LOGIN
dinamalar telegram
Advertisement

உச்ச நீதிமன்றத்திற்கு, 'சபாஷ்!'

Share

இது உங்கள் இடம்உச்ச நீதிமன்றத்திற்கு 'சபாஷ்!'


வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'அரசுப் பணிகளில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது; தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; நீதித்துறைக்கு, 'சபாஷ்' போடலாம்.இந்த உத்தரவு, பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். தகுதியும், பணிமூப்பு இருந்தும் பதவி கிடைக்காமல், விரக்தியில் இருந்த அரசு ஊழியர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவால் நிம்மதி அடைந்திருப்பர்.இட ஒதுக்கீடு முறையில், அரசுப் பணியில் சேருபவர், ஒரு சில ஆண்டுகளிலேயே பதவி உயர்வுக்கு வருவதும், அவரின் கீழே, அனுபவம் வாய்ந்தோர் பணி செய்வதும், பெரும் துயரத்தை தரும். தன் தகுதியால் பதவி உயர்வு அடைந்தால், அதை வரவேற்கலாம்; ஆனால், குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவர் என்பதால் மட்டுமே, பதவி உயர்வு என்பதை எப்படி ஏற்பது?
'இந்த அவல நிலை என்று தீருமோ...' என, எதிர்பார்த்திருந்த ஊழியர்கள், இனி நிம்மதி அடைவர். உச்ச நீதிமன்றம் அளித்த மிக சிறப்பான தீர்ப்புகளில்,
இதுவும் ஒன்று!பொன்னான காலம் வீணானதே!


பொன்.தாமோதரன், பரங்குன்றாபுரம், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு காரணமாக, மாணவரின் கற்றலில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல, கற்பித்தல் பணியிலும், ஆசிரியர்களுக்கும் தேக்க நிலை ஏற்பட்டிருக்கும்.சில மாதங்களாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும், 'ஆன்லைன்' மூலம், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர்; ஆனால், அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை; சில பள்ளிகளில், ஊதியமே வழங்கப்படவில்லை.அண்டை மாநிலமான தெலுங்கானாவில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஊதியம், 50 சதவீதம் தான் வழங்கப்பட்டு வருகிறது.இப்படிப்பட்ட சூழலில், எந்த ஒரு பணியும் கொடுக்காமல், ஐந்து மாதங்களாக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு ஊதியம் வழங்கி வருகிறது.வேலையே செய்யாமல் முழு ஊதியம் பெறுவது, பல ஆசிரியர்களுக்கு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தலாம். ஏனெனில், மனசாட்சியுள்ள எந்த ஆசிரியரும், வேலை செய்யாமல் ஊதியம் வருவதை விரும்ப மாட்டார்கள்.தனியாரோ, அரசோ... யாராக இருந்தாலும், ஊழியர்களுக்கு வேலை கொடுக்காமல், ஊதியம் கொடுப்பது நகைப்புக்குரியது.ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள கூடிய வசதி இருக்கின்றது.எனவே, கடந்த ஐந்து மாதங்களில், அவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கு, பள்ளிக்கல்வித்துறை பயிற்சி வகுப்புகளை, தினமும், இரண்டு மணி நேரம் நடத்தியிருக்கலாம். கற்பித்தலில் உள்ள சவால்கள் குறித்து ஆசிரியர்கள் கலந்துரையாடியிருக்கலாம். அரசு பள்ளி ஆசிரியர்களின் அறிவையும், திறனையும், ஊரடங்கு காலத்தில் அரசு வீணடித்து விட்டது என்று தான் தோன்றுகிறது. இனியாவது, மாதம்தோறும் துறை சார்ந்த தேர்வுகளை, ஆன்லைன் மூலம், ஆசிரியர்களுக்கு நடத்தலாம். இதனால் ஒவ்வோர் ஆசிரியரும், தங்கள் துறையில் நிபுணத்துவம் பெற முடியும்; மேலும், திறன் வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய முடியும்; கற்பித்தல் திறனை மேம்படுத்த
முடியும் .அரசு பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் முறை மேம்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தை கொடுக்க முடியும்.
இதன் மூலம், பொது மக்களும், அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பது, மதிப்புமிக்கதாக கருதும் நிலை உருவாகும்.அவர்களுக்கு தேவை விளம்பரம்!


வி.ஜி.எஸ்.முருகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மருத்துவராக வேண்டும் என்ற லட்சிய கனவோடு போராடும், மாணவ - மாணவியரை, அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க கூடாது.மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தேவையானது, 'நீட்' தேர்வு தேர்ச்சியா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்ணா என்ற நீண்ட நாள் சர்ச்சைகளுக்கு இடையே, மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த குழப்பத்தில் இருந்து, தற்போது தான், நீட் தேர்ச்சி தான், மருத்துவராக ஒரே வழி என்ற முடிவுக்கு மாணவர்கள் வந்துள்ளனர்.இதை தொடர்ந்து, பல்வேறு கஷ்டங்களையும் தாங்கி படிக்கும் மாணவர்களுக்கு, அரசியல்வாதிகள் கொடுக்கும் இன்னல்களுக்கு அளவே இல்லை.ஆளாளுக்கு, 'நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்' என, பேட்டியும், அறிக்கையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே, அவர்கள் எல்லாம் சுய அறிவில் தான் பேசுகின்றனரா?
நீட் தேர்வு தான், மருத்துவராக ஒரே வழி என்ற மனநிலையோடு, பல மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் போதே, நீட் வகுப்பிற்கும் சேர்ந்து, கூடுதல் சிரத்தை எடுத்து படித்தனர்.கடந்த கல்வியாண்டில், நீட் வகுப்புக்கு, நான்கு மணி நேரம்; பிளஸ் 2 பாடத்திற்கு, மூன்று மணி நேரம் என, ஒதுக்கிப் படித்த மாணவர்களின் நிலை என்ன?டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்திற்காக, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெறும் அளவிற்கு மட்டும் படித்தனர்; முழு கவனத்தையும், நீட் தேர்வின் மீது செலுத்தினர்.இந்நிலையில், 'பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சீட்டை ஒதுக்குங்கள்' என கோஷமிட்டால், அந்த மாணவர்களின் கதி என்ன?அரசியல்வாதிகள் எது செய்தாலும், அதில் விளம்பரம், ஓட்டு வங்கி கணக்கு, சுயநலம் இருக்கும்; மாணவர்கள் தான், விழிப்போடு செயல்பட வேண்டும்.அரசியல்வாதிகளே... நீட் தேர்வு பற்றி பேசாமல், கல்வித்துறையை, மாநில பட்டியலுக்கு மாற்றுவதற்கு, உங்களின் அனைத்து திறமையையும் காட்டுங்கள். அதன்வழியே, மாணவர்களின் மேல் தங்களுக்கு இருக்கும் தீராத பாசத்தை வெளிப்படுத்துங்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • RNRS - CHENNAI,இந்தியா

    நன்றாக தெரிவித்துள்ளீர்

  • veeramani - karaikudi,இந்தியா

    நமது குழந்தைகளை இனிமேலும் இதைத்தான் படிக்கவேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தவேண்டாம். பிளஸ் டுவில் ஐம்பது சாந்தவேத மதிப்பெண்கள் எடுத்த மாணவர் நீட் தேர்விற்கு அப்ளை பண்ணி பின்னர் வாழ்வை முடித்துக்கொண்டார். இதற்கு கரணம் பெற்றோர் . மேலும் குழந்தைகளின் திறமையை கண்காணித்து அந்த .பாடத்திட்டத்தில் சேர்த்துவிடின் நல்லது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அங்கும் இங்கும் சில மனச் சாட்சியுள்ள ஆசிரியப்பெரு மக்கள் மாணவர்களை பாதுகாப்புடன் ஒன்றிணைத்து வகுப்புகள் நடத்துகின்றனர் இந்த நாலைந்து மாதங்களில் முழுதுமாகக் கற்பித்தலையே மறந்துவிட்டவர்களும் உள்ளனர். மனமிருந்தால் வழி உண்டு

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement