சுதந்திர வேள்வியில் ஈடுபட்டு, மஹாத்மா காந்தியின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் அடியும், உதையும், மிதியும் பட்டு, கடுங்காவல் சிறைத் தண்டனையும் பெற்று, இன்னமும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் என் போன்ற, காங்கிரஸ் கட்சி விசுவாசிகள் கண்களில், ரத்தம் வடிகிறது.
சிறைச் சாலையில் இடது கையால் தண்ணீர் கொடுத்தான் என்பதற்காக, மானம் காக்க உயிரையே விட்ட சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வம்சத்தில் வந்தவர்களுக்கு, இன்றைய காங்கிரஸ் தலைமை நடந்து கொண்டிருக்கும் முறை, ரத்தத்தை கொதிக்க வைக்கிறது.கடந்த, 1957ல், 'திராவிட நாடு' என்ற கொள்கையை, தி.மு.க.,வில், அண்ணாதுரை கையில் எடுத்தார். இதற்கு தென் மாநிலங்களான, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றிலிருந்து போதுமான உந்துதல்கள் வரவில்லை. அவை அனைத்துமே, மொழிவாரி மாநிலமாகப் பிரிய வேண்டும் என்பதில் தான் குறியாக இருந்தன.
எனவே, தன் கோரிக்கை வெறும் ஏட்டளவோடு நின்று விடும் என்பதை, அண்ணாதுரை உணர்ந்தார்.அந்த ஆண்டே, சட்டசபையில் அமரும் வாய்ப்பு கிடைத்தபோதும், பெயரளவுக்குக் கூட, திராவிட நாடு என்ற பேச்சை அவர் எடுக்கவே இல்லை.ஆனால், கட்சியை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில், மேடை தோறும் அதை முழங்கினார். ஓரளவு மக்களும் அதற்குச் செவி மடுத்தனர். கிட்டிமுட்டி, சட்டசபையில் அமர வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், திராவிட நாடு கொள்கையை கவனமாக மறந்தார்.ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்ததும், திராவிட நாடு கொள்கை காற்றில் பறந்தேவிட்டது. அதன் பிறகு கொண்டு வரப்பட்ட, 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' கொள்கை ஓரளவு அண்ணாவுக்கு கைகொடுத்தது.
கருணாநிதியும், கடைசி வரை, இதற்காகப் போராடினார். தி.மு.க., அளித்த தேர்தல் அறிக்கையெல்லாம், 'டாப்' ரகம் தான்!மாநில உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது, மொழியை மேம்படுத்துவது, மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம், தொழில்துறையில் தனியார் ஆதிக்கத்தை ஒழிப்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு நிதியைப் பயன்படுத்துவது, பள்ளிக் கல்வியை இலவசமாக்குவது, தகுதி வாய்ந்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம், எளியோருக்கு இலவச வீடு என, கருணாநிதி நிறையவே செய்திருக்கிறார்.
இள ரத்தமாக இருந்தபோது, கருணாநிதி காட்டிய அராஜகப் போக்கு, பிரச்னைகளை எதிர் கொள்ளக் கொள்ள, அவரிடமிருந்து காணாமல் போனது.கூட்டணி விஷயத்தில் தடாலடியான, ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்தி, சூழ்நிலைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் கில்லாடியானார்.
எந்த கட்சியை, தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டினாரோ, அந்தக் கட்சியுடனேயே கூட்டணி வைத்து, ஆட்சியை மீண்டும் மீண்டும் கைப்பற்றினார். அவருக்குப் பிற்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலினிடம், உள்ளார்ந்த ராஜதந்திரத்தைக் காணோம். பிரச்னை களை ஆழ்ந்து நோக்கி, எந்த விஷயத்தைத் தன் கட்சிக்கும், தனக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சிந்திக்காமல், 'எதிர்க்கட்சி என்றாலே, எதிரிக் கட்சியின் எந்த விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தான்; அதோடு என் வேலை முடிந்தது' என்ற ரீதியில் செயல்படுகிறார்.
அ.தி.மு.க.,வில் ஆட்சியைத் தக்க வைக்க, 2017ல், ஓ.பி.எஸ்.,சுக்கும் - இ.பி.எஸ்.,சுக்கும் சண்டை நடந்து, இரு அணிகளாகப் பிரிந்தபோது, சட்ட சபையில் இ.பி.எஸ்., அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், கட்சிக்கு எதிராக ஓட்டு போட்டனர் என்ற காரணத்திற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, தி.மு.க.,வினர் கோரினர்.அந்த நேரத்தில், கருணாநிதி சுய நினைவோடு இருந்திருந்தால், ராஜ தந்திரியாக, 11 எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுத்து, ஆட்சியை அமைக்க, ராவோடு ராவாக ஏற்பாடு செய்திருப்பார்.
அவ்வளவு ஏன்... டி.டி.வி.தினகரனை, தன் பக்கம் வளைத்துப் போட்டு, அவருடைய 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கத்தை நீர்க்கச் செய்து, நாடகக் காட்சியையே மாற்றி அமைத்து, 'ஜம்'மென ஆட்சிப் பீடத்தில் ஏறி இருப்பார்.இந்த சந்தர்ப்பம் எதையுமே கையாளத் தெரியாமல், ஸ்டாலின் கோட்டை விட்டார். ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.,க்களில், 100 பேரைத் தன் வசம் வைத்திருந்த ஸ்டாலின், 18 பேரை தன் பக்கம் அப்போதே இழுத்திருந்தால், ஆட்சி கைமாறி இருக்கும்.
எல்லாம் போச்சு!
தி.மு.க.,வில் ஸ்டாலின் தலைமையேற்ற பிறகு, லோக்சபா தேர்தல் ஒருமுறை தான் நடந்துள்ளது. அ.தி.மு.க.,வின் உட்கட்சிப் பூசலால், ஓட்டை அள்ளினாரே தவிர, புளகாங்கிதம் அடைவதற்கெல்லாம் இங்கு ஒன்றும் இல்லை.எதிர் வரும் சட்டசபைத் தேர்தலின் போது, கூட்டணி பேச்சை, இளைஞர் அணித் தலைவர் உதயநிதியுடன் நடத்தி, ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; அந்த அளவுக்கு கெத்து மட்டும் காட்டத் தெரிகிறது ஸ்டாலினுக்கு; கணக்கு போடத் தெரியவில்லை!
எனவே, காங்கிரசுக்கு இது சரியான தருணம். ஸ்டாலினின் சாமர்த்தியம் இல்லாத போக்கையும், பிரசாந்த் கிஷோரின் மொழியறியா கணக்கையும் துாக்கி அடித்து, வெறும் 6 சதவீத ஓட்டுடன், முதல்வரை நிர்ணயிக்கும், 'கிங் மேக்கர்' ஆக மாறும் சந்தர்ப்பம் கனிந்து வருகிறது. ஊசலாடிய ஆட்சியைக் காப்பாற்ற, தனக்கு எதிராகச் செயல்பட்ட பன்னீரை ஒரே கடிதத்தின் மூலம் தன் பக்கம் இழுத்து, நிலைநிறுத்திக் கொண்டாரே இ.பி.எஸ்.,வாழ்வா, சாவா என்ற நேரத்தில், சுதாரிப்பு வர வேண்டுமா, இல்லையா!
'நெடுஞ்சாண்கிடை' ஏன்?
தி.மு.க.,விடம் சரண்டர் ஆகி இருக்கும், தினேஷ் குண்டுராவின் தந்தை ஆர்.குண்டுராவ், கர்நாடக முதல்வராகப் பணியாற்றிவர். தற்போது பெங்களூரில் மெஜஸ்டிக் சர்க்கிள் என்றழைக்கப்படும் பஸ் ஸ்டாண்டை கட்டிய பெருமை இவருக்கு உண்டு. கர்நாடகாவில் காங்., கட்சியை வளர்த்த முக்கிய தலைவர்களில் ஒருவராக, குண்டுராவ் பார்க்கப்பட்டார். அதுவும், கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்திரா காலத்திலேயே திறமையான முதல்வர் என்ற பெயரெடுத்தவர்.அவருடைய மகனான தினேஷ் இன்று, தி.மு.க.,விடம் அடிபணிந்திருப்பது, சாரி... கொஞ்சம் ஓவர்!
- கத்தி கந்தன்-