போன சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு கட்சியும் வாங்கிய ஓட்டுகள் சதவீதம், உங்களுக்கு நினைவு இருக்கலாம். அ.தி.மு.க., 41 சதவீதம், தி.மு.க., 32 சதவீதம், காங்கிரஸ், 6.47 சதவீதம். மொத்தம், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் எட்டு தொகுதியைத் தான் பிடிக்க முடிந்தது அந்த கட்சியால்.
ஆனால், போட்டியிட்ட தொகுதிகளில் அந்தக் கட்சிக்குப் பதிவான ஓட்டுகள், 37 சதவீதம். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அள்ளிக் குவித்த, 41 சதவீதத்தில் இருந்து, இது அப்படி ஒன்றும், அதிக தொலைவில் இல்லை. மற்ற கட்சிகள் எல்லாமே, ஏழு அல்லது அதற்கும் குறைவான சதவீதம்தான்.இது எதை காட்டுகிறது என்றால், 'ரிசல்ட்' எப்படி இருந்தாலும் சரி, காங்கிரசின் ஓட்டுகள், அப்படியே லட்டு போல, அதன் வேட்பாளர்களுக்கு கிடைக்கின்றன.
கிட்டத்தட்ட இதே போல, தன் ஓட்டு வங்கியை முழுமை யாக கைப்பற்றும் திறன் கொண்ட மற்றொரு கட்சி, முஸ்லிம் லீக் மட்டுமே. 'சாலிட் ஓட் பேங்க்' என்பரே... அந்த ரகம்.அப்புறம் எப்படி காங்கிரஸ் படுதோல்வி அடைகிறது என்று பார்த்தால், அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில், அந்த கட்சியின் ஓட்டுகள், மொத்தமாக விழுகிறதே தவிர, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஓட்டுகள், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முழுமையாக வந்து சேர்வது கிடையாது.
ஏன் அப்படி கிடைக்காமல் போகிறது என்ற காரணங்களும், அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை, லோக்சபா தேர்தலில் காட்டலாம். தி.மு.க., கூட்டணி, தோல்வியை சந்தித்த ஒரே தொகுதி, தேனி. அங்கே துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும், டி.டி.வி.தினகரனின் தளபதியான தங்க தமிழ் செல்வனையும் எதிர்த்து களத்தில் இறக்கப்பட்டவர், காங்கிரசின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.நாவாற்றல் மூலம் நிறைய நண்பர்களை இழந்த இளங்கோவனுக்கு, தி.மு.க.,வினர் எத்தனை பேர் ஓட்டு போட்டிருப்பர் என்பதை, எவரும் ஊகித்து விடலாம்.
காங்கிரசுக்கு கட்சி கட்டமைப்பு கிடையாது என்று சொல்வதில், உண்மை இல்லை.சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து, தொடர்ந்து, 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், நகரம், சிற்றூர், கிராமம் என, எல்லா இடங்களிலும் கிளை அமைப்புகள் இருக்கின்றன. கட்சி ஆபீசுக்கு, சொந்தக் கட்டடம் அதிகம் கொண்டுள்ள கட்சி அதுதான்.எல்லா ஆபீசிலும், காங்கிரஸ் பிரமுகர்கள், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன், வாரம் ஒரு நாளாவது வந்து, நாற்காலிகளை நகர்த்திப் போட்டு அமர்ந்து, அரட்டை அடித்துச் செல்வதை, இப்போதும் காண முடியும்.
ஒரே பிரச்னை என்ன என்றால், அவர்கள் அனைவருமே நிர்வாகிகளாக இருப்பர்; தொண்டர்கள் கிடையாது.'சீட் கொடுத்து, வேலை செய்ய ஆள் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து வேலியில் போகிற ஓணானை எடுத்து, வேட்டிக்குள் விடுகிறோம்' என்று, மறைந்த தலைவர் வேடிக்கையாக புலம்புவார்.'இதெல்லாம் பரவாயில்லை, தலைவரே... வேட்பாளரையும் நாமே தேர்வு செய்து கொடுத்திருந்தால் அத்தனையும் ஜெயித்திருக்கலாம்' என, பக்கத்தில் இருக்கும் சீனியர், 'கமென்ட்' அடிப்பார்; தலைவர் சோகமாக சிரிப்பார்.
ஒரு வேளை, தி.மு.க., இல்லை... பா.ம.க., வாய்ப்பே இல்லை... கம்யூனிஸ்டுகள் கிடையாது... கமல் வரமாட்டார்... விஜயகாந்த் 'ஆக்டிவ்' ஆக இல்லை... வைகோ இந்த நேரத்தில் அறிவாலயத்துடன் நெருக்கத்தை விரும்புகிறார்... தன் தேசிய தலைவரே திரும்பி வந்து சொன்னாலும் சீமான், காங்கிரசுடன் கை கோர்க்க மாட்டார்.
முன்போல் நட்புடன் இருந்தால், முஸ்லிம் லீக் வரலாம்; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பில் தயக்கம் காட்டியதை, காங்கிரசின் கள்ள மவுனம் என்று புரிந்து கொண்ட பிறகு, அதுவும் தூரம் காக்கிறது.அப்படி என்றால் காங்கிரஸ் என்னதான் செய்வது?சென்ற முறை கிடைத்த, 40 பிளஸ் எல்லாம் எதிர்பார்க்காமல், பத்தோ பதினைந்தோ..கிடைக்கும்,'சீட்'களை வாங்கி கொண்டு, தி.மு.க., கூட்டணியில் தொடர்வது மட்டுமே, காங்கிரசுக்கு இப்போது திறந்திருக்கும் ஒரே கதவு.பிரசாந்த் கிஷோர் தொடங்கி, மாவட்டச் செயலர்கள் வரை கொடுக்கும் நெருக்கடி தாங்காமல், ஸ்டாலின் ஒருவேளை, கதவை உள்பக்கம் தாழ் போட்டால், நிலைமை கவலைக்கிடமாக மாறுவதை தவிர்க்க முடியாது.அவ்வாறு நடக்காது என்று நம்புபவர்கள் இரு தரப்பிலும் பலர் இருக்கின்றனர்.
மூன்றாவது அணியால் வாய்ப்பை இழந்த சோகம், அவர்கள் முகத்தில், இன்னும் கப்பிக் கிடக்கிறது. 100 'சீட்' கையில் வைத்திருந்தும், ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க., அரசை அசைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம், அவர்கள் நெஞ்சில் கட்டி நிற்கிறது.அசாத்தியங்களை சாத்தியமாக்கும் கலை எனச் சொல்லப்படுவது, அரசியல். ஆகவே, எதுவும் எப்போதும் நடக்கலாம்.
தி.மு.க.,வில் சென்ற சில மாதங்களில் மட்டும், பல லட்சம் பேர், புதிதாக சேர்ந்திருக்கின்றனர். அவர்களில், 85 முதல், 90 சதவீதம் பேர் இளைஞர்களாம்!உதயநிதி தலைமையில், இவ்வளவு பலம் மிகுந்த உடன் பிறப்புகள் படையை வைத்துக் கொண்டு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான காங்கிரசை ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று, ஸ்டாலின் அதிரடி முடிவு எடுக்க கூடும்.
'கழற்றி' விடப்பட்டால் காங்கிரஸ் என்ன செய்யும்? எப்படியும் ரஜினி வந்து விடுவார் என்று எதிர்பார்க்கும், ஏனைய பல சிறு கட்சிகளைப் போல, இந்திய தேசிய காங்கிரசும், இலவு காத்த கிளியாக மாறலாம்.இப்போது சிறிய அளவில் நடக்கும் உரசல் பெரிதாகி, உறவில் விரிசல் விழுந்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உடைந்தால், காலியாகும் இடத்தைப் பிடிக்க, பழைய நினைவுகளுடன், அ.தி.மு.க., வின் இ.பி.எஸ்., வீட்டை எட்டிப் பார்க்கலாம்.
அப்போதும் தூரத்தில் வெளிச்சம் தோன்ற மறுத்தால், தனித்து போட்டிதான்!'சொந்த காலில் நிற்போம்' என்று, கருப்பையா மூப்பனார் காலத்தில் கேட்ட கோஷம், கே.எஸ்.அழகிரி காலத்திலும் எதிரொலிக்கும். ஆனால் அன்று இருந்த சாதகமான சூழலில், 6 சதவீதம் கூட இப்போது இல்லை.
என்றாலும், நெருக்கடிகளை வாய்ப்பாக மாற்ற தெரிந்தவனே தலைவன். 'போனதெல்லாம் போகட்டும், முற்றிலும் புதிதாய், கீழே இருந்து தொடங்குவோம்' என்று, மக்களை மட்டுமே நம்பி சபதம் ஏற்று, முதல் அடி எடுத்து வைக்க, நல்ல தலைவனால் முடியும்.நாடு முழுவதையும் கட்டி ஆண்ட காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, தமிழகத்தில் தான் ஆரம்பித்தது. எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் மறு பிறவி எடுத்தால், அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், உதாரணமாக அமையும்.சோனியாவும், ராகுலும், அதற்கு பச்சைக்கொடி காட்டுவரா என்பதே, 'ஸ்லீப்பர் செல்'களாக பரவிக் கிடக்கும் லட்சோப லட்சம் காங்கிரஸ் அனுதாபிகளின் கேள்வி!- கத்தி கந்தன்