நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த கட்சி எங்கள் கட்சி' என, இன்றளவும் பெருமைப்பட்டு கொள்கிறது காங்கிரஸ். அந்தளவுக்கு தன்னலம் கருதாத தொண்டர்கள்,
தலைவர்களை கொண்டிருந்த இயக்கமாக காங்., ஒரு காலத்தில் திகழ்ந்ததை, யாரும் மறுக்க முடியாது.அந்த நிலை தற்போதும் உள்ளதா என்ற கேள்விக்கு இடமில்லை என்பது தான், அந்த கட்சியினரின் பதில் தற்போது!
காமராஜர் வழியில் மூப்பனார்
கடந்த, 1996ல் மறைந்த காங்., மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு, நாட்டின் உயரிய
பொறுப்பான பிரதமர் பொறுப்பு தேடி வந்தது. ஆனால், அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். அதற்கு முன், காமராஜருக்கும் அதே, 'ஆபர்' வந்தது; பல மொழிகள் பேசும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்நாட்டில், தனக்கு ஆங்கிலம், ஹிந்தியில் சரளமாக பேச முடியாது
என்பதால், காமராஜரும் மறுத்து விட்டார்.
கேரளா நிலை இங்கில்லை
அப்படிப்பட்ட காங்., தன்னலம் மிக்க தலைவர்களால் கரைந்து, கூட்டணி சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, சில 'சீட்'டுகள் வேண்டும் என, தி.மு.க.,விடம் மன்றாடி
கொண்டிருக்கிறது. கேரள காங்.,கில் கூட கோஷ்டி பூசல்கள் உண்டு. ஆனால், தேர்தல் என வந்து விட்டால், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதாலா, வயலார் ரவி, முன்னாள்
மத்தியமைச்சர் அந்தோணி என, எல்லா கோஷ்டியினரும் ஒன்று சேர்ந்து,வெற்றிக்காக
பாடுபடுவர்.
அந்த நிலைமை தமிழகத்தில் இல்லை. தமிழக காங்., தலைவர்களாக ஜி.கே.மூப்பனார்,
வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தவரை, கோஷ்டிகள் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்றனர். ஆனால், அந்த நிலைமை தற்போது இல்லை.
தற்போதுள்ள சில தலைவர்கள் தங்களையும், தங்கள் வாரிசுகளையும் வளர்த்து விடுவதிலும், வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வமாக உள்ளனர். கடந்த சில தேர்தல்களாகவே முன்னணி தலைவர்கள் தங்களுக்கு சீட் பெறவும், தங்களுக்கு கிடைக்காத பட்சத்தில் மனைவி, மகன், மகள்களுக்கும், தவறும்பட்சத்தில் ஆதரவாளர்களுக்கும் சீட் பெற்று தரவும் தீவிரமாக
உள்ளனர்.
தொண்டர்கள் சோர்வு
இதனால், கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள், நிர்வாகிகள் சோர்ந்து போய் விடுகின்றனர்.
கட்சியை வளர்க்கும் ஆர்வத்திலிருந்து பின்வாங்கி விடுகின்றனர். 'காமராஜர் ஆட்சி
அமைப்போம்' என, மூச்சுக்கு முன்னுாறு முறை கூக்குரல் இடும் காங்., தலைவர்கள், அதற்காக முயற்சிகள் மேற்கொண்டுள்ளனரா?
கடந்த, 50 ஆண்டுகளில் கட்சியை வளர்த்து, ஆட்சியை பிடிக்க ஆர்வம் காட்டினரா... இல்லை!
சமீப காலமாக மக்கள் கோரிக்கைகளுக்காக, போராட்டங்களை கூட காங்., நடத்தவில்லை.
அரசியல் களத்தில் இருப்பதை காட்டிக் கொள்ள ஒவ்வொரு கட்சியும், மாநில, மாவட்ட மாநாடு, பொதுக் கூட்டம், பிரசாரங்களை நடத்தும் நிலையில், காங்., வேடிக்கை பார்த்து நிற்கிறது.
அதிகரிக்கவில்லை
மூப்பனார், தமிழக தலைவராக இருந்த போது, தனித்து கட்சியை வளர்த்து, தனித்தே தேர்தலை சந்திக்கலாம் என ஆர்வம் காட்டினார். ஆனால், அதை தேசிய தலைமை ஏற்க மறுத்து, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதிலேயே ஆர்வம் காட்டியது. அதனால் தான், இந்த, 50 ஆண்டுகளில், காங்., கட்சி தன் ஓட்டு வங்கியை அதிகரித்து கொள்ள முடியவில்லை.
புறக்கணிப்பு
அதுமட்டுமின்றி தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினரின் பாதுகாவலனாக பறைசாற்றி கொள்ளும் தமிழக காங்.,கில், கக்கன், இளைய பெருமாள், மரகதம் சந்திரசேகருக்கு பிறகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் தலைவர்களாக முடியவில்லை. இவர்களும்
தாழ்த்தப்பட்ட சமூகத்தில், குறிப்பிட்ட ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள்; மற்றொரு பிரிவிற்கு கூட இடம் தரவில்லை என்ற ஆதங்கமும் நிலவியதுண்டு. சிறுபான்மையினரைச் சேர்ந்த யாருமே
தலைவராகவில்லை.
ஆனால், தமிழக பா.ஜ., தலைவராக கிருபாநிதி இருந்தார். தற்போதைய தமிழக தலைவர்
முருகன், தாழ்த்தப்பட்ட இனத்தவர். அகில இந்திய தலைவராக, பங்காரு லட்சுமணனை பா.ஜ., நியமித்து அழகு பார்த்தது.காங்., கட்சியில், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை நிர்வாகிகள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க, காங்., யோசிக்கிறது. மேலும் தேர்தல்களில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., சீட்கள், பெரும்பாலும் வாரிசு மற்றும் ஆதரவாளர்களுக்கு மட்டுமே
வழங்கப்படுகிறது.
ஏதாவது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர் தலைவரானவுடன், அவர் தனக்கு ஒரு கோஷ்டி
உருவாக்கத் துவங்கி விடுவது, வாடிக்கையாகி விட்டது. இது, தமிழகத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் நடக்கிறது.
தன்னலமில்லாத தலைமை
அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க.,விற்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு குக்கிராமத்திலும், காங்.,குக்கு ஒன்றிரண்டு தொண்டர்கள் இன்றளவும் உள்ளனர். கட்சியில் இருக்கிறோம் என காட்டிக் கொள்ள, கட்சி நிகழ்ச்சிகளிலும் திரளாக பங்கேற்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல, எந்த கோஷ்டியையும் சாராத, வாரிசு அடிப்படையில் வராத, தன்னலமில்லாத இளம் தலைவர் தான், தமிழகத்திற்கு தேவை. இதை உணர்ந்து செயல்பட்டால், கரையும் காங்.,கை காப்பாற்றலாம். செய்யுமா காங்கிரஸ் தலைமை?
- விஸ்வாமித்ரா