LOGIN
dinamalar telegram
Advertisement

பாடநுால் குழுவிற்கு 'சபாஷ்!'

Share

சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சமீபத்தில் நடந்த, 'நீட்' நுழைவுத் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து, 96 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன என்ற செய்தி, மகிழ்ச்சியை அளிக்கிறது.இத்தேர்வை, ஒரு லட்சம் தமிழக மாணவர்கள் உட்பட, நாடு முழுதும், 14 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.


இந்த தேர்வில், மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றன; இதில், 173 வினாக்கள், நேரடியாக தமிழக பாட திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.மேல்நிலை வகுப்புகளில், அறிவியல் பாடப்பிரிவில், அதிகளவில் பாடங்கள் திணிக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு, பரவலாக முன்வைக்கப்பட்டது; இது, மாணவர்களுக்கு சுமையாக இருக்கும் என, விமர்சிக்கப்பட்டது. ஆனால், அந்த பாடத் திட்டமே, இன்று பாராட்டப்படுகிறது!

தேசிய அளவில் நடைபெறும் தேர்வை, நம் மாணவர்கள் எளிதான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை, இப்போது பலருக்கு விளங்கியிருக்கும்.'மத்திய அரசின் பாட நுால்கள் தான் சிறப்பானவை; அவற்றிலிருந்து தான், அதிக அளவில் வினாக்கள் இடம்பெறும்' என்ற மாயை, இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு உடைத்தெறிந்துள்ளது.

இனிவரும் காலங்களில், மேல்நிலை வகுப்பில், அறிவியல் பாடப் பிரிவை கண்டு, மாணவர்கள் அச்சமடையாமல், முயன்று படிக்க வேண்டும். சுமாரான மதிப்பெண் பெற்றாலும் கூட, அதே படங்களை மீண்டும் நல்ல முறையில் படித்து, நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியும்.

புத்தகம் பெரியது; பாடம் அதிகம் என பயமுறுத்தாமல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், நம் பாடத்திட்டத்தை தன்னம்பிக்கையுடன் முயன்று படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு, தரமான முறையில், தொலைநோக்கு பார்வையில், பாடங்களை தொகுத்து அமைத்த, பாடநுால் குழுவினருக்கு, பாராட்டுகள்!

அவருக்கு இரங்கல் மட்டும் தானா!

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில், 'தாய்வீடு' என கல்வெட்டால் பொறித்திருந்த, தன் அண்ணன், எம்.ஜி.சக்ரபாணி வீட்டில் தான், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆரும் வசித்து வந்தார். அதன் பின் தான், ராமாபுரத்தில் குடியேறினார்.கடந்த, 1986ல், சக்ரபாணி காலமானார். அண்ணன் உடலை பார்த்து, குழந்தையைப் போல தேம்பி அழுத, எம்.ஜி.ஆரைக் கண்டு அங்கிருந்த அனைவரும் உருகினர்.

அப்போது, அமைச்சர்களாக இருந்த ராமசந்திரன், சு.முத்துசாமி, திருநாவுக்கரசு உட்பட பலர், சக்ரபாணியின் உடலை எடுத்து செல்ல வந்த வாகனத்தை, மாலைகளாக அலங்கரித்தனர்; கட்சியின் தலைவர்கள் அனைவரும், இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை, போட்டி போட்டு செய்தனர்.சமீபத்தில், சக்கரபாணியின் மகன் சந்திரன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, ராஜிவ் அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.


இவர் மறைவுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், இரங்கல் மட்டும் தெரிவித்துள்ளனர்.ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், சந்திரன் குடும்பத்திற்கு நிச்சயம் உதவி இருப்பார். கருணாநிதியின் மூத்த மகன், மு.க. முத்துவிற்கே உதவி செய்தவர், அவர்.அ.தி.மு.க.,விற்குள், ஜெயலலிதாவின் வருகையை, அப்போது முன்னணி தலைவர்களாக இருந்த, ஆர்.எம்.வீரப்பன், பொன்னையன், காளிமுத்து போன்றோர் எதிர்த்தனர்.


அப்போது, ஜெ.,க்கு ஆதரவு கரம் நீட்டியவர்,எம்.ஜி.சக்கரபாணி.தி.மு.க., மாவட்ட செயலராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்த, ஜெ.அன்பழகன், கொரோனா நோயால் பாதிக்கபட்டு, உயிரிழந்தார். அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, முதல்வர் இ.பி.எஸ்., 'அவருக்கு, எந்த உதவியும் செய்ய, அரசு தயாராக உள்ளது' என்றார்.

தன், 'டுவிட்டர்' பக்கத்தில், இறைவனை பிரார்த்தனை செய்து வேண்டினார், பன்னீர்செல்வம். சுகாதாரத் துறை அமைச்சர், டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கே சென்று, டாக்டரிடம் சிகிச்சை முறை குறித்து விசாரித்தார்.உயர்தர தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்காக, வரிந்துகட்டி களமிறங்கிய ஆளுங்கட்சியினர், அரசு மருத்துவமனையில் இறந்த, எம்.ஜி.ஆரின் அண்ணன் மகனை கண்டுகொள்ளவில்லையே. அரசியலில் இதுவும் சகஜம்!

மறக்கமுடியுமா?
ஓகை நாகலெஷ்மி, திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:


'ஆள்பிடிக்கும் அரசியலை, தமிழகத்திலும் நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது. தமிழகத்தின் பண்பாட்டிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும், ஒரே எதிரியாக பா.ஜ., திகழ்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இந்த ஆள் பிடிக்கும் வேலையெல்லாம், தி.மு.க., பழக்கமில்லை போலும்!


'மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா' நடத்தியது எல்லாம், தி.மு.க., நடத்திய நாடகமா? அ.தி.மு.க.,வில் இருந்த எத்தனை பேர், இன்று, தி.மு.க.,வில் உள்ளனர் என, பட்டியல் எடுத்து பாருங்கள். அவர்களுக்கு, 'துாண்டில்' போட்டது யார்?தங்கள் தலைமையிலான கூட்டணியில் இணைய மறுக்கும் கட்சிகளை உடைத்து, அங்கிருப்போரை இழுத்து, இதயத்தில் மட்டும் இடமளிப்பது, தி.மு.க.,விற்கு வழக்கம் தானே!

கலாசாரம், பண்பாடு குறித்து, தி.மு.க., அக்கறைக் கொள்வது, பாராட்டத்தக்கது. தாலி அறுப்பு, நான்கு மனைவியர் என, தி.மு.க.,வினரிடம் நாம் காணாத கலாசாரமா? அரசியல் சாசன சட்டத்தையே எரிக்க முயன்ற, தி.மு.க.,வினரின் நாட்டுப்பற்றும், மக்களுக்கு புரியாததல்லவே! இனம், மொழி, மத வெறியைத் துாண்டி, நாட்டின் ஒற்றுமைப்பாட்டுக்கு, தி.மு.க., செய்த, 'அரும்பணிகள்' எத்தனையோ இருக்கின்றன.அனைத்தையும், மறக்க முடியுமா?

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சக்கரபாணிக்கு ஏகப்பட்ட பிள்ளைகள் பேரன்கள் ஒவொரு நல்ல கெட்ட காரியத்துக்கும் முதல்வர் போகமுடியுமா .அண்ணா குடும்பதை திமுக மறந்த காலம் இது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எத்தனை தான் தேர்வு மிக சுலபம், எளிமை, தெரிந்த பாடங்கள் என்று தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினாலும், ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்று எதிர்கொள்ளாது மாய்த்துக் கொண்டவர்களை மட்டும் உதாரணம் காட்டுபவர்கள் கண்களில் இதெல்லாம் தென்படவே செய்யாது

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    தெற்காசிய யுனஸ்கோ விருது பெற்றவர் யார் என்ற கேள்வி இருந்ததா? உதய நிதி என்பதுதானே பதில்?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement