விவசாய சீர்திருத்த மசோதா சர்ச்சையை தீர்க்குமா அரசு?
விவசாய விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, உத்தரவாதம் அளிப்பது மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என, மூன்று சட்ட மசோதாக்கள், சமீபத்தில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம், லோக்சபாவில் நடந்த போது, பா.ஜ.,வின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான, அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் மசோதா நிறைவேற்றத்தை கண்டித்து, அக்கட்சியின் சார்பில், மத்திய அமைச்சராக இருந்த, ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இந்த விவசாய சீர்திருத்த மசோதாக்களால், விவசாய விளைபொருட்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது. விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை, மசோதாக்கள் உறுதி செய்யும். 'விவசாயிகள், தங்களின் உற்பத்தி பொருட்களை விற்க, அரசுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. விவசாய துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கும்' என, சாதகமான பல அம்சங்களை, மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. விளைபொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்துவைக்கவும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் உண்டு என்பதும், மோடி அரசின் வாதம். ஆனால், நம் நாட்டின் விவசாயம் என்பது, மாநில அரசின் கீழ் உள்ளது. அதனால், மூன்று சட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளன. சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் முன், மாநில அரசுகளை, மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.புதிய சட்டங்கள், பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன. அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விவசாயிகள் செல்ல நேரிடும். விவசாய விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது முடிவுக்கு வந்து விடும். குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பது நீடிக்கும் என்பதை, புதிய சட்டங்கள் உறுதி செய்யவில்லை. பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளன. விவசாயத்தையும், உணவு பாதுகாப்பையும், புதிய சட்டங்கள் அழித்து விடும். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து, சில பொருட்கள் நீக்கப்பட்டுள்ளதால், பதுக்கல் அதிகரிக்கும். விலைவாசி உயரும் என்பது, விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பு வாதம். நாட்டின் முதுகெலும்பாக உள்ளது விவசாயம். அதை சார்ந்திருப்போர், முக்கியமான ஓட்டு வங்கி என்பதை, பா.ஜ., உட்பட, அனைத்து அரசியல் கட்சியினரும் நன்கறிவர். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆறு ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் முக்கியமானது. இதன் வாயிலாக, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, ஆண்டுக்கு, 6,000 ரூபாய், மூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதேபோன்று, விவசாயிகளின் நலன் காக்கும் நல்ல எண்ணத்தில் தான், தற்போது, மூன்று சட்ட திருத்த மசோதாக்களும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும், விமர்சனங்கள் எழுந்துள்ளன. நம் நாடு, உணவு தானிய உற்பத்தியில், உபரி நிலையை எட்டியதற்கு, மத்திய, மாநில அரசுகளின் குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருப்பது முக்கிய காரணம். அதற்கு பாதகம் வந்து விடும் என்பதே குற்றச்சாட்டு. அதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, நம்பிக்கையின்மையை போக்க வேண்டும். இந்த மசோதாக்கள் விஷயத்தில், தேசிய அளவில் விவாதம் நடத்தி, மாநில அரசுகள் உட்பட, விவசாயம் மற்றும் விளைபொருட்கள் சார்ந்த அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள், கருத்துகளை கேட்கலாம். விவசாயிகள் குறைகளை, பிரச்னைகளை தீர்க்கும் விஷயத்தில், மத்திய அரசு கவனக்குறைவாக செயல்படுவது அவ்வளவு சரியானதல்ல; மேலும், பொருளாதார ரீதியாக பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.எதிர்க்கட்சிகளின் விஷம பிரசாரத்தால், அரசியல் ரீதியாக தாக்கங்களையும் ஏற்படுத்தலாம். எனவே, இந்த விஷயத்தில் தேவையான மாற்றங்கள், திருத்தங்களை மத்திய அரசு செய்ய முன்வந்தால் அதுவே நல்லது. விவசாய சீர்திருத்த மசோதா சர்ச்சையை தீர்க்குமா அரசு?பிரதமர் மோடியும், அவரது அரசும், இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளும் என, நம்பலாம்.
வாசகர் கருத்து (1)
மைய அரசு வேளாண்மையில் பல பிரிவு வேளாண் மக்களையும் நிபுணர்களையும் ஆலோசிக்காமல் இந்த விரிவான அதிரடி திட்டம் வடிவமைத்து இருக்காது. ஆனால் இந்த ஆலோசனைகளை பொது விவாதத்துக்கு விட்டு பின்னர் சட்டம் இயற்றி இருக்கலாம். மணிலா அரசுகளையும் ஆலோசித்திருக்கலாம் - நிச்சயம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகள் இந்த விரிவான திட்டத்துக்கு தடை சொல்லி இருக்கும். ஆனால் இந்த சட்டம் பெரு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு / நுகர்வோருக்கு பாதகமான வழியில் பயன்படுத்தாது என கூறமுடியாது எதையும் கெடுத்து ஆதாயம் பெரும் திறமையும் சிறுமையும் இக்காலத்தில் பெருமனிதர்கள் / நிறுவனங்களுக்கு உள்ளது. வாங்கி பணத்தை கடன் வாங்கி கொள்ளை அடித்த பெருமனிதர்கள் / வணிகர்கள் மட்டுமல்ல அரசு உயர் அதிகாரிகள் / அமைச்சர்கள் கூட முறைகேடுகளை நிகழ்த்தும் சூழல் கண்டு வருகிறோம்.. எனவே தலைமை அரசு என்ன முயன்றாலும் முறைகேடுகள் தோன்ற வாய்ப்புள்ளது. இருந்தாலும் தலையங்கத்தில் கூறியபடி அரசு முறையாக அம்சங்களை போக்கி தக்க கண்காணிப்பில் புதிய நடைமுறை அமலுக்கு வர முனைப்பு காட்டவேண்டும். மாநில அரசுகள் வழக்கு போட்டால் state listed subject தலையீட்டுக்கு எப்படி நீதிமன்றம் பார்க்கும், மைய அரசின் வாதம் எப்படி இருக்கும் என்று தெரியாது. லேசில் ஒரு நல்ல திட்டம் வர விடமாட்டார்கள். பெருவிவசாயிகள் பலர் மொத வணிகராகவும் (இடுபொருள் /விளைபொருள் எல்லா வற்றிலும்) உள்ளதால் அவர்களும் எதிர் கட்சிகளுடன் குரல் கொடுப்பது எதிர்பார்க்கப்பட்டதே ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தோல்வி அடைந்த நிலையை அறிவோம். வணிகர்கள் கூட்டு சேர்ந்து குறைந்த விலைக்கு விளைபொருள்களை பெற (போட்டியில்லாமல் - விலை ஏற்றி bid கேட்காமல்) விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர். ஆனால் நுகர்வோருக்கு வரும்போது பலமடங்கு விலை ஏற்றி வணிகர்கள் லாபம் அடைந்தனர். எனவே ஒரு நல்ல திட்டம் வந்தால் போதாது அதை கண்காணித்து குறைகளை நீக்க 'சரியான 'அமைப்பு அதிகாரம் வேண்டும் (அதிலும் கட்சிக்காரர்கள் ஆதிக்கம் வந்துவிடக்கூடாது). பார்க்கலாம் என்ன செய்கிறது மைய அரசு