கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நன்றாகவே பொருந்தும்.ஒரு காலத்தில், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்கள், இப்போது வெறும், 2 சதவீத ஓட்டும், ஏதோ, 10 சீட்டும் பெறுவதற்கு, தேர்தலுக்கு தேர்தல் அண்ணா அறிவாலயத்துக்கும், அ.தி.மு.க., ஆபீசுக்கும் காவடி துாக்க வேண்டியிருக்கிறது.
'மாஸ்கோவில் மழை பெய்தால், மெட்ராசில் குடை பிடித்த சித்தாந்த கம்யூனிஸ்ட்கள்' எல்லாம், கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்டனர். இப்போது இருக்கும் கம்யூனிஸ்ட்கள், கூட்டணி கட்சிகளிடம் போட்டியிடுவதற்கு சீட்டும், செலவுக்கு சில கோடி ரூபாய் நோட்டும் தேற்றி வந்து விடுகின்றனர்.அவர்களுக்குத் தெரியும், தம்மிடம் இருப்பது கொள்கையும் அல்ல; கொத்தவரையும் அல்ல; வாய் மட்டுமே என்று. அதை காது வரை இழுத்து நீட்டி முழக்கித் தள்ளினால், சொந்த கட்சிக்காரன் கூட ஓட்டுபோட வரமாட்டான்; ஆகவே தான், டீச்செலவுக்கு என்று, கூட்டணிக் கட்சியிடம் கெஞ்சிக் கூத்தாடி கொஞ்சம், 'வாங்கி' வருகின்றனர்.
இப்படி பணம் வாங்கும் பரம ரகசியத்தை, பல்லாண்டுகள் பொத்திப் பொத்தி வைத்திருந்த தங்கமலை ரகசியத்தை பொது வெளியில் அம்பலப்படுத்தி, கால் வாரிய தி.மு.க.,வுக்கு, அன்றாடம் முட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது!
அதை யோசனை செய்யும்போதே, முந்தைய தேர்தலும், அந்த வீணாய் போன மக்கள் நலக் கூட்டணி ஞாபகமும் வந்து தொலைக்கிறது! ஆக, வீராவேசமாக எதுவும் பேசவும் முடியவில்லை;பேசாமலும் இருக்க முடியவில்லை. 'அப்பழுக்கற்ற நேர்மை'யாளர்களுக்கும் வந்து தொலைத்தது பார் சத்திய சோதனை! கடந்த, 2011 தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள், 4 சதவீதத்தை விட கொஞ்சம் அதிகம். 2016 தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி அமைத்து ஆளுக்கு, 25 தொகுதிகளில் போட்டியிட்டு பெற்றது வெறும் ஒன்றரை சதவீதம் ஓட்டு மட்டுமே.ஆக, ரோஷம் வந்து வெளியில் போனால், சிங்கிள் சீட்டுக்கு சிங்கியடிக்க வேண்டும் என்று தெரிந்து தான், தி.மு.க.,வினரோடு உறவாட வேண்டுஇருக்கிறது.
'நாகப்பட்டினத்தில் தனித்து நின்று ஜெயித்த பழங்கதை, உப்புக்கும் உதவாது' என்பதை இந்தக் காலத்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.முன்னொரு காலத்தில், கம்யூனிஸ்ட்கள் என்றால், உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி என்ற நம்பிக்கை, மக்கள் மத்தியில் இருந்தது. அ.தி.மு.க.,வுடன் ஒரு தேர்தல்; தி.மு.க.,வுடன் இன்னொரு தேர்தல் என்று மாறி மாறி கூட்டணியும், நோட்டணியும் வைத்து, நம்பிக்கையை நாசம் செய்து, தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொண்டனர், இந்த வாய்ச்சொல் வீரர்கள்.'ரஷ்யாவை பார்; சீனாவை பார்; மேற்கு வங்கத்தை பார்' என்று கம்யூனிஸ்ட் மேடைகளில் தலைவர்கள் முழங்கிய காலம் எல்லாம் மலையேறி விட்டது. அதையெல்லாம் கெட்ட கனவாகத்தான், அவர்களே நினைக்கின்றனர் போலும். மிச்ச சொச்சமாய் இருக்கும் கேரளாவும், இன்னும் எத்தனை தேர்தலுக்கு தாக்குப் பிடிக்குமோ என்று தொண்டர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் புண்ணியத்தால், கம்யூனிஸ்ட்களுக்கு மிஞ்சியிருப்பது, தேசிய கட்சி அந்தஸ்தும், மாறாத சின்னமும் தான்.
'அவை இருப்பதால் தான், ஏதோ நான்கு அரசு அதிகாரிகளாவது மதிக்கின்றனர். அதுவும் இல்லையெனில், நம் நிலை ரொம்ப மோசமாகி விடும்' என்று தொண்டர்கள் புலம்பித் தீர்ப்பது தலைவர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது.கட்சியில் அலவன்ஸ் வாங்கும் முழு நேர கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு தெரியும், தொழிற்சங்கங்களின் பலம் என்னவென்பது! சங்கங்களே, கம்யூனிஸ்ட்களின் வருமானத்துக்கு அடிப்படை ஆதாரம். சிறப்பாக இயங்கும் ஒரு ஆலையில் நன்கு திட்டமிட்டு தொழிற்சங்கம் அமைத்துக் கொண்டால், அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்பதை அவர்கள் வெகு ஆழமாக உணர்ந்திருக்கின்றனர்.ஆகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம், சங்கம் அமைத்து வருவாய்க்கு வழி தேடுகின்றனர், கம்யூனிஸ்ட்கள். தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல; அரசு ஊழியர்களும் கம்யூனிஸ்ட்களின் வசூல் வேட்டைக்கு தப்புவதில்லை.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் எல்லாம், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, நடமாடும் ஏ.டி.எம்., இயந்திரங்கள். சங்கங்களும், ஊழியர்களும் இருப்பதால், கம்யூனிஸ்ட்களின் தேர்தல் பயணம், வெவ்வேறு கூட்டணிகளுடன், வெகு சிறப்பாக தொடர்ந்தபடி இருக்கிறது.தேர்தலுக்கு தேர்தல் கழைக்கூத்தாடி போல், கொள்கையும், கூட்டணியும் மாறிக்கொள்வதில் இருக்கும் பெரும் பிரச்னையே, கூட்டணி கட்சியினர் மனம் நோகாதபடி ஜால்ரா அடிப்பது தான். வாயுள்ள பிள்ளைகளான கம்யூனிஸ்ட்கள், அதில் கரை கண்டவர்கள் ஆயிற்றே!கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிக்காரர் யாரும் மனம் நொந்து விடக்கூடாது;
அப்படி ஏதேனும் 'அசம்பாவிதம்' நேரிட்டு விட்டால், கூட்டணிப் பேச்சிலோ, கூடவே தரும் கோடிகளிலோ, சில பல குறைந்து போகுமே என்ற பெருங்கவலை அவர்களுக்கு! கொள்கையாவது, கொத்தவரையாவது! இப்போதும் தேர்தல் வரப்போகிறது. திட்டித் தீர்ப்பதற்கு, அ.தி.மு.க., ஆட்சி இருக்கிறது; பா.ஜ., இருக்கிறது; நீட் தேர்வு இருக்கிறது. இன்னும் நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் நலமாவது, மண்ணாங்கட்டியாவது!- கொம்பேறி