LOGIN
dinamalar telegram
Advertisement

முதியோரின் இன்றைய தேவைகள்!

Share

முதியோர் தங்கள் வாழ்க்கையில், உடல் நலம், நிதி நலம் மற்றும் குடும்ப நலம் சார்ந்த பிரச்னைகளை தான் அதிகம் பேர் சந்திக்கின்றனர். இம்மூன்றும் முதுமையில் நன்றாக அமைந்து விட்டால் முதுமை ஒரு இனிய பருவமே.


ஆனால், அவை நன்றாக அமையாவிட்டால் அப்பருவம், இன்னல் நிறைந்த பருவமாகத் தான் இருக்கும். முதியோர் சந்திக்கும் அப்பிரச்னைகளுக்கு என்ன தான் தீர்வு?

உடல் நலம்



முதுமைப் பருவத்தை நன்றாக அனுபவிக்க, உடல் நலம் மிகவும் அவசியம். முதியோர் நல மருத்துவம் பிறந்த சென்னையில், முதியோர் நலனுக்கான பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு சில.சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மையம் முறைப்படி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், தற்பொழுது மிகவும் அவசரமாக தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மையம், தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சால் திறந்து வைக்கப்பட்டது. விரைவில் கொரோனா நோயாளிகள் பூரண குணம் அடைந்த பிறகு, தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு, மூத்த குடிமக்களுக்கு தன் பணியைச் செய்யும். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த மையம், 127 கோடி ரூபாய் செலவில், 200 படுக்கைகள் கொண்ட முதியோர் நல மருத்துவ மையமாக அமைக்கப்பட்டுள்ளது.


முதியோர் புற நோயாளிகள் பிரிவு, முதியோர் நல வார்டு, தீவிர சிகிக்சை பிரிவு மற்றும் தொடர் சிகிச்சை பிரிவுகள் இங்கு உள்ளன. மேலும், முதியோர் நலம் சார்ந்த ஆராய்ச்சிகளும் இவ்வளாகத்தில் செயல்படும்.தற்பொழுது, இந்திய மருத்துவக் குழுமம், முதியோர் நலத் துறையில் பட்ட மேற்படிப்பை படிக்க, பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விட்டதால், பல மருத்துவர்கள் இத்துறையில் பட்டம் பெற்றுள்ளனர்.


அந்த மருத்துவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் நலத் துறையை ஆரம்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். கிராமத்தில் உள்ள நாள்பட்ட நோய்களான பக்கவாதம், உதறுவாதம், மறதி நோய் மற்றும் புற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சையளிக்க, தாலுகா அளவில், தொடர் சிகிச்சை மையம் ஒன்றை அமைக்கலாம். மேலும், நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம், கிராமங்களில் உள்ள முதியோருக்கு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கிராமங்களுக்கு சென்று, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும்
ரத்தசோகை ஆகியவற்றை பரிசோதித்து, தக்க சிகிச்சையளிப்பதோடு மருந்துகளையும் கொடுத்து உதவலாம்.

தடுப்பூசியைப் பற்றி முதியவர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி சமீப காலமாக ஏற்பட்டு வருகிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள முதியோர் நல மருத்துவப் பிரிவில், 'நிமோனியா' தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தமிழக அரசு நடத்தும் முதியோர் இல்லங்களில் உள்ள, 1,853 முதியோருக்கு, நிமோனியா தடுப்பூசி கடந்த ஆண்டு போடப்பட்டது. தனியார் நடத்தும் முதியோர் இல்லங்களிலும், முதியோர் குடியிருப்புகளிலும் நிமோனியா தடுப்பூசி போட வேண்டும் என, அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
முதியோருக்கு நிமோனியா தடுப்பூசி போடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா சளி, ஜூரம் வர வாய்ப்பில்லை என்ற கருத்தை
சமூக வலைதளங்களில் வெளியிட்டு, மக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நிதி நலம்



முதியவர்களில் சுமார், 71 சதவீதம் பேர் இன்னமும் உழைக்கின்றனர். முதியோரில், 84 சதவீதம் பேருக்கு, ஓய்வூதியம் ஏதும் கிடையாது. சுமார், 10 -- 15 சதவீதம் முதியோர் தான், ஓய்வூதியம் பெறுகின்றனர். 80 வயதிற்கு மேல், 13 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் உழைக்கின்றனர். ஆண்களை விட பெண்கள் அதிகம் நாள் வாழ்வதால், விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. ஆண்களை நம்பி இருக்கும் பெண்கள், போதிய நிதி வசதியின்றி தனிமையில் வாழும் சூழல் உருவாகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள முதியோருக்கு, குறைந்தது மாதா மாதம், 3,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

குடும்ப நலம்



ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 15-ம் தேதியை, முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஒழிப்பு விழிப்புணர்ச்சி நாளாக அனுசரித்து வருகிறது. அந்த நாளில் எல்லா இளைஞர்களும், குடும்பத்தினரும் முதியோரை மதிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டுக் குடும்பம் சிதறுவதை தடுக்க, முதியோரின் அருமை, பெருமைகளை இளைஞர்கள் உணர வைக்க வேண்டும்.
உதாரணம்: முதியோரை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி விழா எடுத்து பரிசுகள் வழங்கலாம். இது மற்ற இளைஞர்கள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உதவும். முதியோரை மதிப்பது பற்றி கட்டுரைகள், பள்ளி நுாலில் இடம்பெற வேண்டும். கூட்டுக் குடும்ப நடைமுறை குறைந்து வரும் இக்காலத்தில் அரசு மற்றும் மனிதநேயம் மிக்கவர்கள், முதியோர் இல்லங்களை கிராமத்திலும் துவங்கலாம். முதியோருக்கான நலத் திட்டங்களை அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை, கொடையுள்ளம் கொண்டவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம்.


முதுமையில் நோய்களின்றி நலமாய் வாழ, காலமுறைப்படி மருத்துவப் பரிசோதனை, சீரான உணவு, தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மற்றும் நிமோனியா தடுப்பூசி போன்றவை அவசியம். நடுத்தர வயதிலிருந்தே முதுமை காலத்திற்காக சிறு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை இளைஞர் சமுதாயத்திடம் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவை தான், முதியோருக்கு இன்றைய தேவைகள்! பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல மருத்துவர்சென்னை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • ருத்ரா -

    முதுமையில் உடல் நலத்திற்கு ஏற்ற உணவு அவசிய அவசரத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் டென்ஷன் தராத செய்திகள் படித்து சொல்லும் உறவுகள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இளைஞர் தான் அனுபவத் திறன் கொண்ட முதியவர் என்ற உணர்வு குடும்பத்தில் அனைவருக்கும் இருந்தால் முதுமை முதியோர் இல்லம் செல்லாது.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    நிதி நலம் நன்றாக இருந்தால் மற்ற இரண்டு நலன்களும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ஒய்வு ஊதியம் இல்லாமல் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை வங்கியில் வைத்து அதன் வட்டியில் வாழ்பவர்கள் நிலை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. 5 ஆண்டு களுக்கு அவர்களது வட்டி வருமானம் கிட்டத்தட்ட பாதியாக விட்டது. வங்கிகள் முதியோர்களுக்கு அரை விழுக்காடு கூடுதல் வட்டிக்கு பதிலாக இரண்டு விழுக்காடு கூடுதலாக கொடுக்க வேண்டும். இதை தான் முதியோர்கள் இந்த தினத்தில் எதிர் பார்க்கிறார்கள்

  • sankaseshan - mumbai,இந்தியா

    சரியான பார்வை கொடியது கொடியது முதுமையில் வறுமை .

  • GMM - KA,இந்தியா

    இளமையில் உடல் நலம் பேண வில்லை என்றால், முதுமையில் நோய் வரும். தடுப்பூசி மருத்துவர் ஆலோசனை பெற்று போட்டு கொள்ளலாம். கூட்டு குடும்ப அமைப்பு சிறந்தது. அரசு, சட்டத்தை விட பிள்ளைகள் மீது பெற்றோருக்கு அதிகாரம் தேவை. நகரில் 800 ச. அடி கீழ் குடியிருப்பு நிலம் பிரிக்க கூடாது. தன் தேவைக்கு அரசு வரிவசூல் செய்கிறது. பிள்ளைகள் வருவாயில் பெற்றோருக்கு 15 சதம் ஒதுக்க வேண்டும். ஓய்வு ஊதியம் வரி பணத்தில் இருந்து கொடுத்தால் அபிவிருத்தி செய்ய முடியாது. கடன் அடைக்க முடியாது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement