கடந்த 1969ல் முதல்வராக பதவியேற்ற கருணாநிதி பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க டில்லி சென்றார். பிரதமர் இந்திரா அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய்; அவரையும் கருணாநிதி சந்திக்கச் சென்றார்.
டில்லி சாலையில் கடும் போக்கு வரத்து நெருக்கடி. ஒதுக்கப்பட்ட நேரத்தில் மொரார்ஜியை சந்திக்க முடியவில்லை. சற்று தாமதமாக சென்ற கருணாநிதியிடம் முதுபெரும் தலைவரான மொரார்ஜி பாராமுகத்துடன் நடந்து கொண்டதுடன் தன் அதிருப்தியை நேரடியாகவே கொட்டி விட்டார்.'உங்களுக்காக நான் எவ்வளவு நேரம் காத்திருப்பது? எனக்கு வேறு வேலை இல்லையா?' என பேச்சில் கோபம் கொப்பளித்தது. அத்துடன் நின்று விடவில்லை.
'தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க மத்திய அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்' என கருணாநிதி பவ்யமாக கோரிக்கை விடுக்க மொரார்ஜி தேசாயோ ஆக்ரோஷத்துடன் அடுத்த கணையை குறி பார்த்து எறிந்தார்.'என் தோட்டத்தில் என்ன பணம் காய்க்கும் மரமா இருக்கிறது?' என மொரார்ஜி கூற கருணாநிதியோ தன் பேச்சு சாமர்த்தியத்தால் 'பணம் காய்க்கும் மரம் என ஒன்று இருந்தால் தானே உங்கள் தோட்டத்துக்கு வரும்' எனக் கூறி சமாளித்தார்.இது தான் அப்போது மாநில அரசுகளை மத்திய அரசு அணுகிய விதம். இதை மனதில் வைத்த கருணாநிதி மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்தது தனி கதை.
ஆனால் இப்போதைய நிலை என்ன? முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சிகாரர்கள் என யார் வேண்டுமானாலும் பிரதமரை அணுகலாம்; உள்துறை, நிதி அமைச்சர்களை சந்தித்து பேசலாம். ஒவ்வொருவரும் வாஞ்சையோடு வரவேற்கின்றனர். மாநில தேவைகளை எழுதி விலாவாரியாக பட்டியல் போட்டு கொடுக்கலாம்.
நிதியுதவியை பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆளும் மாநிலங்கள்; மம்தா, பினராயி ஆளும் அரசுகள் என எந்த பாரபட்சமும் பார்க்காமல் தாராளமாக தேவைக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படுகிறது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பளிச்சிடும் சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், விவசாயம், பொது, வினியோகம், மருத்துவம், சுகாதாரம், கல்வி, தொழில் துறை, மின் நிர்வாகம், கொரோனா கால உதவி திட்டங்கள் என எல்லா திட்டங்களிலும் 'மத்திய தொகுப்பு' மாநிலங்களுக்கு கைகொடுத்து வருகிறது. 'டிஜிட்டல் இந்தியா' கிராமங்களிலும் ஒளிர்கிறது.
பீஹார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோளில் துாக்கியதால் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆட்சி அமைக்கும் ஆசையில் 'மண்' விழுந்தது. ஆனால் பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் கட்சியின் நிலை என்ன?'இது தான் என் கடைசி தேர்தல்; எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்' என வாக்காளர்களிடம் கதறிய நிதிஷ் குமாரின் கட்சிக்கு ஆறுதல் வெற்றியை தந்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தையும் தந்தது பா.ஜ. தான்.ஒரு வேளை நிதிஷ் குமார் தனித்து போட்டியிட்டு இருந்தால் முதல்வராகி இருக்க முடியுமா? அது மட்டுமல்ல... அவரது கட்சியின் கதைக்கு இந்த தேர்தல் முடிவுரையே எழுதியிருக்கும். நிதிஷ் குமார் கட்சியின் ஓட்டு வங்கியை பா.ஜ. சிதைத்து 'டம்மி' ஆக்கவில்லை; அவரது கட்சியை துாக்கி நிறுத்தி 'உயிர் பிச்சை' தந்துள்ளது என்பதே உண்மை!
இத்தனைக்கும் அந்த நிதிஷ் குமார் ஒன்றும் லேசுபட்டவரில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக ஆரம்பத்திலேயே வரிந்து கட்டியவர்; மோடி பிரதமர் வேட்பாளர் ஆகக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தவர். ஏன் கடந்த லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பின் மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகள் கிடைக்கவில்லை என்பதற்காக அமைச்சரவையில் சேராமல் அவரது கட்சியே ஒதுங்கியது. அவரையும் அரவணைத்து அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ. தந்துள்ளது.தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசை 'ஆட்டுக்கு தாடி' என்பது போல் தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் 'சீட்'டுகளையும் ஓட்டுகளையும் இழக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே வெற்றி வாய்ப்பு கிடைத்த நாங்குநேரி தொகுதியை கூட இடைத்தேர்தலில் தக்கவைக்க தவறியது காங்கிரஸ்.அதே நேரத்தில் அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி அமைவதால் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் இல்லை; லாபம் தான் அதிகம்.
தேர்தல் நேரத்தில் தொகுதி பேரத்துக்கு கூப்பாடு போடும் சில கம்யூனிஸ்டுகள் நாத்திகம் பேசுவோர் ஹிந்துத்துவா எதிர்ப்பாளர்கள் என சிலர் தான் இதை விமர்சிக்கக் கூடும்.மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்கு திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையிலான வலுவான ஊழலற்ற நிர்வாகம் குறித்து அரசியல் சார்பற்ற வாக்காளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
கொள்கை ரீதியாக முரண்பட்டுள்ள காங்கிரசும், தி.மு.க.வும், கம்யூ.க்களும் பல விஷயங்களில் கை கோர்க்கின்றன. அப்போது கொள்கை ரீதியாக பல விஷயங்களில் ஒத்துப் போகும் பா.ஜ. - அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.மத்திய மாநில உறவுகள் சீராக இருப்பது மக்களுக்கு நல்லது தானே! அதைத் தானே கருணாநிதியும் விரும்பினார்; எம்.ஜி.ஆரும் விரும்பினார்.இங்கு பணம் காய்க்கும் தோட்டங்கள் வேண்டாம்; மக்கள் மனம் அறிந்த அரசுகள் போதும்! - கத்தி கந்தன்.