dinamalar telegram
Advertisement

புதிய அரசின் சவால்கள் சந்திப்பாரா நிதிஷ் குமார்?

Share

பீஹார் மாநிலத்தில், மூன்று கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பா.ஜ., மட்டும், 74 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.


நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.,வை விட, 31 இடங்கள் குறைவாக, அதாவது, 43 இடங்கள் மட்டுமே பெற்றிருந்தாலும், பா.ஜ., மேலிடம் அளித்த வாக்குறுதிப்படி, மீண்டும் நிதிஷ் குமாரே, முதல்வராக பதவியேற்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் உருவான, 'மகாபந்தன்' என, அழைக்கப்படும் மெகா கூட்டணிக்கும், பா.ஜ., கூட்டணிக்கும் இடையே, ஓட்டு எண்ணிக்கையின் போது, ஆரம்பம் முதலே இழுபறி இருந்தாலும், இறுதியில், பா.ஜ., கூட்டணியே வெற்றி பெற்றது.அதிலிருந்தே, நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நீடிக்க, மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது, தெளிவாகிறது.

இருந்தாலும், பா.ஜ.,வை விட குறைவான இடங்களில், ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றிருப்பதால், அது, ஜூனியர் பங்குதாரர் என்ற, அந்தஸ்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால், முதல்வராக பதவியேற்றாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ.,வால், நெருக்கடிகளை, நிதிஷ் குமார் சந்திக்க நேரிடும். மேலும், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு உட்பட, பல விஷயங்களில் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். உ.பி., மாநில பாணியில், பீஹாரிலும் இரு துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம்.

ஏற்கனவே, மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், சட்டசபை தேர்தல் நேரத்தில், முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவரின் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் நிறுத்திய பல வேட்பாளர்களால் தான், ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களை பெற நேரிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது.


சிராக் பஸ்வானை கைப்பாவையாக்கி, பா.ஜ., மேலிடம், இரட்டை வேடம் போட்டதாக, அரசியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நிதிஷ் குமாருக்கு பஸ்வான் கட்சி வாயிலாக, 'செக்' வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதையெல்லாம் பார்க்கும் போது, நிதிஷ் குமாருக்கு, பா.ஜ.,வின் மறைமுக நெருக்கடிகள் தொடரும் என்பதில், எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.


மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாலும், வெளிமாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள், பீஹாருக்கு திரும்பி இருப்பதாலும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயமும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமும், நிதிஷுக்கு உள்ளது. அதற்கான சாதகமான திட்டங்களை உருவாக்க வேண்டியதும் அவசியமாகும்.


ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மாநிலத்தில் புதிதாக, 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, உத்தரவாதம் அளித்தார். அதனால், 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என, தேஜஸ்வி யாதவின் அறிவிப்புக்கு போட்டியாக, பா.ஜ.,வும் உறுதி அளித்தது.அந்த அறிவிப்பில் தெரிவித்தபடி, புதிய அரசு பதவியேற்ற உடனே, லட்சக்கணக்கில் காலியாக உள்ள, அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை, முதல்வர் நிதிஷ் எடுக்க வேண்டும்.இதற்கு முன், தேஜஸ்வி யாதவின், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, சில மாதங்கள் ஆட்சி நடத்திய நிதிஷ் குமார், பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார். இறுதியில், அந்தக் கட்சியை கழற்றி விட்டு, பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து, ஆட்சியை தொடர்ந்தார்.ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியின் போது, பல கசப்பான அனுபவங்களை நிதிஷ் எதிர்கொண்டதால், தற்போது, அதிக இடங்களை பிடித்து, பலமான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ள அந்தக் கட்சியுடன், கூட்டணி சேருவதற்கு வாய்ப்பு இல்லை.அதற்கு பதிலாக, பா.ஜ.,வின் உள்ளடி வேலைகள் மற்றும் நெருக்கடிகளை அவர் சந்திப்பதே சரியானதாக இருக்கும்.பீஹார் தேர்தலில் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் உட்பட, பல மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத் தேர்தல்களிலும், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மோடியோ, பா.ஜ.,வோ காரணம் இல்லை என்பதை, வாக்காளர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பது இதனால் தெளிவாகிறது.அதே நேரத்தில், பீஹார் ஆட்சி அதிகாரத்தில், பா.ஜ.,வின் மேலாதிக்கம் நீடிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement