dinamalar telegram
Advertisement

பராக்... பராக்...! வருகிறார் ஊழலுக்கெல்லாம் அரசி....

Share

தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகள் எந்த அளவுக்குக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி இருக்கின்றன என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ஊழல் குற்றவாளி சசிகலாவின் விடுதலை குறித்து பரப்பப்படும் யூகங்களும், வதந்திகளுமே.


அது மட்டுமல்ல... அந்த அரசியல் கட்சிகள், நேர்மையாக வாழத் துடிக்கும் சாமானிய மக்களைப் பார்த்து, 'இந்த கேடு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' என்றும் வேறு கேட்கத் துவங்கி இருக்கின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்று, சிறையில் செக்கிழுத்து, உணவாக களியும் தின்று, சுதந்திரம் பெற்றுத் தந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, காமராஜர், சத்திய மூர்த்தி, கக்கன் போன்றவர்களுக்குக் கூட, இது போன்ற விளம்பரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.தியாகத் தலைவி, தங்கத் தலைவி, தங்கத் தாரகை என்று என்னென்ன பட்டங்கள்!

எது எதை தியாகம் செய்தார் சசிகலா?எந்த ஒரு தொழிலும் செய்யாமல், சட்டசபை, பார்லி., உறுப்பினராகவும் இல்லாமலேயே, 1,800 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்திருக்கிறார் என்றால், மேற்படியாருக்கு ஜெயலலிதா, ஒரு எம்.எல்.ஏ., பதவியோ, எம்.பி., பதவியோ கொடுத்திருந்தால் என்ன ஆகி இருக்கும்! இந்தியாவையே கூறு கட்டி விற்று முதலாக்கி இருப்பாரே!சிறப்பு நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உண்மையில் இந்த ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்கவில்லை; கருணை தான் காட்டி இருக்கின்றன.

நான்கு பேர் கூட்டு சேர்ந்து ஒரு சதியில் ஈடுபட்டிருக்கும் போது, நான்கு பேருக்கும், ஒரே மாதிரியான தண்டனை தானே கொடுத்திருக்க வேண்டும்!ஜெயலலிதாவுக்கு மட்டும் நான்கு ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி அபராதம்; மற்ற கூட்டாளிகளுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 10 கோடி அபராதம். வேடிக்கையாக இல்லை?அது மட்டுமல்ல. இவர்கள் ஊழல் புரிந்து சேர்த்த சொத்துக்கள் முடக்கித் தான் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பறிமுதல் செய்யப்படவில்லை.அப்படி முடக்கி வைத்து இருக்கும் சொத்துக்களுக்கு, வருமான வரி கட்டி விடுகிறேன் என்றால், அந்த வரித் தொகையை வசூலித்துக் கொண்டு, முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தையும் விடுவித்து விடுவர் போலும்!

சட்டத்தை மாற்றி எழுதுங்கள் ஐயா!இப்படிப்பட்ட சட்டக் குளறுபடிகளும், கோளாறுகளும் நீடித்துக் கொண்டிருக்கும் வரை, இந்த நாடும், இந்த நாட்டு அரசியலும், இந்த நாட்டு அரசியல்வாதிகளும், இந்த நாட்டு அரசு அதிகாரிகளும் திருந்தும் வாய்ப்பே இல்லை. திருடர்களும், கொள்ளைக்காரர்களும், அவரவர் திருடிய பணத்திற்கேற்ப வருமான வரி கட்டி விட்டால், திருடியதெல்லாம் புனிதமாகி விடும் போல!'திருடிய மொத்தத்தையும் அரசிடம் கொடுங்கள்' என்பது போல சட்டம் இயற்றினால், அரசு கஜானாவும் நிரம்பும்; பணமும் வெள்ளையாகி விடும்; மக்களுக்கான திட்டங்களுக்கும் கையைச் சொறிய வேண்டிய அவசியம் ஏற்படாது அரசுக்கு!ஐரோப்பாவில் ராபின் ஹூட், கேரளத்தில் சேங்கண்ணன், மத்திய பிரதேசத்தில் பூலான் தேவி, தமிழ்நாட்டில் மலையூர் மம்பட்டியான் மற்றும் வீரப்பன் ஆகியோர் கொள்ளைக்காரர்களாக இருந்தாலும், மக்களிடையே அவர்களுக்கு என்று தனி மரியாதையும் செல்வாக்கும் உண்டு.


காரணம், அவர்கள் கொள்ளையடித்ததை அவர்களே வைத்துக் கொள்ளவில்லை. இல்லாத ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து பரவசம் அடைந்தனர்; புளகாங்கிதம் அடைந்தனர். ஆனால், சசிகலா சமாசாரம் அப்படிப்பட்டதல்ல.ஊழல் புரிந்து குவித்த கோடிகளை, தன் ரத்த சம்பந்த உறவுகளோடு மட்டும் தான் பகிர்ந்து கொண்டாரே தவிர, எந்த ஏழை எளியவருக்கும் சல்லிக் காசு கொடுத்து உதவவில்லை.இப்படிப்பட்ட ஓர் ஊழல் குற்றவாளிக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்கக் காத்திருக்கும் ஒரு கூட்டத்தை, உலகில், தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் காண முடியாது.ஆட்சி புரிய, தகுதியற்ற, தப்பான பேர்வழிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதன் பலன் இது.

நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது...அதில் வீராணம் குழாய்கள், மேம்பாலங்கள், வோல்டாஸ் பில்டிங், காலி மனைகள், அம்ருதாஞ்சன் பில்டிங், நஞ்சை, புஞ்சை நிலங்கள் என, ஏகப்பட்டது கண் முன்னே வந்து சென்றன. அதன் விளைவு தான் இந்தக் கட்டுரை.'இன்றைய பொழுதில், 5,000 கொடுத்தால், என் செலவுக்காச்சு; போடுகிறேன் ஓட்டு' என்று நீங்கள் நினைப்பதில் தவறல்ல; ஏனெனில், கட்சிகள் கொடுக்கப் போகும் காசு அனைத்தும், வியாபாரிகளையும், தொழிலதிபர்களையும், சாமானிய அன்றாடங்காய்ச்சிகளையும் அடித்துப் பிடுங்கி, பதுக்கியது தானே!எனவே, நீங்கள் போடும் ஓட்டை, கள நிலவரம் அறிந்து, ஐயாயிரத்தைத் தாண்டி, நிரந்தரமாக உங்களுக்கு வேலை, வருமானம் தரப் போவது யார் என்பதைச் சிந்தித்துப் பார்த்து போடுங்கள்!புரிந்திருக்குமே உங்களுக்கு! - 'பிரமோஸ்' பக்கிரி

Share
Advertisement

Home வாசகர் கருத்து (45)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement