'மக்களுக்கு எதுவுமே தெரியாது. நாம் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டுவர்' என நினைத்து, அரை வேக்காட்டுக் கருத்துக்களைப் பரப்பி, நம்மை மாங்காய் மடையர்களாக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு, இனி ஒவ்வொரு விஷயத்திற்கும், நாமே களமிறங்கி, சூடு கொடுப்போம்!
'நீட்' தேர்வு முடிவுகள் வெளியானதும், 'வாட்ஸ் ஆப்'பில், டாக்டர் டி.பெரியசாமி என்பவர் பெயரில், ஒரு நீண்ட தகவல் வேகமாக பரவியது. அதைப் படித்து முடித்ததும், அந்தத் தகவல் அவர் தான் அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், அவர் கூறிய கருத்துக்கள் உண்மையானது என்று தெரிந்ததால், நம் மக்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற வகையில் இங்கே கொடுக்கிறேன்:
இந்த பதிவை தொடங்குவதற்கு முன், மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். என் மாணவி ஷ்ரேயா பிரியதர்ஷினி, 'நீட் 2020' தேர்வில், 680 மதிப்பெண்கள் எடுத்து, சேலம் மாவட்டத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில், 'அதர் பேக்வேர்டு கிளாஸ்' எனப்படும் ஓ.பி.சி., பிரிவில், 187வது இடமும் பிடித்துள்ளார்.
என் மாணவிக்கு, 'எய்ம்ஸ்' அல்லது 'ஜிப்மர்' கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இவர் சேலம் மாவட்டத்தில், இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள, சுவாமி விவேகானந்தர் என்ற, மாநில பாடத்திட்ட பள்ளியில் படித்தவர். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்; இதை சொல்வதன் காரணத்தை, பதிவில் அறிந்து கொள்ளலாம். இப்போது விஷயத்திற்கு வருவோம்.
* நீட் 2020 தேர்வு முடிவுகள், 16 அக்டோபர் 2020ல் வெளியிடப்பட்டன. இந்திய அளவில், 56.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் முறையாக, நம் தமிழக மாணவர்கள், தேசிய சராசரியை விட அதிகமாக, 57.44 சதவீத தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.கடந்த ஆண்டின் அகில இந்திய சராசரி, 56.50 சதவீதம்; தமிழகத்தின் சராசரி, 48.77 சதவீதம். ஒரே ஆண்டில், எந்த ஒரு மாநிலத்தின் தேர்ச்சி விகிதமும், 9 சதவீதம் உயரவில்லை நம் தமிழகத்தை தவிர!
* முதல் முறையாக தமிழக மாணவர்கள், தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
* தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் சிறப்பான சாதனை புரிந்து உள்ளனர். இப்போது நீட் தேர்வை பற்றி மக்களிடம் உள்ள சில தவறான திணிப்புகளுக்கு விளக்கம் அளிக்கலாம் என்று நினைக்கிறேன். என் மாணவர்களை இதில், 'கேஸ் ஸ்டடி' ஆக எடுத்துக் கொள்கிறேன்.
முதல் குற்றச்சாட்டு
*நீட் தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன என சொல்லப்படுகிறது; இது முற்றிலும் தவறானது. - நீட் தேர்வு பாடத்திட்டம், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை அடிப்படையாக கொண்டு, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா கொடுப்பது. என்.சி.இ.ஆர்.டி., என்பது, 1961ல் மத்திய அரசால் துவக்கப்பட்ட அமைப்பு. மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவி செய்வதற்காக, மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிடும் பணி, இவர்களுடையது.
என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களை, சி.பி.எஸ்.இ., பயன்படுத்துகிறது; இந்த அடிப்படையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஆந்திரா உட்பட சில மாநிலங்களில், இந்தப் பாடத் திட்டத்தை மேலும் மெருகேற்றி, தங்கள் மாநில பாடப் புத்தகங்களை வடிவமைத்துள்ளனர்; தமிழகத்தில், இந்தத் திட்டத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அப்படி குறைத்து, பாடப் புத்தக தரத்தை வீணடித்து விட்டனர்; இது தான் விஷயம்!
நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் நடத்தப்பட்டிருந்தால், எங்கள் மாணவி ஷ்ரேயா பிரியதர்ஷினி, எப்படி, 680 மதிப்பெண்கள் பெற்று, சேலம் மாவட்டத்தில் முதலிடம் பிடிக்க முடியும்?
இந்த ஆண்டை விடுங்கள்... கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதலிடம் படித்த எங்கள் மாணவி இலக்கியா 593 மார்க் எடுத்தார்; இவரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் தான். கடந்த, 2018ம் ஆண்டும், சேலம் மாவட்டத்தில், 'நீட்' தேர்வில் முதலிடம் பெற்ற எங்கள் மாணவர் சரத்குமாரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் தான்.இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட, 180 கேள்விகளில், 175 கேள்விகள், நம் தமிழக திருத்தப்பட்ட மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மிகச் சிறப்பான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தைக் கொடுத்த, நம் மாநில அரசுக்கு, மிகப்பெரிய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
இரண்டாவது குற்றச்சாட்டு
*நீட் தேர்வு, வட மாநில மாணவர்களுக்கு, நம் தமிழகத்தின் எம்.பி.பி.எஸ்., இடங்களை கொடுப்பதற்காக, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.- நீட் தேர்வு, ஒரு தேர்தெடுக்கப்படும் முறையே! தமிழக மாநில அரசு கல்லுாரிகளில் உள்ள 85 சதவீத இடங்கள், தமிழக மாணவர்களுக்கு மட்டும், 69 சதவீத இடஒதுக்கீட்டுடன் நிரப்பப்படும். இது, நீட் தேர்வு வருவதற்கு முன்பிருந்த அதே நிலையாகும்.
மூன்றாவது குற்றச்சாட்டு
*உயர் ஜாதி வகுப்பினருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்களை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது என்பது.- கடந்த, 2019ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த 3050 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 136 பேர் மட்டுமே, உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்தனர். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் இது எப்படி சாத்தியம்?
நான்காவது குற்றச்சாட்டு
*உயர் ஜாதியினர் மற்றும் பணக்காரர்கள் மட்டுமே, நீட் தேர்வை எழுதி, வெற்றி பெற முடியும்.- இது உண்மையென்றால் ஷ்ரேயா, இலக்கியா மற்றும் சரத்குமார் போன்ற கிராமப்புறத்தைச் சார்ந்த, நடுத்தர வர்க்க மாணவர்கள் எப்படி மதிப்பெண்கள் வாங்கி சாதிக்க முடிந்தது?
எனவே, நீட் தேர்வை பற்றிய வெறுப்பையும், தேவையில்லாத பயத்தையும் கிளப்புவதை விட்டு விட்டு, மாணவர்களுக்கு சாதனை எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டுங்கள்.நம் தமிழக மாணவர்கள், சாதனையாளர்கள்; கடின உழைப்பாளிகள்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லுாரிகளிலும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களிலும், குறைந்தது, 50 சதவீத இடங்களை, நம் தமிழக மாணவர்கள் பிடிப்பர். நம் மாணவர்களின் திறன் அளப்பரியது!- இப்படி, டாக்டர் பெரியசாமி சொல்லி இருப்பதாக, அந்தப் பதிவில் படித்தேன்!நண்பர்களே... பெற்றோரே...! நாம் அனைவரும், நம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வானத்தை வசப்படுத்துவோம். நம் மாணவர்களுக்கு வானம் என்னும் இலக்கு தொட்டு விடும் துாரம் தான்!- எஸ்.பாலசுப்ரமணியன், காஞ்சிபுரம்.