dinamalar telegram
Advertisement

சட்டசபை தேர்தல் கூட்டணி : புதுக்கணக்கு துவக்குமா பா.ஜ.,?

Share

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், இம்மாதம், 6ம் தேதி முதல் நடத்தி வரும், 'வெற்றிவேல்' யாத்திரைக்கு, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அரசு அனுமதி தரவில்லை. கொரோனா பரவலை காரணம் காட்டி, அனுமதி மறுத்தது. இதனால், 2019 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., - பா.ஜ., இடையே உருவான, தேர்தல் கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், பா.ஜ., உடனான கூட்டணியை, அ.தி.மு.க., முறிக்கலாம் என்ற யூகங்களும் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில், 'தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி தொடரும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் அறிவித்து விட்டனர்.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, மற்ற மாநிலங்களில் எல்லாம், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் வெளியாகி, மோடி தலைமையில், மீண்டும் மத்தியில் ஆட்சி அமைந்த நிலையில், தமிழகத்தில் வெளியான மாறுபட்ட தேர்தல் முடிவுகள், பலரையும் யோசிக்க வைத்தன. பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்ததால் தான், அ.தி.மு.க.,வே தோல்வி கண்டது என்ற விமர்சனங்களும், அக்கட்சிக்குள்ளேயே எழுந்தன. ஆனால், அதை எல்லாம் புறந்தள்ளி, சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ற வகையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவும், 'உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டியது போல, தமிழகத்திலும், வாரிசு அரசியலை ஒழிப்போம்' என, திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன் வாயிலாக, தி.மு.க.,வின் வாரிசு அரசியலை, அவர் விமர்சித்துள்ளதுடன், அந்தக் கட்சிக்கு எதிராக சவாலும் விடுத்துள்ளார்.

முதன் முறையாக, 1998 லோக்சபா தேர்தலின் போது தான், பா.ஜ., -- அ.தி.மு.க., இடையே கூட்டணி அமைந்தது. அப்போது, அ.தி.மு.க., 18 இடங்களிலும், பா.ஜ., மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்பின், 2001 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து, 21 இடங்களில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. அதற்கு முன், 1996ல், பத்மநாபபுரம் தொகுதி யில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேலாயுதம் தான், அந்தக் கட்சியின் முதல் சட்டசபை உறுப்பினர். அப்போது தான், சட்டசபையில் தன் கணக்கை பா.ஜ., துவக்கியது.

தற்போது முதல் முறையாக, சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது. இதன் வாயிலாக, தேசியக் கட்சியான, பா.ஜ., தமிழகத்தில் பலமாக கால்பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கவும் மும்முரமாக உள்ளது. அதற்கேற்ற வகையில், பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், 'ஒரு சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு இருந்த அசாமில், பா.ஜ.,வால், ஆட்சி அமைக்க முடிந்தது. அதேபோல, தமிழகத்திலும், பா.ஜ.,வின் தாமரை மலர வேண்டும்' என, நாடு முழுதும் உள்ள கட்சி நிர்வாகிகள் விரும்புவதாக, தங்கள் ஆசையைசூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா இருந்த வரை, பா.ஜ., தலைவர்களுடன் சுமூகமான நட்புறவு கொண்டிருந்தாலும், தேர்தல் என்று வந்து விட்டால், அவரின் முடிவு தன்னிச்சையாகவே இருக்கும். அந்த முடிவு பல முறை, அவருக்கு வெற்றியையும் தந்துள்ளது. உதாரணமாக, 2014 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, மொத்தமுள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், நாகர்கோவில், தர்மபுரி தவிர மற்ற, 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அவரைப் போன்ற துணிச்சல் தற்போதைய, அ.தி.மு.க., தலைமைக்கு இல்லை என்பதாலும், மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ., அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலும், பா.ஜ., கூட்டணியை, சட்ட சபை தேர்தலிலும் தொடர முடிவு செய்துள்ளது.


'நீட்' தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற விவகாரங்களில், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில், அ.தி.மு.க., அரசு இருந்தாலும், கூட்டணி விஷயத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தலையும், சட்டசபை தேர்தலையும், தமிழக வாக்காளர்கள் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது தான் வழக்கம். இதுவரை நடந்த தேர்தல்களின் முடிவுகள் அவற்றை வெளிப்படுத்தி உள்ளன.அதனால், அ.தி.மு.க., - - பா.ஜ., இடையேயான கூட்டணி, சட்டசபை தேர்தலில் சாதிக்குமா; அதற்கு மக்கள் பேராதரவு தருவார்களா என்பது, தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரிய வரும். இந்த விஷயத்தில், சட்டசபையில், மீண்டும் கணக்கைத் துவக்குமா பா.ஜ., என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement