dinamalar telegram
Advertisement

பீஹார் சட்டசபை தேர்தல் தேர்தல் கமிஷனுக்கு சவால்

Share

நாடு முழுதும், 60 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் உருவான, பீதி குறையாத நிலையில், பீஹார் மாநிலத்தில், அக்டோபர், 28, நவம்பர், 3, 7ம் தேதிகளில், மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும்; நவம்பர், 10ல் ஓட்டு எண்ணிக்கை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், 243 சட்டசபை தொகுதிகளை உடைய பீஹாருக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக, அம்மாநிலம் வரலாறு படைக்க உள்ளது. தேர்தல் என்றாலே, வன்முறைகள் அதிகம் நிகழும் பீஹாரில், வழக்கமாக, ஐந்து முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும். இம்முறை, மூன்று கட்டத்திற்குள் ஓட்டுப்பதிவு முடிக்கப்படுகிறது; ஓட்டுப்பதிவு நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில், முதல் மாநிலமாக, பீஹாரில் சட்டசபை தேர்தல் நடப்பது, வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும், தேர்தல் கமிஷனுக்கும், பெரிய சவாலாகவே இருக்கும். மேலும், கட்சிகளால், பெரிய அளவிலான தேர்தல் பிரசார கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்த முடியாது. 'டிஜிட்டல்' முறையிலான பிரசாரம், சமூக வலைதளங்கள் வாயிலான பிரசாரங்களையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.மற்ற சில மாநிலங்களை ஒப்பிடுகையில், பீஹாரில், கொரோனா தொற்று பரவல் குறைவே என்றாலும், தேர்தல் நேரத்தில், மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் ஏற்படும் குளறுபடிகளால், தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க, சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் செயல்பட வேண்டியது கட்டாயம். அதே நேரத்தில், பீஹாரை ஆளும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி, முந்தைய தேர்தல்களை போல அல்லாமல், இந்த தேர்தலில் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஏனெனில், பீஹாரில், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மற்ற மாநிலங்களில் பணியாற்றி வந்த, பீஹாரை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் வேலையின்றியும், வருமானமின்றியும் உள்ளனர்.மேலும், விவசாய சட்ட திருத்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிரானவை என, பல மாநிலங்களில் சர்ச்சை கிளம்பி, போராட்டங்கள் நடந்து வருவதால், அந்தப் பிரச்னையும், வேறு பல உள்ளூர் பிரச்னைகளும், ஆளும் கட்சிக்கு எதிரான பிரசாரத்தில் முக்கிய இடம் பெறலாம்.அதேநேரத்தில், எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்தப் பிரச்னைகளை எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்து, வெற்றிக்கு வழிவகுக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரான லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவரது மகன், தேஜஸ்வி யாதவ், அனுபவம் இல்லாதவர் என, விமர்சனம் உள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு, அவர் திறமையாக செயல்படுவாரா என்பதும் சந்தேகமே. ஏனெனில், 2019 லோக்சபா தேர்தலை, தேஜஸ்வி யாதவ் தலைமையில் தான், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி சந்தித்தது. அப்போது, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதேநேரத்தில், தேர்தல் நல்ல முறையில் நடந்து முடியவும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், தேர்தல் ஆணையம், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.குறிப்பாக, பெரிய அளவிலான கூட்டம் கூடும், பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதிலும், கடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஓட்டுப்பதிவு மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், குறைந்த அளவிலான வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதல் ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்த வேண்டும். தேவைப்படுவோருக்கு தபால் ஓட்டு போடும் வசதியை அறிமுகப்படுத்தலாம்.


முடிந்தால், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றினால் நல்லது. ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும், அரசியல் கட்சி ஏஜன்ட்கள் கூட்டத்தை குறைக்கலாம். இது தவிர, தொற்று பரவாமல் இருப்பதற்கான, வேறு பல நடவடிக்கைகளையும், சுகாதாரத் துறையினருடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். இதைச் செய்தால், அது, தேர்தல் கமிஷனுக்கு பெரிய வெற்றியாக அமையும். பின்னர், அதே நடைமுறையை, அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்திலும் பின்பற்றலாம். இந்திய தேர்தல் கமிஷன், இந்த சவால்களை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து, புதிய சாதனை படைக்கும் என, நம்பலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement