dinamalar telegram
Advertisement

குடியிருப்புகளில் வெள்ள நீர் : நிரந்தர தீர்வு காணுமா அரசு

Share

வங்கக்கடலில் உருவாகி, கடந்த வாரம், தமிழகத்தை மிரட்டிய, 'நிவர்' புயல் கரை கடந்து விட்டது. இந்தப் புயல் கரை கடப்பதற்கு முன், அதிதீவிர புயலாக மையம் கொண்டிருந்ததால், அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நல்ல வேளையாக அதிக சேதம் ஏற்படவில்லை.


கடந்த, 2015ல், முன் அறிவிப்பு இன்றி, செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்து விடப்பட்டதால், ஏராளமான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து, மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். உடமைகளை இழந்து, மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைமையும் உருவானது. இம்முறை, அது போன்ற நிலைமை ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி சரியான நேரத்தில் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும் புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்று மற்றும் பெய்த கனமழையால், பயிர்கள் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு உட்பட, சில பாதிப்புகள் ஏற்பட்டன; நான்கு உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.இதற்கு முந்தைய புயல் பாதிப்புகளை ஒப்பிடும் போது, தற்போதைய பாதிப்பு பெரிதல்ல.அதற்கு, தமிழக அரசு மேற்கொண்ட சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். அத்துடன், புயல் பாதித்த கடலுார் மாவட்டம் உட்பட சில பகுதிகளை, உடனடியாக பார்வையிட்ட, முதல்வர் இ.பி.எஸ்., இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதுடன், மற்ற பாதிப்புகளுக்கும் நிவாரணம் உண்டு என கூறியுள்ளது, பொதுமக்களை திருப்தி அடையச் செய்துள்ளது.மேலும், புயல் பாதிப்பு குறித்து, முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என, தெரிவித்துள்ளது, தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு, மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி, நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழுவும் தமிழகம் வரவுள்ளது.வழக்கமாக, புயல் பாதிப்பு நிகழ்ந்து, பல நாட்களுக்கு பிறகே, மத்திய குழு வருவது வழக்கம். அப்படி வரும் நேரத்தில், பாதிப்பின் அளவு பாதி மறைந்து விடும். ஆனால், இம்முறை சீக்கிரமே வருவது, தமிழக அரசின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். அதே நேரத்தில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, தமிழக அரசு அதிகாரிகளும், சரியான முறையில், விரைவாக கணக்கிட்டு, மத்திய குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்து, மத்திய அரசிடம் உதவி பெற்றால், அது, இன்னும் சிறப்பாக இருக்கும்.இருப்பினும், சென்னையின் பல பகுதிகளில், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடியாமல், மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. கடந்த காலங்களில், அரசியல்வாதிகளும், நில மோசடி மாபியாக்களும் செய்த தவறுகள் தான், இந்த அவதிகளுக்கு காரணம் என்றாலும், அதை தவிர்க்க, இனியாவது நீண்ட கால அடிப்படையில், அரசு திட்டங்களை தீட்ட வேண்டும்.மழை நீர் வடிகால் அமைப்புகளை சீரமைப்பதுடன், தேவையான இடங்களில் அவற்றை அமைக்கவும் வேண்டும். மழைக்காலம் துவங்கும் முன்னரே, நீர் வரத்து கால்வாய்களை துார் வாரி சரி செய்ய வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், உறுதியான முடிவுடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில், கட்சி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 2015 வெள்ள பாதிப்புகளுக்கு பின், நீர் வழித்தடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தொடர்ந்து அவை சரியாக கண்காணிக்கப்படவில்லை. எனவே, குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் இருக்க, தனி வடிகால் திட்டம் உருவாக்க வேண்டும். அதற்காக ஒரு குழுவையோ, தனி பிரிவையோ உருவாக்கலாம். அந்தக் குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு செய்து, சரியான தீர்வுகளை அரசுக்கு வழங்கி, அவற்றை செயல்படுத்த வேண்டும். இந்தக் குழுவினர் அளிக்கும் தீர்வானது, நிரந்தரமானதாக அமைய வேண்டும்.


மேலும், மழைக் காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். தண்ணீரை சேமித்து வைப்பதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும். இதன் வாயிலாக, நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதோடு, கோடை காலங்களில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, அரசு பெரும் நிதியை செலவிடுவது தவிர்க்கப்படும். மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் விவகாரத்தில், நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தி, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கை. இந்த விஷயத்திலும், இ.பி.எஸ்., அரசு சிறப்பாக செயல்படும் என, நம்புவோமாக.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement