LOGIN
dinamalar telegram
Advertisement

கட்டுமானம் - தலை கவனம்!

Share

செட்டி நாட்டு மாளிகைகள் வீடுகள் அல்ல, கோட்டைகள். நுாறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டடங்கள், இன்னும் உறுதியுடன், நிலையாக இருப்பதை பார்க்கும் போது, கட்டடக்கலை பற்றிய படிப்பறிவு இல்லாது இருந்தும், அனுபவ அறிவுடன் கட்டிய, அந்த, மூன்று தலைமுறைகளுக்கு முந்தையகட்டடக் கலைஞர்களுக்கு, 'ராயல் சல்யூட்' அடிக்கத் தோணுகிறது.

பின் சொன்னார்கள், '1950 - 2000க்கு உட்பட்டு கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு ஆயுள், 60 ஆண்டுகள் தான். அதுவும், அடிக்கடி பராமரிப்பு செய்து வந்தால் தான்' என்றனர்.காரணம், மண், சிமென்ட் கலவையின் தரம், ஏனோ தானோ என்று வேலை பார்க்கும் பணியாளர்கள். இன்னொன்றும் சொன்னார்கள்; 'கட்டடக் கலைத் திறன் வாய்ந்த கொத்தனார், தச்சு ஆசாரி, எலக்ட்ரீஷியன், பெயின்டர் எல்லாம், அரபு நாடுகளுக்கு பணி தேடிச் சென்று விட்டனர்' என்று.இப்போது அடிக்கடி செய்திகள் வந்து மனதை அச்சப்படுத்துகின்றன.

வரவேற்கக் கூடியதே'அடுக்கு மாடி வீடு இடிந்து, கோவையில், நான்கு பேர் பலியாகி விட்டனர்; கட்டப்படும் நிலையில் ஒரு அடுக்கு மாடி சரிந்து பணியாளர் பலி; பக்கத்து வீட்டுச் சுவர் விழுந்து, அடுத்திருந்த ஓட்டு வீடுகள் காலி. 'அதில் குடியிருந்தவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி' என, செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட செய்திகள் வரும் போது, ஏன் இப்படி நேருகிறது என்று மனம் பதை பதைக்கிறது.

காரணம், கட்டுமான கான்ட்ராக்டரின் ஆசை, பேராசை. எந்தத் தொழிலும், 20 சதவீதம் லாபம் இருக்கக் கூடியது வரவேற்கக் கூடியதே. ஆனால், 50 சதவீதம் லாபத்திற்கு ஆசைப்பட்டு, தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவது, 'பிளான் அப்ரூவல்' பெற, 'கமிஷன், கரப்ஷன்' என்று உட்கார்ந்த இடத்தில் இருந்து, வாய்க்கரிசி சம்பாதிப்பவர்களைப் பார்ப்பதால், தானும் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்று ஏற்படும் சபலம், விடிகிறது, வீடு கட்டுபவர்கள் தலையில்!

என் சொந்த அனுபவம். திருப்பத்துாரில், 2004ல் சிறிய வீடு தான் கட்டினேன். புதிய இன்ஜினியரிடம் கான்ட்ராக்ட் கொடுத்தேன். அண்ணனிடம் அவர் தொழில் பழகியவர், தானும் தனித்து வளர வேண்டும் என விரும்பிய, இளைஞர். நம்பிக் கொடுத்தேன். அப்போது மிக நன்றாகத் தான் பழகினார்.திருச்சியில், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் போது உடன் இருந்த அனுபவம் எனக்கு. ஆனால், கட்டுமானத் தொழில் நுணுக்கம் தெரியாது. சாமான் கொள்முதல், சம்பள பட்டுவாடா, கட்டட விற்பனை, இதில் தான் என் கவனம்.


வரைபட பொறியாளர், கட்டுமான பொறியாளர்கள், அறுபதுக்கும் மேற்பட்ட கொத்தனார்கள் பணியாற்றினர்.ஆண்டு, 1997. அவரவர் வேலையில் அவரவர் கவனம். மேற்பார்வையாளர்களின் ஈடுபாட்டுடன் தொழில். நான் பொதுப் பார்வையோடு சரி.அதே மாதிரி தான் இவரும் கட்டுவார் என்று நம்பி விட்டேன். இப்போது, மூன்று கார், பங்களா, தோட்டம், துறை என்று பெருத்த வசதி. 150 வீடுகளுக்கு மேல் கட்டி விட்டார். உழைப்பு, திறமை என்று நினைத்துக் கொண்டேன்.

என் வீடும் இரண்டு அறைகள்,ஒரு ஹால், ஒரு அடுக்களை,முன் வராண்டா என சிறிய அமைப்பு தான். ஆறே மாதத்தில் கட்டி விட்டார். சுறுசுறுப்பு என நினைத்தேன். அது தப்பு என்று காட்டியது, பின் நான் பட்ட சூடுகள்.

நெஞ்சம் பதறுகிறதுகடந்த, 2014ல், தாய்ச் சுவற்றில் விரிசல். இன்ஜினியரைக் கூப்பிட்டேன். வருகிறேன் என்றார், பார்க்கிறேன் என்றார் வரவில்லை. வேறு நபர்களை வரவழைத்து கொத்திப் பூசினேன். செலவு, சிரமம்.2016ல், திரும்பவும் மறு சுவற்றில் கோடு ஓடியது. பெரும் பிளவு வந்து விடுமோ என பயம். கொத்திப் பூச, இருபது நாட்கள் ஆகின. வளர்ந்து விட்ட அந்த இன்ஜினியர், பல முறை சொல்லியும் வந்து பார்க்கவில்லை; என் செலவில் சரி செய்தேன்.
கடந்த, 1ம் தேதி வீட்டுக்குள் உள்ள ஒரு அறை. சாமான்கள் வைப்பதுடன், பூஜை அறையும் கூட. திடுமென சத்தம். நல்ல வேளை அறைக்குள் யாரும் இல்லை. திறந்து பார்த்தால் அறை முழுதும் சிமென்ட் சிதறல்கள். யாராவது உள்ளே இருந்து, அவர்கள் உடலில் சிதறல்கள் பட்டு இருந்தால், உயிர் என்ன ஆகி இருக்கும்...நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

அறை முழுதும் இருந்த சாமான்கள் மேல், சிமென்ட் சிதறல்கள். புழுதிப்படலம். கொரோனா காலம். துணைக்கு யாரும் வராத நிலை. வயது முதிர்ந்த என் மனைவியும், நானும், சிமென்ட் சிதறல்களை சேகரித்தோம்; ஒரு மூட்டை இருந்தது.திரும்ப அந்த இன்ஜினியருக்கு பலமுறை போன் செய்தும் வருவதாகக் சொன்னவர் வரவே இல்லை. 'புது வேலை தருகிறேன்' என்று சொல்லி இருந்தால், ஓடி வந்து இருப்பார். மனம் பணத்திற்கு தான் அலைகிறது.மேல் பூச்சு சரிவு. பக்கத்தில் மின் விசிறி. நல்ல வேளை அது விழவில்லை.

அதை படம் எடுத்து, என் மகனுக்கு அனுப்பினேன். அவர் பார்த்து விட்டு, சென்னையில் கட்டுமானப் பொறியாளர்களைக் கலந்து, தகவல் சொன்னார். 'இனி அந்த அறைக்குள் போக வேண்டாம்' என.அந்த அறையில், 3 அடிக்கு, 2 அடி பூச்சு உதிர்ந்து விட்டது. காற்று பூச்சுக்குள் ஊடுருவி உப்பலாகி வெடித்து விட்டது.


நல்லவேளையாக, கான்கிரீட்டில் பாதகம் ஏற்படவில்லை. இன்னும் வெடிப்புகள் இருக்கலாம்; விழக்கூடும். காரணம் கான்கிரீட் மேடு, பள்ளமாகப் போட்டது என்பது தெரிந்தது.விரைவில் வேலையை முடிக்க வேண்டும் என்று, சாதாரண சிமென்ட் தடவி, அதன் மேல் பூசி இருக்கக் கூடும். பூச்சுக்குப் பின், குளிர தண்ணீர் அடிக்காதது என்று, பல காரணங்களை வல்லுனர்கள் சொன்னார்கள்.

ஏன் கட்டும் போதே, பார்த்து கட்டவில்லை... காசு ஆசையா; திறமை இல்லாத பணியாளர்களா? என் கிராமத்து வீடு, எந்த பின் பராமரிப்பு செலவும் இல்லாமல், 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னமும் அப்படியே இருக்கிறதே; அது எப்படி?இந்த மாதிரி கட்டுமானம் செய்வோர் மீது, நுகர்வோர் குறைதீர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், என் மனம் கேட்கவில்லை.


இப்போதிலிருந்து, 40 - 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், நினைவு மண்டபங்கள் இப்போதும், கல்லு போல இருக்கின்றன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்ட பல வீடுகள், கட்டடங்கள், கிழடு தட்டிப் போயுள்ளனவே... ஏன் என்று யாராவது சிந்தித்தோமா? சிந்திப்பதே இல்லை

கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி, சேர்த்த பணத்தில் வீடுகள், கட்டடங்கள் கட்டுகிறோம். அவை, சரியான விதத்தில், வலுவாக கட்டப்படுகின்றனவா என, அநேகமாக யாரும் சிந்திப்பதே இல்லை. பல வீடுகளை கான்ட்ராக்ட் எடுத்துள்ள இன்ஜினியர் அல்லது மேஸ்திரியிடம், நம் வீட்டை கட்டச் சொல்லி கொடுக்கிறோம். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், தரமானதா என, நாம் யோசிப்பதே இல்லை.


அப்படி யோசித்தால், கட்டடங்கள் கட்ட முடியாது என்ற எண்ணமும், இப்போது கட்டட உலகில் உலாவுகிறது.சின்ன மழைக்கும், சிறிய இடிக்கும், சில ஆண்டுகளுக்குள் வாயைப் பிளக்கும் வீடுகளையா நாம் கட்டுகிறோம்... கவனமாக இருங்கள்.தனிநபர்களின் கட்டடங்களே இப்படி இருக்கின்றன என்றால், அரசு கட்டும் கட்டுமானங்கள் நிலை எப்படி இருக்கும் என யோசிக்கவே முடியவில்லை. கவனமாக இருந்தால் தலை தப்பும்!

சீத்தலைச் சாத்தன்

சமூக ஆர்வலர்

தொடர்புக்கு: 98424 90447

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • sureshkumar - coimbatore,இந்தியா

    வேலு கருப்பையா அவர்களே , மனசாட்சியுடன் பேசுங்கள் ... நில அதிர்வுகள் கூட உங்களுக்கு காரணம் சொல்ல தேவைப்படுகிறது .

  • Velu Karuppiah - Chennai,இந்தியா

    சீத்தலை சாத்தான் அண்ணனுக்கு சில தகவல்கள். பொதுவாக யார் ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்று என நினைத்தாலும் மிகவும் சந்தோஷ படுபவர்கள் கட்டிட கலை என்ஜினீர்கள்தான். மற்ற அனைவரும் அதாவது நண்பர்கள் மற்றும் உறவுக்காரர்கள் அனைவரும் பொறாமையில் பொங்கி எழுவார்கள். தங்கள் கட்டிடத்தில் ஏற்பட்ட சில தவறுகளுக்கு என்ஜினீரை மட்டும் குறை கூறி உள்ளீர்கள். இந்த தவறுகளுக்கு மனையின் உரிமையாளர்கள் முதல் கொண்டு, கட்டுமான பொருள்கள் விற்பனையாளர்கள், கட்டுமான பணியாளர்கள் சுற்றுப்புற சூழ்நிலை அனைத்தும் காரணமாகும் . எப்படி என்றால் முதலில் மனையின் உரிமையாளரின் தவறு என்னவென்றால் அவர்களின் திட்ட பணிக்கான நிதிநிலையை சரியாக திட்ட மிட தவறுவதுதான் . தனது நிதி இருப்பை சரியான முறையில் என்ஜினீரிடம் தெரிவிக்க மாட்டார்கள் . அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு குறைந்த நிதி இருப்பை வைத்துக்கொண்டு பெரிய பெரிய ஆசைகளை நிறைவேற்ற நினைத்து தன்னையும் என்ஜினீரையும் நிதி பற்றாக்குறையில் தள்ளி கொண்டு பிறகு என்ஜினீயர் சரியான திடமதிப்பிடு தர வில்லை என்று குறை கூறுவது அல்லது என்ஜினீருக்கு பேசிய படி பணத்தை செட்டில் செய்யாமல் இழுத்து அடிப்பது என்று நடந்து கொண்டால் யார் மீது குறை கூறுவது. அந்த காலத்தில் செட்டிநாட்டு நாட்டு கோட்டை செட்டியார்கள் ரங்கூன் மற்றும் பர்மாவில் தொழில் செய்து பெரும் பணத்தை கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு அரண்மனை போன்ற வீடுகளை கட்டினார்கள். இப்போது அவர்களால் கூட அப்படிபட்ட வீடுகளை கட்ட முடியதாது மட்டுமல்ல அந்த வீடுகளை அவர்களால் பராமரிக்க கூட முடியாமல் பல வீடுகள் வீணாக கிடக்கிறது. அடுத்து கட்டுமான பொருட்களை பற்றி கூற வேண்டுமானால், அந்த காலத்தில் வைஸ்யர்களால் மட்டும் நடத்தப்பட வியாபாரமுறை மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட ஜாதியினரிடம் வியாபாரம் மாட்டிக்கொண்டு குண்டூசி முதல் அணைத்து பொருட்களுக்கும் டூப்ளிகேட் மற்றும் தரமற்ற பொருட்களை விற்று காசாக்கும் நிலை உள்ளது. இதில் பொறியாளரலால் என்ன செய்ய முடியும். தரமானது அல்லது தரமற்றது என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தவறுகள் நடக்கிறது. இதை அரசாங்கமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறது. இதற்க்கு வணிக சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டம் அவர்கள் ஜாதியினரே துணை போகிறது. அடுத்துதான் மிக முக்கியமானது. அதாவது என்றைக்கு நாம் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் கொண்டு வந்த அன்றைக்கே கைத்தொழில் பழகின தொழிலார்களை இழந்து விட்டோம். தொழிலின் நெளிவு சுளிவுகளை தன்னிடம் பயிலும் இளைஞர்களுக்கு சிறுவயது முதலே கற்றுத்தந்து அதன் மூலம் சிறந்த தொழிலார்களை வளர்த்தார்கள். இன்றைக்குக்கு எந்த தொழிலுக்கும் தரமான தொழிலார்கள் இல்லாமல் செய்து விட்டார்கள் நமது ஆட்சியாளர்கள். அடுத்து இயற்க்கை வளங்களை சூறை ஆடியதால் நிலத்துக்கு அடியில் உண்டாகும் நில அதிர்வுகள் அந்த அனைத்தும் கட்டுமான தவறுகளுக்கும் காரணம், இதை எல்லாம் விட்டு விட்டு கட்டுமான பொறியாளர்கள் மேல் வீண்பழி போடுவது எந்த விதத்தில் நியாயம் என்று புரிய வில்லை. சில அரைகுறை பொறியாளர்கள் இருக்கலாம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் இப்படி இழிவான கட்டடங்களை கட்டி கொடுப்பார்கள். நீங்கள்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • Svs yaadum oore - chennai,இந்தியா

    சிவில் என்ஜினீயர் கேட்டால் ஆயுள் 50 ஆண்டுகள் தான் என்பார் ...சென்னையில் மன சாட்சி கொஞ்சம் கூட இல்லாம கட்டுவானுங்க ...எல்லாம் மட்டமான பொருள் ..வேலை பார்க்கிறவனும் அதே போல் தான் ....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement