LOGIN
dinamalar telegram
Advertisement

புதிய இந்தியாவை உருவாக்கும் கல்விக்கொள்கை

Share

ஒரு நாட்டின் சமூகம், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை அதன் கல்வி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. கல்வி ஒரு அழியாத சொத்து. தரமான, ஆக்கப்பூர்வமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுப்பது அந்த நாட்டின் தலையாய கடமை. சுவாமி விவேகானந்தர் ஒரு நாடு எப்படிப்பட்ட கல்வியை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.


கல்வி மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, ஒழுக்கம் ஆகியவற்றை தருவதோடு அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதாகவும் இருக்க வேண்டும். அத்தகையதொரு கல்வியை நமது மாணவர்களுக்கு கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும்.புதிய கல்வி கொள்கையின் அவசியத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு வல்லுனர் குழு அமைத்து 2015 ல் வரைவு வடிவில் மக்கள் கருத்துக்காக வெளியிட்டது. கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ,பொதுமக்கள் உள்பட 2 லட்சம் பேர் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் தகுந்த மாற்றங்களுடன் 'தேசிய கல்விக்கொள்கை 2020' உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி, முதியோர் கல்வி, நாட்டின் கல்வி கூட்டமைப்பு, ஆளுமை மற்றும் ஒழுங்குமுறை பற்றிய அம்சங்கள் புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ளன. இதன் முக்கிய அம்சங்களை 2030 க்குள் படிப்படியாக மாநில அரசுகள் மூலமாக செயல்படுத்த வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர், மாணவர் உறவு



3வயது முதல் 18 வயது வரை அடிப்படை கல்வியிலிருந்து பிளஸ் 2 வரை இலவச கல்வி வழங்கப்படும். இதனால் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் வெகுவாக குறையும். 2030ம் ஆண்டிற்குள் நாட்டில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டசத்து மிகுந்த காலை, மதிய உணவு பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும். வட்டார அளவில் உள்ள பள்ளிகளை ஒன்றிணைத்து பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படும். இதனால் மாணவர்கள் எல்லா கட்டமைப்பு வசதிகளையும் பெறும் வாய்ப்பை பெறுவர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர், மாணவர் விகிதம் 30:1 என்று அமல்படுத்தப்படும். இதனால் ஆசிரியர், மாணவர் உறவு பலப்படும்.பாடச்சுமை குறைந்து விளையாட்டு, கைவினை, இசை, யோகா பயிற்சி முதலியன பாடத்திட்டங்களுடன் சேர்க்கப்படும்.

மும்மொழிக்கல்வி



அரசு, தனியார் பள்ளிகளுக்கும் தரநிர்ணயம் செய்திட மாநில அரசுகளுடன் இணைந்து மாநில ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.மாணவர்கள்தங்கள் விருப்பப்படி தொழில் அல்லது அறிவு சார்ந்த பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் போது தேர்ந்தெடுத்த பாட பிரிவுகளில் படிப்பை தொடரலாம். கற்றலுக்கும், மாணவர் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கேற்ப கற்பிக்கும் வழிமுறைகள் ஆசிரியர்கள் மூலம் பின்பற்றப்படும். 5 மற்றும் 8 ம் வகுப்பு வரையிலும் தாய்மொழியில் மாணவர்கள் கல்வி பயில முடியும். மும்மொழிகல்வியை பொறுத்தவரையில் மாணவர்கள் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழியை தேர்வு செய்து படிக்கலாம்.
உயர்கல்வி2040ம் ஆண்டிற்குள் தற்போதுள்ள பல்கலை, கல்லுாரிகளை ஒருங்கிணைந்து பல்கலை, கல்லுாரி வளாகங்கள் உருவாக்கப்படும். தொழில், கலை, அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பொறியியல் உள்பட எல்லா வகையான உயர்கல்வி படிப்புகளை ஒரே வளாகத்தில் மாணவர்கள் கற்றிட வாய்ப்பு உண்டாகும்.


ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் உலக தரம் வாழ்ந்த நுாலகங்கள், ஆய்வு கூடங்கள், மாணவர் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கபடுவர். ஆசிரியர்கள் கற்பிக்கும் முறைகளை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிரத்யேக கட்டமைப்பு வசதிகளும், பாடத்திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் ஏற்படுத்தப்படும். தற்போது உயர்கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய பல்வேறு அரசு நிறுவனங்களை அணுகும் முறையை மாற்றி தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக ஆராய்ச்சி பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். ஆண்டுதோறும் ரூ. 20 ஆயிரம் கோடி நிதி இதற்காக ஒதுக்கப்படும்.

தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்



உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயம் செய்ய பல்வேறு அமைப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து 'தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்' அமைக்கப்பட்டு அந்த அமைப்பில் பல துறை வல்லுநர்களும் இடம்பெறுவர். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தனக்கென வளர்ச்சி திட்டங்களை வகுத்து கொள்ளலாம். அத்திட்டத்தில் அந்த நிறுவனத்திற்கேற்ற பட்டப்படிப்புகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறை, கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், கல்வி சார்ந்த அனைத்து விபரங்களும் இடம் பெறும். சிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது கல்வி மையங்களை தொடங்க அனுமதிக்கப்படும். அனுபவம் மிக்க கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட நிர்வாக குழு மூலம் நிர்வாகம், கல்வி கட்டமைப்பு சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும். இந்த குழுவே, அந்த கல்வி நிறுவன வளர்ச்சி திட்டங்களை வழி வகுத்து செயல்படுத்தும். உயர்கல்வி நிறுவனத்தின் தலைவரை நிபுணர்குழு மூலமாக தேர்ந்தெடுப்பர். இதனால் உயர்கல்வி நிறுவன தலைவர்களை நியமிப்பதில் அரசியல் தலையீடு முற்றிலுமாக இருக்காது.

முதியோர் கல்வி



நாட்டில் கல்வி கற்றோர் 100 சதவீதம் என்ற குறிக்கோளை அடைய முதியோர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதனை ஊக்கப்படுத்தும் வகையில் நல்ல கட்டமைப்புடன் கூடிய முதியோர் கல்வி மையங்கள் உருவாக்கப்படும். அவை அருகிலுள்ள உயர்கல்வி நிறுவனத்தின் கண்காணிப்பில் செயல்படும். தேசிய அளவில் முதியோர் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கப்படும். தற்கால கல்வி கற்பிக்கும் முறைகளுக்கு ஏற்ப டிவி , அலைபேசி, இணைய வழி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படும்.கல்விக்கொள்கையை நாட்டில் அமல்படுத்தவும், கண்காணிக்கவும் பிரதமர் தலைமையில் உயர்மட்ட தேசிய கல்வி குழு அமைக்கப்படும். மத்திய கல்வி அமைச்சர் இக் குழுவின் துணைத்தலைவராக இருப்பார். சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் கல்வி சார்ந்த அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிரதிநிதிகள், தொழில் வல்லுனர்கள் இக் குழுவில் இடம் பெறுவர். இந்த அமைப்பின் கீழ் உயர்கல்வி ஒழுங்கு முறை குழு, தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், உயர்கல்வி மாநிலகுழு மற்றும் பொதுக்கல்வி குழு ஆகியன செயல்படும். ஒவ்வொரு குழுவிலும் அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வியாளர்கள், வல்லுனர்கள் இருப்பர்.

தலையீடு இருக்காது



புதிய தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் மாபெரும் கல்வி மாற்றத்தை ஏற்படுத்தும். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும். அரசியல் தலையீடு இருக்க வாய்ப்பு இல்லை. தேசிய அளவில் வரையறுக்கப்படும் திட்டங்களுக்குட்பட்டு அந்தந்த மாநில கல்விமுறையில் மாற்றம் செய்ய முடியும். பள்ளி, உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் அறிவுறுத்தப்படும் பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றங்களுடன் செயல்படுத்திக் கொள்ளலாம். புதிய கல்வி கொள்கையை மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்ல தொழில், அறிவியல் திறன் மிக்க சிறந்த மாணவர்களை உருவாக்கும் வாய்ப்புக்கூடும். சுயசார்பு மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க புதிய தேசிய கல்வி கொள்கை நல்ல வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.-க. நடராசன்முன்னாள் துணைவேந்தர்காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம்திண்டுக்கல்.sai.snatrajan@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement