LOGIN
dinamalar telegram
Advertisement

ஆசிரியர், பெற்றோர், மாணவர் கூட்டணி

Share

கல்வி கற்றலின் நோக்கம் என்பது நம் அறிவை விருத்தி செய்வதாய் இருந்தாலும், அது மட்டுமே இலக்கு இல்லை. பிழைப்புக்கான வேலையில் மாணவர்களை அமரச் செய்யும் கருவி, கல்வி என்பதும் உண்மை.வேலை என்கிற ஒன்றை நோக்கியே படிப்பு என்கிற ஓட்டம் இருக்கிறது. மழலையர் பள்ளியைக் கூட குழந்தைகளின் பிற்காலத்தைக் கணக்கில் கொண்டே பெற்றோர்கள் தேர்வு செய்கின்றனர். குறிப்பிட்டப் பள்ளிக் கூடத்தில் கட்டணம் அதிகம் என்றாலும், நன்கு கற்றுக் கொடுப்பர். தேர்ச்சி பெற்ற பின் நல்ல வேலைக்கு சென்றால், பெற்ற மக்கள் அவர்களை அவர்களேப் பார்த்துக் கொள்ளலாம்.

அந்தக் காலம் போல, வருங்காலத்தில் பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வர் என்கிற ரீதியிலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பெல்லாம் மலை ஏறிவிட்டது. பொருளாதார ரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொண்டு, பிள்ளைகளை தொந்தரவு செய்யாமல் வாழ வேண்டும் என்பது தான் கணிசமான பெற்றோரின் எண்ணம். அதே நேரம் நல்ல வருவாய் கிடைக்கிற இடத்தில் பிள்ளைகள் பணிபுரிய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

இந்த தலைமுறை எப்படிமேலே சொன்னதெல்லாம் பெற்றோரின் பக்கம் உள்ளவை.அவர்கள் பெற்ற செல்வங்கள் எப்படி இருக்கிறார்கள்? தாய், தந்தையின் எண்ணங்களை செயல்படுத்த வேண்டும் என்கிற உத்வேகத்தோடு அவர்களின் அன்றாடம் இருக்கிறதா என பார்த்தால், நிச்சயம் உதட்டைப் பிதுக்கிக் கொள்வது தான் பதிலாக இருக்கிறது.எதிர்காலம் குறித்துப் பெரிய அக்கறை எல்லாம் இன்றி, இந்த நாளை ஆடிக் களித்தல் என்கிற தத்துவ நிலையை எங்கிருந்து இந்தத் தலைமுறையினர் பெற்றனர் என தெரியவில்லை.

நாம் எப்படி இருக்கிறோம்பொதுவாகவே நாம் கடந்த காலத்தில் தான் வாழ்கிறோம். நமக்கான வேலை எதுவாக இருந்தாலும் அதை கைகள் ஒரு புறம் செய்து கொண்டிருந்தாலும், மனம் முழுமையாக அதில் ஒன்றி இருக்காது. வீட்டிலிருந்து நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வாகனத்தை ஓட்டியபடி செல்வோம். தேவைப்படும் நேரத்தில் ப்ரேக் பிடிக்கும் நம் கரங்கள், அதே மாதிரி ஹாரனையும் ஒலிக்க செய்யும். திருப்பங்கள், வளைவுகள், ஒரு வழிப்பாதை என சகலத்தையும் கடந்து சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், வாகனத்தை அமர்த்தி சாவியை எடுத்துக் கொள்வோம்.


வழியில் ஒரு முகம் பூத்த புன்னகை, சாலை ஓரம் அடுக்கி வைக்கப்பட்டப் பூக்கள், பொம்மைகளை வாங்கும் கைகள், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான யாரோ இருவரின் வாக்குவாதம், வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் காவலர் என இதில் தெரிந்த முகங்கள் எத்தனையோ இருந்திருந்தாலும் அவை நம் கவனத்தில் இருக்காது. ஏனெனில் சிந்தனை முழுமையாக சாலையில் என்ன நடக்கிறது என்பதில் இல்லை, அன்றைய தினத்தில் நம் மனத்தை ஆக்கிரமித்திருக்கிற ஏதோ ஒரு சுகமான அல்லது வருத்தமான ஒன்றை மையப்படுத்தி இருக்கும்.

கவனச்சிதறல்அந்தந்தக் கணத்தில் வாழ்வதென்பது 100 சதவீதம் இந்த நிமிடத்தில் இங்கு என்ன நடக்கிறது என்பதோடு இணைந்து இருத்தல். வகுப்பறையாக இருக்கும் பட்சத்தில், அங்கு கற்பிக்கப் படுகின்ற பாடங்களை கூர்ந்து கவனித்தல் என்பது முழுமையாக நிகழ வேண்டும். பாடம் ஆரம்பித்த சில நிமிடங்களில் மனம் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவதைத் தான் கவனச் சிதறல் என்கிறோம். தான் தோன்றியாகத் திரியும் மனமானது, சில நேரத்தில் வகுப்பிலும் தலையைக் காட்டும். அதற்கு பிரியமான விஷயங்கள், விருப்பத்திற்கு உரிய முறையில் பேசப்படுகிறது என்றால் அழகாகக் கேட்கும். உள்வாங்கிக் கொள்ளும். கொஞ்சம் தடம் மாறி கடுமையான வார்த்தைகள்; பாடங்கள் என தொடர்ந்தால், அலுப்பில் மறுபடி மனம், மனம் போல பறந்து விடும்.

கெமிஸ்ட்ரிஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான 'கெமிஸ்ட்ரி' பொருந்திப் போனால் வகுப்பறை அற்புதமான இடமாக இருக்கும்.எளிமையாக பாடம் நடத்தி விளங்கிக் கொள்ளச் செய்வது, தோல்வியில் துவளும்போது உற்சாகப் படுத்துவது, எதையும் எளிதாகக் கடந்து செல்ல முடியும் என உத்வேகமான உரையைக் கொடுப்பது, மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிற போது மனதார பாராட்டுவது, விருப்பு வெறுப்பு இன்றி, முன் முடிவுகளும் இன்றி மாணவர்களை அணுகுபவர்களாக இருக்கும் ஆசிரியர்களே மாணவர்களின் விருப்பம்.
ஒரு நாளில் முதலில் எதிர்படும் போது வணக்கம் சொல்வது, ஆசிரியர் வகுப்பு எடுக்கும் போது சக மாணவர்களுடன் அரட்டை அடிக்காமல் இருப்பது, கற்றுக் கொடுப்பவற்றைக் குறிப்பு எடுப்பது, பாடம் நடத்தும் போதே புரியாததைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வது, பாடம் சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களைப் பற்றி வகுப்பு இல்லாத நேரத்திலும் ஆசிரியருடன் உரையாடுவது, மரியாதையுடன் பேசுவது இதெல்லாம் பொதுவாக மாணவர்களிடம் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இவை இரண்டுமே சரிவர இரண்டு பக்கங்களிலும் பொருந்தி இருக்கும் போது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். இதன் விளைவு, சம்பந்தப் பட்ட மாணவர்களின் வருங்காலத்தை கூடுதல் வெளிச்சமாக்கும்.

எங்கே உள்ளது குறைவீடுகளில் ஒரு முறைக் கூப்பிட்டாலே, “என்னங்க அம்மா, என்னங்க அப்பா” என கேட்கும் குழந்தைகள் அபூர்வமாகிக் கொண்டு வருகிறார்கள். நாலைந்து முறை அழைத்த பின், 'என்ன' என பதில் அசட்டையான குரலில் பிள்ளைகளிடமிருந்து வரும். ஒரு கட்டத்தில் இப்படியான பதில்களைப் பெற்று பெற்றோர்களும் வாழப் பழகிக் கொள்கிறார்கள். வீட்டில் காட்டப்படும் இந்த அலட்சியம் பள்ளிக் கூடத்தில், கல்லுாரியில் தொடர்கிறது.பெற்றோரை, ஆசிரியரை அலட்சியமாக நடத்துவது என்பது தன்னை எல்லாம் தெரிந்தவனாக பிறர் மத்தியில் காட்டும் என்கிற தவறான எண்ணமே இவர்களை இப்படி நடந்து கொள்ளச் செய்கிறது.வீட்டில் பெற்றோர்கள், ஆசிரியர்களை மரியாதையாகப் பேச வேண்டும். 'நான் வந்து உங்க மிஸ்ஸ கேக்றேன், அதென்ன உங்க சார் இப்படி திருத்தி வச்சிருக்காரு, பீஸ் வாங்குறாங்கல்ல சொளையா, நேர்ல வர்றேன்' இந்த ரீதியில் ஆசிரியர்களை குறை கூறி வீட்டில் பெற்றோரின் பேச்சு இருந்தால், கற்றுக் கொடுக்கும் பாடங்களை இந்த மாணவர்கள் எந்த இலட்சணத்தில் உள் வாங்கிக் கொள்வார்கள்? ஆசிரியர்களையும் எப்படி மரியாதையாக நடத்துவார்கள்?

ஆசிரியரிடம் குறை இருந்தால்ஆசிரியர்களிடம் குறை இருப்பதாக தெரிந்தால், பெற்றோர்களே நேரடியாக சென்று பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, ஏதோ குழந்தைகளிடம் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு, மறைமுகமாக மாணவர்களின் கற்கும் திறனை மட்டுப்படுத்தக் கூடாது.பெற்றோர்கள் மீது இந்தத் தலைமுறைக்கு அன்பு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மரியாதை என்பது அரிதாகத் தான் இருக்கிறது. ஆசிரியர்களிடம் மரியாதை என்பது ஒப்புக்கு இருக்கிறது. நமக்குக் கற்பிக்கிறாரே, தெரியாத ஒன்றைப் பற்றி விளக்கி நம் அறியாமையைப் போக்குகிறாரே, வாழ்க்கை ஓட்டத்தில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி விடும் ஆசிரியரிடம் மரியாதையாகப் பேச வேண்டும் என மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோரும் உதவ வேண்டும்.சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கூட்டணி நம் அறிவுக் களத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நிகழ வைக்கும்.-தீபா நாகராணி எழுத்தாளர், மதுரை nraniji@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Nesan - JB,மலேஷியா

    கல்வி என்பது அறிவை வளர்க்கும் ஆனால் அதுவே வாழக்கை ஆகாது. குக்கிராமத்திலிருந்து, ஏழ்மை நிலையிலிருந்தும் படித்த எத்தனையோ பேர் இன்றும்,என்றும் மேதைகலாய் உலகு எங்கும் சிறந்து விலங்குகிறார்கள். அந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் பெற்றோர்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை கைவிட்ட்தில்லை. ஆசிரியர்களை உயிரினும் மதிக்கிறார்கள். அதற்க்கு மூல கரணம் அவர்களது பெற்றோர்கள் தாயக,தந்தையாக,நல் ஆசானை அடிப்படை பண்புகளை சின்னம்சிறு வயதில் தளிர்களின் இதயங்களில் நல் விதையாய் விதைத்தே. இன்றைய பிள்ளைகள், மாணவ செல்வங்கள் எதிர்காலம் குறித்துப் பெரிய அக்கறை இன்றி, நிகழ் காலத்தின் அருமையும், பெருமையும் புரிதலும் இன்றி "இந்த நாளை ஆடிக் களித்தல் என்கிற தத்துவ நிலையை எங்கிருந்து இந்தத் தலைமுறையினர் பெற்றனர்" பத்தாம் பசலித்தனமான, தனிமனித மற்றும் சமூக கடமை என்னவென்று கற்றுக்கொள்ளாத பெற்றோரிடம் இருந்துதான். பிறந்த குழந்தை வளரும்பொழுது தாய் தந்தை முகம் பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கவேண்டிய மழலை ஸ்மாட்போனை பார்த்து இளிக்கிறது. எதையோ அக்கறையுடன் அடையாளம் காண துடித்து அழுகும் குழந்தையின் கையில் அடக்கமான ஐபோன் அடைக்கலமாகிறது. இது யார் குற்றம்? இவர்களால் "நிகழ்காலம் மட்டுமே நிரந்தராமானவை" என்ற ஜெ.கே யை எடுத்துரைக்க இயலுமா? "அன்றைய தினத்தில் நம் மனத்தை ஆக்கிரமித்திருக்கிற ஏதோ ஒரு சுகமான அல்லது வருத்தமான ஒன்றை மையப்படுத்தி" மனதை அலைபாய விடும் பெற்றோர்களால்,ஆசிரியர்களால் தனது குழந்தை செல்வங்களுக்கு,மாணவசெல்வகளுக்கு எப்படி கவனச்சிதறல் இன்றி நிகழ் காலத்தை கையகப்படுத்துவது என்று கற்பிக்கமுடியும்?. "வீடுகளில் ஒரு முறைக் கூப்பிட்டாலே, “என்னங்க அம்மா, என்னங்க அப்பா” என கேட்கும் குழந்தைகள் அபூர்வமாகிக் கொண்டு வருகிறார்கள்." இதற்க்கு யார் காரணம்?, பெற்றோர்களே. சின்ன சிறுவயதிலேயே அன்பையும், பன்பையும்,நேசத்தையும், நல்ல ஒழுக்கங்களையும் ஊட்டவேண்டும். மரியாதையாக எப்படி தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதர சகோதிரிகள், உற்றார் உறவினர்களை அழைப்பது,மதிப்பது என்பதை குழந்தை பருவத்திலே பெற்றோர்கள் நன்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அப்படி கற்றுக்கொடுத்தல் பசுமரத்து ஆணிபோல் மனதில் இளமையிலேயே பதிந்துவிடும். ஐந்தில் வலையாயது ஐம்பதில் வளையாது என்பார்கள். அப்படி போதித்து வளர்க்கப்படுபவர்கள், கல்வித்துணையுடன் அறிவை வளர்ப்பார்கள்,ஆசானை மதிப்பார்கள்,நிகழ் காலத்தை பொன்னால் ஆக்குவார்கள், கவனச்சிதறலய் களைந்துவிடுவார்கள், அனைத்து நற்பண்புகளும் நற்குணமாகும். அனைத்திற்கும் பிறப்பும், வளர்ப்பும் அடிப்படை காரணம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement