dinamalar telegram
Advertisement

லாரியில் பதுக்கியதைக் கொஞ்சம் இப்படி திருப்புங்களேன்!

Share

பதினாறு வயதினிலே திரைப்படத்தில், சப்பாணி, டீக்கடையிலே சீப்பெடுத்து தலை வாரியபடி, 'தலை கலைஞ்சா வாரிக்கச் சொல்லி, மயிலு சீப்பு கொடுத்திருக்கு' என்பான். அப்போது பரட்டை அவனைப் பார்த்து, 'சீப்பு கொடுத்தாளே, சில்லரை கொடுத்தாளா...' என, நக்கலாகக் கேட்பான். இந்த வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது. காரணம், இது தான்: ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள மருத்துவப் படிப்பைப் பெற்றுத் தர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்; ஆளுனரை சந்தித்தனர். ஏதோ தாங்கள்தான், ஏழைப் பங்காளன் என்பது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கினர்.

உயர்ந்த நோக்கம்இப்போது அந்த, 7.5 சதவீத ஒதுக்கீடு கிடைத்துள்ளது; சந்தோஷம்; சில அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. பிரச்னையே இங்கே தான் துவங்குகிறது. ஏழை அரசு பள்ளி மாணவர்கள், 'சீட்' கிடைக்கவில்லையே என்று வருந்தியது உண்மைதான். ஆனால், அப்படி போராடி பெற்ற சீட்களைப் பயன்படுத்திக் கொள்ள, இந்த ஏழைகளால் முடியவில்லை.காரணம், கல்லுாரியில் சேர, கட்டணம் கட்டணுமே... அதற்கான, 'டப்பு'க்கு எங்கே போவது!தொழில் படிப்பு கொடுக்கும் சுயநிதி கல்லுாரிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க அமைக்கப்பட்டுள்ள குழு, அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டணம், இவர்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.

அந்த காரணத்தால், அதை ரத்து செய்து, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவு இட வேண்டும் என்று, கிரகாம் பெல் என்பவர், பொதுநல மனு தந்துள்ளார். இதைப் பரிசீலித்த அமர்வு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்து, மிக அருமை.அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது, அரசின் உயர்ந்த நோக்கத்தைக் காட்டுகிறது. பல தடைகளுக்குப் பிறகு, இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.அதற்குப் பிறகும், கட்டணத்தைக் காட்டி, அடுத்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் தயாராகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான், நீதிபதிகள் அதிரடியாக சில கருத்துக்கள் கூறியுள்ளனர். அதாவது, உள் ஒதுக்கீட்டில் சீட் கிடைத்த மாணவன் படிப்பையும் தொடரவேண்டும்; பொருளாதார நெருக்கடியால் படிப்பு பாதியில் நிற்கக் கூடாது.கண்ணில்லாதவனுக்கு கண் பார்வை கிடைத்து அது உடனே பறிபோனது போல, வாராது வந்த மாமணியாய் கிடைத்த இந்த மருத்துவ சீட் கையில் காசில்லாததால் கனவாகிப் போவது எத்தனை கொடுமை... அதற்கு ஒரு அருமையான யோசனை சொல்லியுள்ளனர் மாண்புமிகு நீதியரசர்கள்.

கன்டெய்னர் லாரிகள்'அன்னசத்திரம் ஆயிரம் நாட்டலிலும், ஆலயம் பதினாயிரம் அமைத்தலிலும், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க செல்வந்தர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்' என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.அரசியல்வாதிகள், கன்டெய்னர் லாரிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை, இந்த ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி, பாவத்திற்கு பரிகாரம் தேடச் சொல்லிஉள்ளனர். நல்லவனாக சினிமாவில் வேஷம் கட்டும் நடிகர்கள், கோடி கோடியாய் சம்பாதித்து குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தை, படிப்புக்கு தானமாகக் கொடுத்து, புண்ணியம் தேடச் சொல்லியுள்ளனர். நாட்டிலுள்ள செல்வந்தர்கள் எல்லாரும், இப்படிப்பட்ட ஏழை மாணவர்களை தத்து எடுத்து, அவர்களின் கல்விக் கனவை நனவாக்க உதவும்படி, உருப்படியான யோசனை கூறியுள்ளனர்.

கல்வி உதவி பெறும் மாணவர்களிடம், கிராமப்புறங்களில் பணியாற்ற உத்தரவாதம் பெற்று அரசு உதவலாம் என்ற ஆலோசனையையும், நீதிபதிகள் கூறியுள்ளனர். அவர்களின் தொலைநோக்குப் பார்வை பாராட்டத் தக்கது!'தினமலர்' நாளிதழில் வந்த செய்தி கண்டு, மூத்த வழக்கறிஞர் ஒருவர், ஒரு மாணவனின் படிப்புக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்' என்று சொன்ன அண்ணாதுரையின் பெயர் சொல்லி கட்சி நடத்தும் அரசியல்வாதிகள், இந்த ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனச் சொல்வதில் எந்தத் தவறுமே இல்லை.

போய் விடுங்கள்தெருவிளக்கில் படித்தும், செருப்பு தைத்தும், கூலி வேலை செய்தும் படித்தது அந்தக் காலம். இன்று படிக்க வேண்டும் என்றால், வெறும் இலட்சியங்கள் போதாது; சில பல லட்சங்களும் வேண்டுமய்யா!மருத்துவப் படிப்பு என்பது கொம்புத் தேன் தான். அதற்காக, '40 ஆயிரம் ரூபாய் கட்ட வக்கில்லாதவன், எதற்கு மருத்துவம் படிக்கணும்?' என்ற இருமாப்பு பேச்செல்லாம் பேசுபவர்கள், இந்த இடத்தை விட்டுக் கிளம்பி, அப்பால் போய் விடுங்கள்! ஏனெனில், நேற்று நீங்கள் நெஞ்சைப் பிடித்து, வலியால் துடித்துப் படுத்தபோது, உங்களுக்குச் சிகிச்சை அளித்தது, இது போன்ற டாக்டர்களே... அவர்கள் தனியாரில் வேலை செய்தால் என்ன, அரசு வேலை செய்தால் என்ன... டாக்டர், டாக்டர் தானே? நீங்களே உங்கள் நெஞ்சைக் கிழித்து தையல் போட்டுக் கொள்ள முடியுமா அல்லது உங்கள் மகன் தான் செய்து விட முடியுமா?

வாய்மொழி சட்ட விதிதேர்தல் நேரத்தில், லாரியில் பணம் கொண்டு சென்ற அன்பான அந்த நாதனுக்கு, அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? 'மாஜி' அமைச்சர் ஒருவர் வீட்டில், 'ரெய்டு' நடந்ததே... எதற்காக?தற்போதைய அமைச்சர் ஒருவர் வீட்டிலும் ரெய்டு நடந்ததே... எதற்காக?எல்லாம் பணப் பதுக்கல் விவகாரம் தான்!நெஞ்சைப் பிடித்துப் படுத்துக் கொண்ட மேற்படி பார்ட்டி, தன் மகனை, அரசியல் களத்தில் இறக்கி, டில்லிக்கு அனுப்ப நினைத்து காய் நகர்த்தினார். உளவுத் துறை மோப்பம் பிடித்து அவர் வீட்டில் ரெய்டு நடத்தியது. 'அய்யகோ...' எனக் கதறி ஆளுங்கட்சிக் காலில் விழுந்து, தன்னையும், தன் மகனையும் காப்பாற்றிக் கொண்டார். அவரிடம் அவ்வளவு பணம் எப்படி சேர்ந்தது?

'டெண்டர்' ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய், பெரிய தலைக்கு, 'வெட்ட' வேண்டும் என்ற வாய்மொழி சட்ட விதியைக் கொண்டு வந்த 'மகான்' யார்? இதில் அதிகாரிகள் வேறு, தங்கள் பங்குக்கு வாரிச் சுருட்டுகின்றனர்.இதெல்லாம் எங்கே போகிறது? படுக்கைக்கு அடியில், தெய்வப் படங்கள் மாட்டியிருக்கும் அலமாரிகளுக்குப் பின்னால், கார் ஷெட்டில், பாதாள அறையில், ஸ்விஸ் வங்கியில் எனச் சென்று விடுகின்றன. எனவே அரசியல்வாதிகளே... 'தேன் அள்ளுபவன், புறங்கையை நக்கத் தான் செய்வான்' என்ற பழமொழியைச் சொல்லி, எங்கள் மனதை சமாதானப்படுத்துவதை நிறுத்தி விட்டு, சேகரமானவர்கள், அன்பானவர்கள், முருகனானவர்கள், செல்வமானவர்கள், செந்திலானவர்கள், மணியானவர்கள், பழனியானவர்கள் என, பலதரப்பட்டவர்கள், கொஞ்சம் லாரியைத் திறந்து அல்லது படுக்கையை நகர்த்தி, சில பல லட்சங்களை இப்படி ஏழை மாணவர்களின் நலனுக்குத் திருப்பலாமே! - எம்.பி.ராமன், மதுரை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (10)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement