dinamalar telegram
Advertisement

ஜெயில்ல போட்டு களி தின்ன வைங்க சார்!

Share

அரசியல் என்றால் என்ன என, தி.மு.க.,வினரிடம் கேள்வி கேட்டால், 'நடிக்கணும்... நாம் நடிக்கிறோம் என, மக்களுக்கு தெரிந்தாலும், நாம் சளைக்கக் கூடாது... அதை, அவர்கள் நம்புகிற வரை நடிக்கணும்' என்று தான், பதில் அளிப்பர்.ஒரு பொய்யை திரும்ப திரும்பக் கூறி, அதை உண்மை என, மக்களை நம்ப வைப்பது, 'கோபெல்ஸ்' திட்டம்.

பா.ஜ.,வினர் வேல் யாத்திரை நடத்துவதை, தி.மு.க., விமர்சனம் செய்தது. கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில், யாத்திரை, ஊர்வலம் இத்தியாதிகளுக்கு எல்லாம், அரசு அனுமதி அளிக்கவில்லை. அதை மீறி வேல் யாத்திரைநடக்கிறது.கூட்டம் காட்ட வேண்டும் என்ற லட்சியம் தானே ஒழிய, 'நானும் ஜெயிலுக்குப்போறேன்' கதையை, பா.ஜ., செய்யவில்லை. ஆனால் இங்கே, 'தி.மு.க.,கம்பெனி'காரர்கள் கதையைக் கேளுங்கள்.

கருணாநிதியின் டெக்னிக்கொரோனா நோய் தொற்று பரவும் என்பதற்காக, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கட்சிக் கூட்டம் நடத்தினார், ஸ்டாலின். அவரின் மகனோ, இப்போது ஊருக்கு ஊர் சென்று கூட்டம் கூட்டி, நெரிசல் ஏற்படுத்தி, கொரோனா நோய் தொற்று பரவாது என்பதை, உரக்க சொல்லி வருகிறார்.இருவரும், இப்படி ஏறுக்கு மாறாய் நடந்துக் கொள்வது ஏன்? அரசியல் செய்கின்றனராம்... எவ்வழியிலாவது, மக்களின் கவனத்தில் இருக்க வேண்டும்; அவ்வளவு தான்!

குறுகிய வட்டத்தைத் தாண்டி, சிந்திக்கவே தெரியவில்லை, அப்பனுக்கும், பிள்ளைக்கும்!உதயநிதி ஊர்வலம் செல்வது எதற்காக? போலீசார், அவரை கைது செய்வர். அனைத்து ஊடகங்களிலும், அவரின் பெயர் இடம்பெறும். கட்சியிலும், அரசியலிலும், தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்ய முடியும்.இதே வேலையை, அக்கட்சியின் பொதுச் செயலர் ஏன் செய்யவில்லை?


தனக்கு அடுத்து, தன் மகன் உதயநிதிக்கு தான், கம்பெனி... அதாங்க, கட்சி... அதை நடத்தும் உரிமை இருக்கிறது. கட்சியில் இருக்கும் மற்றவர்கள் யாரும், வாயே திறக்கக் கூடாது எனச் சொல்வதற்காக, ஸ்டாலினின் உத்தி இது! துரைமுருகன், நேரு போன்ற, தி.மு.க., மூத்த தலைவர்கள் எல்லாம், நேற்று முளைத்த உதயநிதி முன் கைக்கட்டி நிற்க வேண்டும்; சாமரம் வீசத் தான் வேண்டும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதல் மாங்காயை, உதயநிதியை முன்னிறுத்துவது; அது நடந்தேறி விட்டது. இரண்டாவது மாங்காய் அடிப்பதற்காக தான், இந்த பிரசார நாடகம்! அதாவது ஊடக வெளிச்சத்திலேயே இருப்பது! இது, கருணாநிதியின் டெக்னிக்! ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஊடகங்களில் அவரின் பெயர் இடம் பெற்றபடி இருக்கும்.


தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர்., படுத்தபடியே ஜெயிக்கும் அளவிற்கு, விஸ்வரூபம் எடுத்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சி அந்தஸ்தில் யார் இருந்தாலும், காணாமல் போய் இருப்பர்.

'லுாப்' லைனில் தலைஆனால் கருணாநிதி, தன்னை விளம்பரப்படுத்தி, அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.சர்க்காரியா விசாரணை கமிஷன் முதல், திருச்செந்துார் நீதி கேட்பு ஊர்வலம் வரை, கருணாநிதி ஏதோ ஒரு வகையில், அரசியலில் தன் இருப்பை, நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தார். அது தான், அவரின் பலம்!

கல்லுக்குடி பெயர் மாற்றத்திற்காக, 'ரயிலில் தலை வைத்து சாவேன்' என்று பீற்றியபடி, ரயிலே வராத, 'லுாப்' லைனில் தலை வைத்துப் படுத்தார், கருணாநிதி. ரயில்வே போலீஸ் கைது செய்தால், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வாய்தா போடுவர் என பயந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே நின்றிருந்த தமிழக போலீசாரிடம், காமெடி நடிகர் வடிவேல் பாணியில், 'என்னை கைது செய்யுங்கள்' என, கெஞ்சினார்.

அதனால் தமிழக போலீசார், கருணாநிதியை கைது செய்து, 15 நாட்கள், 'ரிமாண்ட்' போட்டனர். உடனே, ஜாமின் பெற்றார் கருணாநிதி. அதேபோல், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை துாண்டியதற்காக, கருணாநிதியை, பாளையங்கோட்டை ஜெயிலில் போட்டார், அன்றைய முதல்வர் பக்தவத்சலம்.

ஊரே சிரிக்க, 'ஐயோ... அம்மா, கரப்பான் பூச்சி, பல்லி, பாச்சான் என்னை கடிக்கப் பாக்குது' என கத்தியபடியே, ஜாமினில் தப்பி ஓடினார், 'வீராதி வீரர்' கருணாநிதி. 'இந்திய அரசியல் சாசன திட்டத்தை கொளுத்துவோம்' என போராடியதால், 15 நாள், 'ரிமாண்ட்' செய்தனர்.

பின், 'அய்யா சாமி... ஜட்ஜ் ஐயா, நாங்கள் வெறும், 'ஜெராக்ஸ்' பேப்பரை தான் எரித்தோம்; எங்களை மன்னித்து, ஜாமின்தாருங்கள்' என்று மன்றாடியதைக் கண்டு, 'களுக்' என நகைத்த நீதிபதிகள், அவரை ஜாமினில் விடுவித்தனர். இப்படி, அக்காலத்தில் போராடினால், நீதிமன்றத்தில் நிறுத்தி, 15 நாட்கள் ஜெயிலில் அடைப்பது வாடிக்கை.

இந்த, 15 நாள் ஜெயிலுக்கு பயந்து அக்காலத்தில், அர்த்தமில்லா போராட்டங்களை நடத்த, அரசியல் தலைவர்கள் அஞ்சினர். இன்று, தேவையில்லாமல் போராடும் போலித் தலைவர்களையும், 200 ரூபாய் தொண்டர்களையும், சும்மா ஒப்புக்கு, போலீசார் கைது செய்கின்றனர்.

பிரியாணிக்கு ஆசைகாலை, 11:00 மணிக்கு கைது செய்து, 'குளுகுளு' கல்யாண மண்டபத்தில் அடைத்து, பகல், 1:00 மணிக்கு, சுடச்சுட மட்டன் பிரியாணி கொடுத்து, மாலை, 5:00 மணிக்கு சூடாக டீயும், பொறையும் கொடுத்து விடுவிப்பதால், மறுநாளும், பிரியாணிக்கு ஆசைப்பட்டு போராடுகின்றனர். இனிமேல், போராடும் தலைவர், தொண்டர் அனைவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, 15 நாள் ரிமாண்ட் பெற்று, ஜெயிலில் களி திங்க வைத்தால், எல்லாரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, போராட பயப்படுவர்.

ஏனெனில், ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று, வசதிமிக்க இல்லத்தில் வாழும் உதயநிதி போன்றோர், 'படம் காட்டுவதற்காக' போராட்டம் நடத்த மாட்டார்கள். 15 நாள் பிழைப்பு போய் விடும் என, '200 ரூபாய்' தொண்டர்களும், தங்களுடைய பிழைப்பை தேடி போய் விடுவர்.அதனால், போராட்டம் நடத்துவோரை, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!

- அ.ஞானசுந்தரம், காஞ்சிபுரம்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (26)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement