LOGIN
dinamalar telegram
Advertisement

எங்கும் ஒலிக்கட்டும் அமைதியின் மணி :இன்று (செப்.,21) சர்வதேச அமைதி தினம்

Share

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இன்று ஜப்பானிய அமைதிமணி ஒலிக்கப்பட்டு ஒரு நிமிட மவுனம் அனுஷ்டிக்கப்படும். இவ்வொலி சிறு ஒலியானாலும்,வீரியமிக்க ஒலி... வன்முறை மிகுந்த உலகில் அமைதியைப் பறைசாற்றும் ஒலி.

அமைதி மணியின் உருவாக்கம்இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது. மற்ற உலகநாடுகளும் உணர்ந்தன. இதன் விளைவாக 1945 அக்டோபரில் உலக அரசுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபை அமெரிக்க மண்ணில் உருவாக்கப்பட்டது.


இதன் உருவாக்கத்தில் நம் இந்திய நாடும் முக்கிய பங்கு வகித்து உறுப்பினராகச் சேர்ந்தது பெருமைக்குரிய விஷயம்.ஜப்பானிய ஐக்கியநாடுகள் சபை அமைப்பு சார்பில் உலகின் பல நாட்டுப் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மற்றும் குழந்தைகளிடம் அந்நாட்டின் நாணயங்கள் நன் கொடையாகப் பெறப்பட்டு அமைதிமணி உருவாக்கப்பட்டது. இந்திய, தமிழகக் குழந்தைகளின் பங்களிப்பும் இதில் உள்ளது.இது 1945 ஜூன் 8ல் ஜப்பானிய மக்களால் ஐ.நா.சபைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

அமைதி மணியின் கோபுரம்ஜப்பான் நாட்டின் பழமையான ஹனாமிடோ ஆலய அமைப்பிலேயே அமைதி மணியின் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒலிக்கப்படும். முதலாவதாக 'வசந்தகால வசன உத்தராயண' நாளன்று உலக பூமிதினத்தினை கொண்டாடும் விதமாக உலக பூமிப் பாதுகாப்பு அமைப்பு தேர்வு செய்யும் அமைதி ஆர்வலரால் ஒலிக்கப்படும். இரண்டாவதாக ஐ.நா.பொதுச் செயலாளரால் செப்டம்பர் 21 அன்று ஒலிக்கப்பட்டு அவரது அமைதி தின உரையும் நிகழ்த்தப்படும்.

சர்வதேச அமைதி தினம் 1981 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ல் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் போர்கள் நிறுத்தப்பட்டு 'போர் நிறுத்த நாள்' ஆகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகின் எந்த மூலையிலும் போர், வன்முறை நிகழாமல் இன்று பார்த்துக் கொள்ளப்படும்.

உலகில் அமைதியினை வலியுறுத்தும் வண்ணம் இங்கிலாந்து, மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா போன்ற நாடுகள் ஐ.நா.பொதுச் சபையில் முன்வைத்த தீர்மானம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைதியின் மேம்பாட்டுக்காக 'அமைதிதினம்' அங்கீகரிக்கப் பட்டு 1981 முதல் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. 2001 முதல் செப்டம்பர் 21ம் தேதியன்றே கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் உருவாக்கத்தில் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் முக்கியப் பங்கு வகித்தார்.உலக அமைதி தினம், போர் நிறுத்தம் மற்றும் அகிம்சை ஆகியவற்றிற்கான நாள்.

கருப்பொருள்ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கியமான கருப்பொருளையொட்டி உலக முழுவதும் அமைதிப் பணி ஆற்றப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக 'அமைதியை இணைந்து மேம்படுத்துதல்' எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்குகள், கூட்டங்கள், கண்காட்சிகள், வினாடிவினா, பேச்சு, கட்டுரைப் போட்டிகள், அமைதி ஊர்வலங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.


கோவிட்-19 அச்சுறுத்தலுக்கிடையே அதன் விதிகளை மீறாமல் இந்நிகழ்வுகள், சமூக இடை வெளியுடன், பாதுகாப்பாக நடைபெறவுள்ளன.வன்முறையின் உச்சநிலை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா - நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணு குண்டுகளின் மூலம் வெளிப்பட்டது. நேச நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் இடையில் நடந்தது .இரண்டாம் உலகப் போர். அமெரிக்காவின் முத்து துறைமுகத்தில் 1941 டிசம்பர் 7 அன்று ஜப்பானிய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஏற்பட்ட சீர் குலைவால் போர் புது வடிவெடுத்தது.

பேரழிவு அணுகுண்டுகள்அமெரிக்காவின் 'மன்ஹாட்டன் திட்டம்' வாயிலாக உருவாக்கப்பட்ட அணுகுண்டுகளை பரிசோதிக்கவும், அடிபணியாத ஜப்பானுக்குப் பாடம் புகட்டவும் ஜனாதிபதி ஹாரிட்ரூமேன் உத்தரவால் 1945 ஆகஸ்ட் 6 காலை 8:15 மணிக்கு 'லிட்டில்பாய்' எனும் அணுகுண்டும் ஆகஸ்ட் 9 ல் 'பேட்மேன்' எனும் அணுகுண்டும் போடப்பட்டன. இக் குண்டு வீச்சுக்களால் இரு நகரங்களிலும் 1,50,000 மற்றும் 75,000 என மொத்தம் 2,25,000 அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்டனர்.

அணுக்கதிர் வீச்சின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. பல்வேறு விதமான உடல் - உளவியல் ரீதியான கடும் பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே தான் ஜப்பான் நாடு அமைதியின் தேவையை நன்குணர்ந்து குண்டு விழுந்த மையப்புள்ளி இடத்தில் அமைதிப் பூங்காவினை நிறுவியுள்ளது. ஐ.நா.சபைக்கு 'அமைதிமணி'யினையும் நன்கொடையாய் அளித்துள்ளது.


யுனெஸ்கோவின் அடிப்படை இலக்குகளில் ஒன்று, “போர் என்பது மனித மனங்களில் தோன்றுவதால் அமைதிக்கான விதைகளை மனித மனங்களிலேயே விதைக்க வேண்டும்” என்பதாகும்.

இருளை விரட்ட“ஐ.நா.சபையின் அமைதிக் கலாச்சாரத்திற்கான 10 ஆண்டுகள்” எனும் திட்டத்தையொட்டி உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டன. இந்திய நாடும் தமிழகமும் இவ் அமைதிக் கலாச்சாரப்பணியில் சிறப்பான பங்களிப்பினைக் கொடுத்தன. தெற்காசியப் பிராந்தியத்திலேயே ஸ்திரமான மக்களாட்சியுள்ள நாடு இந்தியா மட்டுமே. ஆனாலும் அமைதியின் தாயகமான இந்திய நாட்டிலும் இன்று அது சீர்குலைந்து அமைதியின் தேவை அனைவராலும் நன்கு உணரப்பட்டுள்ளது. இரண்டு உலகப் போர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான போர்கள், ஆயுதச் சண்டைகளைச் சந்தித்து, உலகம் முழுவதும் அமைதியை மக்கள் வரவேற்கத் தயாராயுள்ளனர்.

நியூக்ளியர் குண்டுகள்சீன நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வெடி மருந்து இன்று பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளில் எடுத்துச் செல்லப்பட்டு உலகையே நொடியில் தாக்கி அழிக்கும் நியூக்ளியர் குண்டுகளாகவும், ரசாயன மற்றும் உயிரி குண்டுகளாகவும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்ற போர்களில் நிர்கதியாகக் கொல்லப்பட்ட 300 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களை இன்று நொடியில் தாக்கிக்கொல்லும் தீயசக்தி படைத்தவர்களாக மனித இனம் மாறியுள்ளது.வறுமை, கல்வியின்மை, பாலியல் வன்முறைகள், சர்வாதிகாரம், லஞ்சம், விழிப்புணர்வின்மை போன்றவற்றிலிருந்து விடுபட்டு அமைதியான, போரற்ற, ஏற்றத்தாழ்வில்லாத உலகைப் படைத்திட இந்த உலக அமைதி தினத்தில் உறுதியேற்போம்.

காந்தியின் 150வது பிறந்த தினம், ஐ.நா.சபையின் 75ஆவது ஆண்டு விழா, யுனெஸ்கோ அமைதிக் கலாச்சார 20ம் ஆண்டு நிறைவுவிழா நடக்கும் தருணத்தில் அமைதியின் தேவையைப் பற்றிச் சிந்திப்போம்! செயல்படுவோம்!

- முனைவர். த. ரவிச்சந்திரன்

காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலை


காந்திகிராமம்

94430 37339

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement