட்டு வாங்கியவர் வெற்றி பெற்றவராகி விடுகிறார்.

அவர் வேண்டாம் என மற்ற வேட்பாளர்களுக்கு பதிவிட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சம்; ஓட்டுப்போடாத ஒரு லட்சம் வாக்காளர்களைச் சேர்த்தால் 4 லட்சம். மூன்றில் இரு பங்கு வாக்காளர்கள் யார் வேண்டாம் என ஒதுக்கினார்களோ அவரே தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டு மாலை மரியாதை அளிக்கப்படுகிறது. இது என்ன நியாயம்? பிரச்னை எங்கே இருக்கிறது; அதை களைய வேண்டாமா; களை எடுக்க வேண்டாமா?நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென மக்கள் நினைத்தாலும் விஷப்பாம்பாய் வளர்ந்திருக்க அரசியல் வியாதிகளின் கூட்டணி கணக்குகளால் முடியாமல் போகிறதே!இதற்கு முடிவு கட்ட வேண்டுமெனில் தேர்தல் களம் காண வேண்டுமென ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டுமெனில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென்கிற அஸ்திரத்தை தேர்தல் ஆணையம் துணிச்சலாக எடுக்க வேண்டும்; அஸ்திரம் பாய வேண்டும்!நேர்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்க்கும் வாக்காளர்களில் நானும் ஒருவனாக காத்திருக்கிறேன்.- ஆ.யோக காந்தன் திருப்பூர்.வாசகர் கருத்து (3)

  • D-7 CHORD -

    முயன்றால் முடியாதது இல்லை

  • Sathesh-Prabu - Madurai (Now in Korea),தென் கொரியா

    நல்ல கருத்து....

  • Sathesh-Prabu - Madurai (Now in Korea),தென் கொரியா

    நல்ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement