LOGIN
dinamalar telegram
Advertisement

இது தான் சமூக நீதியா?

Share

இது தான் சமூக நீதியா?ஆர்.சிவகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'இட ஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு கூடாது. தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மிக நியாயமானதே.வழக்கம் போல், 'சமூக நீதி' என, கொடி பிடிக்கும், ஓட்டு வாங்கி அரசியல்வாதிகள், இந்த உத்தரவை எதிர்த்து, ஒப்பாரி வைக்க துவங்கி விடுவர். முதலில் அதை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி விட்டார்.'பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எந்த நிலை பணியில் சேர்ந்தனரோ, அதே நிலை பணியிலேயே ஓய்வு பெறுவது, எந்த வகையில் சமூக நீதியாக இருக்க முடியும்?' என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு மட்டும், இதுவரை, ஜாதி அடிப்படையில், பதவி உயர்வு வழக்கப்பட்டதா? இல்லையே!பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி, திறமை முக்கியமல்ல; ஜாதி தான் முக்கியம் என்பது தான், ராமதாஸ் போன்றோரின், சமூக நீதி கொள்கை!தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும், ஜாதி அடிப்படையில், அரசுப் பணி கொடுக்க வேண்டும். அந்தப் பணியில் திறமையாக செயல்படாவிட்டாலும், ஜாதி அடிப்படையில், பதவி உயர்வு அளிக்க வேண்டும்... இன்னும் என்னென்ன செய்ய சொல்வரோ?
'ஒரு சாராருக்கு அநீதி; ஒரு சாராருக்கு அபரிமிதமான சலுகை' என, சட்டம் இயற்றினாரா அம்பேத்கர்?நம் நாடு சுதந்திரம் அடைந்து, 73 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, தகுதி மற்றும் பணிமூப்பு உள்ளோரை, முற்படுத்தப்பட்டோர் என்ற அரசியல் முத்திரை குத்தி, தண்டிப்பது எவ்வகை நியாயம்?தகுதியான நபர்களுக்கு பதவி வழங்கக் கூடாது என்பது, இந்நாட்டிற்கு செய்யும் அநீதி.ஜாதி அடிப்படையில், மிக பெரிய பணக்காரர், சலுகை அனுபவிப்பதும்; பரம ஏழை, வாய்ப்பு கிடைக்காமல் துயரப்படுவதும் தான், சமூக நீதியா?

அத்தனை பேருக்கும் நன்றி!அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் பொக்கிஷங்களை மீட்பதும், காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமை.கடந்த, 1978ல், மயிலாடுதுறை அனந்தமங்கலத்தில் உள்ள, ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் திருடு போயின. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்; ஆனால், சிலைகளை மீட்காமலேயே, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழரான விஜயகுமார், 'தி இந்தியா பிரைட் ப்ராஜெக்ட்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக, தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க, போலீசாருக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த தனியார் கலைப் பொருட்கள் விற்பனையாளர் குழு ஒன்று, சமூக வலைத்தளத்தில் ராமர், லட்சுமணர், சீதை சிலைகளை விற்பனைக்கு அறிவித்திருந்தது.இது குறித்து, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார், விஜயகுமார். ஏ.டி.ஜி.பி., அபய்குமார் சிங், அந்தச் சிலைகள், அனந்தமங்கலம் கோவிலில் திருடுபோனது என்பதை உறுதிப்படுத்தினார்.இதையடுத்து, அதற்கான ஆவணங்கள் அனைத்தும், லண்டனில் உள்ள இந்திய துாதரக செயலர், ராகுல் நாங்கரேவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவர், லண்டன் மெட்ரோ பாலிடன் போலீசுக்குத் தகவல் அனுப்பினார்.

விசாரணைக்கு பின், மூன்று சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்தச் சிலைகள், இந்திய துாதரகத்திடம் ஒப்படைப்பட்டன.அனந்தமங்கலம் கோவில், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு உடையது. வங்கக் கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அனுமன் அழித்தார். பின், ராமனை சந்திக்க சென்றபோது, இயற்கை அழகுடன் இருந்த வனப்பகுதியில் இளைப்பாறி, ஆனந்தம் அடைந்தார். அதனால், அந்த இடம், 'அனந்தமங்கலம்' என, அழைக்கப்படுகிறது.அனந்தமங்கலம் கோவிலில் இருந்த சிலைகள் மீட்கப்பட்டது, மயிலாடுதுறை மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணமான, அனைத்து அதிகாரிகளையும், தி இந்தியா பிரைட் ப்ராஜெக்ட் அமைப்பினரையும், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

அவர் என்ன தியாகியா?அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டின் சுதந்திரத்திற்காக, எத்தனையோ தியாகிகள், ஆங்கிலேயருக்கு எதிராக போராடி, தங்கள் சொத்து சுகம் இழந்து, சிறை வாசம் அனுபவித்தனர்.வ.உ.சி., போல் பலர், சிறைக்கூடத்தின் சித்ரவதையை அனுபவித்தனர். நம் தேசத் தந்தை காந்தி, பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அவரின் மனைவி கஸ்துாரிபாய், சிறையிலேயே உயிர் இழந்தார். காமராஜர், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.இப்படி, நாடு முழுதும் பல்லாயிரம் தியாகிகள், நம் நாட்டின் சுதந்திரத்திற்காக, பல இன்னல்களை அனுபவித்தனர். எல்லாம் எதற்காக... இந்நாட்டின் சுதந்திரத்திற்காக!
ஆனால், சுதந்திரம் அடைந்த பின், நம் அரசியல்வாதிகள் ஊழல் செய்து, சிறை செல்வது வழக்கமாகி விட்டது. அதிலும், 1970களுக்கு பின், ஊழல் என்பது, தமிழக அரசியல்வாதிகளின் ரத்தத்தில் இரண்டறக் கலந்து விட்டது. இந்நிலையில், 'சசிகலா, விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்து விடுவார்; அப்போது, அ.தி.மு.க.,வினர் பலர், அவருக்கு ஆதரவாக சென்று விடுவர்' என, 'புகை' கிளம்பி வருகிறது.காந்தி, காமராஜர், வ.உ.சி., போல நாட்டிற்காக சிறை சென்றவரா சசிகலா? சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்; அவரின் வருகையால், அ.தி.மு.க., புனிதமடைய போகிறதா?ஏற்கனவே, ஜெ., போன்ற வலிமையான தலைவர் இல்லாமல், அ.தி.மு.க., தடுமாறி வரும் நிலையில், சசிகலாவின் வருகை அக்கட்சிக்கு எந்த பலனும் தராது; வேண்டுமானால், அவப்பெயரை கொடுக்கலாம்.
ஊழல்வாதியை, கட்சித் தலைவராக்கினால், அதை அங்கீகரிக்க, தமிழக மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?

நீங்கள் செய்யுங்கள் நிதியுதவியை!இல.ஆதிபகவன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவர் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய், அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என, வி.சி., தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன் விடுத்திருக்கும் கோரிக்கை, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது; எதற்காக அரசு நிவாரணம் தர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.'ஜாதியின் முன்னேற்றத்துக்காக, உரிமைக்காக, நாங்கள் அமைப்பு நடத்துகிறோம், கட்சி நடத்துகிறோம்' என கூறிக்கொள்ளும் தலைவர்களே நிதி திரட்டி, சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டியது தானே.இவர்கள் அரசிடம் கேட்பது போல, 50 லட்சம் ரூபாய் கூட வேண்டாம்; 10 லட்சம் ரூபாய் தரட்டுமே... அந்த ஜாதிக்கு நல்லது செய்யத் தானே, நீங்கள் கட்சியை ஆரம்பித்தீர்கள்?உங்கள் ஜாதியில் இறந்து போனவருக்கு, அதுவும் தற்கொலை செய்தவரின் குடும்பத்திற்கு உதவி செய்தால், கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் நிறைவேறியதாக இருக்குமே.அரசு நிதியுதவி தர வேண்டும் என, ஏன் கேட்க வேண்டும்?

நாட்டில், சமூகத்தில், குடும்பத்தில் எத்தனையோ ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராடி, வெற்றி பெறுவது தானே வாழ்க்கை! அப்படி போராடி வெற்றி பெற்றவர்களைத் தானே, இந்த உலகம் பாராட்டி சீராட்டும். அது தானே, உலகம் தோன்றியது முதல், இது நாள் வரையிலான நடைமுறையாக இருக்கிறது.அதை விட்டு, பிரச்னைகளை எதிர்கொண்டு போராடி வெற்றி பெற முடியாமல், தற்கொலை செய்பவர் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கேட்பது, என்ன நியாயம்?அதுவும், ஒரு கட்சி தலைவராகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட, எம்.பி.,யாகவும் இருப்பவர் கேட்பது, எந்த வகையில் சேரும்?இது போன்ற அநியாய கோரிக்கைகளை, அரசிடம் வைத்து, ஜாதிக்குள், தனக்கு செல்வாக்கு பெருக்க நினைக்கும் தலைவர்களையும், கட்சிகளையும், மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

நுாலகத்தில் கவனம் செலுத்துங்கள்!எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா ஊரடங்கு காலத்தில், நுாலகம் திறக்கப்பட்டிருந்தால், பலரிடம் வாசிப்பு பழக்கம் அதிகரித்திருக்கும்.'டாஸ்மாக்' கடை திறந்து, மது விற்பனை செய்ய அனுமதித்த தமிழக அரசு, மக்கள் படிப்பதற்காக, நுாலகத்தை ஆறு மாதங்கள் திறக்கவில்லை.தற்போது, நுாலகம் திறக்கப்பட்டுள்ளது என்றாலும், வழக்கமான வாசகர்களே அங்கு வந்து செல்கின்றனர். காரணம், ஊரடங்கில் ஏராளமான தளர்வு அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.'டாஸ்மாக்' மற்றும் 'டிவி' நெடுந்தொடர் ஆகியவை, மக்களை மயக்கி, அறிவுக்கோவிலான நுாலகத்திற்கு செல்ல விடாமல் தடுத்து விட்டன.பெண்கள், இளைஞர், முதியோர், சிறுவர் என, அனைத்துத் தரப்பினரும், தங்கள் அறிவை விசாலமாக்கி கொள்ள ஏதுவாக இருப்பது, நுாலகம் மட்டும் தான். ஆனால், அனைவரும் இன்று மொபைல் போனிற்கு அடிமையாகி விட்டனர்.இன்றைய தலைமுறைக்கு, வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது என்பது, வருத்தமான செய்தி; இந்நிலை மாற வேண்டும்.


அதற்கு, அரசு தீவிர விழிப்புணர்ச்சியை, மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.'வாசிக்கப்படாத புத்தகம், அதற்கு செய்யப்படும் வன்முறை' என்பதற்கு ஏற்ப, நுாலகத்தில், பல லட்சம் புத்தகங்கள் இருந்தாலும், அதை யாரும் வாசிக்கவில்லை என்றால், பயன் இல்லை.எனவே, கடைக்கோடி கிராமத்திற்கும் செல்லும் வகையில், நடமாடும் நுாலகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.வாசகர், ஒரே நேரத்தில், தன் குடும்பத்திற்கு என, 10 புத்தகங்களை நுாலகத்திலிருந்து இரவலாக பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்திருக்கிறது; இது, பாராட்டத்தக்க முயற்சி. இதன் வழியாக, குடும்பத்தில் இருக்கும் அனைவரும், புத்தகம் படிக்கத் துவங்குவர்.அருகிலுள்ள பள்ளிக்கு, நுாலகர் சென்று, குறிப்பிட்ட அளவு புத்தகங்களை, தலைமையாசிரியர் மூலமாக, ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகத்தை இரவலாக வழங்கலாம். பாடப்புத்தகத்தை மனப்பாடம் செய்யும் அவர்களுக்கு, இந்த நுால்கள் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.மக்கள் நலன் மீது அக்கறை உள்ள அரசு, 'டாஸ்மாக்' நிர்வாகத்தில் காட்டும் அக்கறையை விட, நுாலகத்திற்கு தான், அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

எல்லாம் நாடகம்!வி.எஸ்.ஹரிஹரன், காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'முதல்வர் பதவி யாருக்கு?' என, இ.பி.எஸ்., மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்தும் சச்சரவுகளை நோக்கினால், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்ற தோற்றத்தை, மக்களிடம் உருவாக்க நடத்தப்படும் நாடகமாகவே தெரிகிறது.இரு தரப்பினரும், தேவையில்லாமல் திடீரென முரண்டு பிடித்தல்; அதைத் தொடர்ந்து, கட்சியின் துாதுவர் குழு அங்குமிங்கும் அலைந்து, பேச்சு நடத்துதல்; இறுதியில், சமாதானமானது போல் கூட்டறிக்கை விடுதல் என, ஆளுங்கட்சியினர் நன்றாக நடிக்கின்றனர்.தேர்தலில் வெற்றி என்பது, மக்கள் கையில் தான் உள்ளது என்பதை இவர்கள் உணரவில்லை. ஆட்சி, பணம், ஆட்கள் போன்ற பலங்கள் இருப்பதால், வெற்றி பெற்று விடலாம் என, அ.தி.மு.க.,வினர் எண்ணுகின்றனரா?இப்படித் தான், 1980ல் நடந்த, பார்லிமென்ட் தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., முழு வெற்றி பெற்றது.
உடனே, 'கருணாநிதி தான் அடுத்த முதல்வர்' என, கனவில் மிதந்தனர். ஆனால், அடுத்து வந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியுற்றது.கடந்த, 1991 தேர்தலில், தி.மு.க., ஓரிரு எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே பெற்றது. ஆனால், 1996ல், அக்கட்சி, ஆட்சியை பிடித்தது.அ.தி.மு.க., தலைவர்களே... இங்கு எதுவும் நிரந்தரமில்லை; கனவு காண்பதை நிறுத்துங்கள்; சற்று நிதானியுங்கள். இனி, மீதமிருக்கும் காலத்திலாவது உருப்படியான, ஆக்கப்பூர்வமான மக்கள் நலனில் நாட்டம் காணுங்கள். அது தான், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.அப்பர் சுந்தரம் அனந்த மங்களம் இராமாயண தொடர்பு பற்றி கூறியதும் அனுமார் ஆனந்த் கூத்தாடிகள் இடம் உண்மைதான்,ஆனால் அவர் பரவசம் அடைந்த வரலாறை கூறிய விவரம் தவறானது.கம்பர் வழியில் வந்தவர் மறைந்த மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி தமிழ் பேராசிரியர் திரு.ராமபத்திரர்.இவர் தனது வாழ்நாட்களை இராமாயண உண்மை விஷயங்களை ஆய்வு செய்து கொடுத்திருக்கின்றார்.பல சிறு சம்பவங்கள் இராமாயணத்தில் கொண்டு வந்தால் நிறைய பக்கங்கள் வருவதால் அவற்றை நீக்கி உள்ளனர்.விஷயத்துக்கு வருவோம்.இராவணன் சீதையை கடத்திய தடம் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் அருகே மண்மலை என்ற மலையை பார்த்து சிதளாதேவி தனது கழுத்தில் உள்ள மணியை வீசியுள்ளார்.அந்த கிராமத்தின் பெயரே இன்றும் சீதை சித்தியின் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.இந்த பகுதிகளில் உள்ள கிராம மாரியம்மனின் பெயர் சீதாதேவி மாரியம்மன் என்று அழைக்கிறார்கள்.அன்றைய காலத்தில் நான்கு பேர் செல்ல கூடிய விமான வாகனம் இருந்துள்ளது.அனுமார் மண்மலை என்ற பிராகாசமான மலையை பார்த்ததும் தேவி நிச்சயம் இவ்வழியாக சென்றிருக்க கூடும் என்று தனது ஞான கண்களால் தேவியின் சிந்திய மணி மாலையை கண்டதும் ஒரு இடத்தில் கண்டுபிடித்த சந்தோஷத்தில் ஆனந்த் கூத்தாடிகள் இடம்தான் அனந்த மங்களமாகும்.பக்தர்கள் இன்றும் தனது காரியம் நிறைவேற இங்கு ஆட்சியரை வணங்க செல்லுவார்கள்.அந்த கோவில் சிதலமடைந்து வேறு மாதிரியாக காட்டியுள்ளார்கள்.அனுமார் அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு செல்லும்போது தான் சுந்தர காண்டம் ஆரம்பிக்கிறது.உண்மையான இராமாயணம் ஆதாரத்துடன் இதுதான் உண்மை.கம்பருக்கு நினைவிடம் கட்ட பள்ளி நாட்களில் எங்களை போன்ற மாணவர்கள் வசூல் செய்து ஆசிரியருக்கு கொடுத்தவற்றை மறக்க முடியாது.இன்றும் கம்பர் என்ற மகான் எழுதிய இராமாயணத்தினை அடிப்படை உண்மையை இப்பகுதிகளில் ஆய்வு செய்து எழுதுவது அவரது வேற்றுமையாகும்.இன்று யார் யாருக்கோ நினைவிடம் கட்டுகிறார்கள்.கம்பர் அந்தணர் என்ற காரணத்திற்காக அவரை யாரும் தூக்கி பிடிக்கவில்லை.வாழ்க தமிழ்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அடுத்து, ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்குப் படிக்காமல், கைப்பேசியை நோண்டிக்கொண்டும், நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டும், அரசு கொடுத்த இலவச கணினியில் விளையாடிக்கொண்டும் இருந்துவிட்டு பத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் அவர்களை பெற்ற 'புண்ணியசாலிகள்' அரசு நம் வரிப்பணம் தான், லட்சத்தில் கொழிப்பார்கள் அரசு திவாலாக நல்ல யோசனை ஒரு பொறுப்புள்ள தலைவர் பேச்சா இது ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement