LOGIN
dinamalar telegram
Advertisement

போதையை மனம் நாடுவது ஏன்?

Share

சமுதாயத்தில் போதைக்கான தேவை அதிகரித்து வருவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு அடிப்படையான விஷயம், இன்று பிழைப்பிற்காக மனிதர்கள் போராடவில்லை. சமுதாயத்தின் பெரும்பகுதி, பிழைப்பிற்காக போராடும் நிலையிலிருந்து முன்னேறிவிட்டது.

மக்கள் பிழைப்பைக் கடந்து முன்னேறும் போது, தங்களை பேரார்வத்துடன் ஈடுபட வைக்கும் பிற விஷயங்களை அவர்கள் கண்டறிய வேண்டும். அது நிகழவில்லை என்றால், அந்த சமுதாயத்தில் இன்பம் மற்றும் போதைக்கான தேவை இயல்பாகவே அதிகரிக்கும். இதனால் தான், பெற்றோர் வசதியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை, அவர்களின் குழந்தைகள் செல்வச் செழிப்பை அனுபவிக்கக் கூடாது. இந்தக் கலாசாரத்தில் தான், அரசர்கள் கூட தங்கள் குழந்தைகளை குருகுலங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் குழந்தைகள் மற்ற எல்லாக் குழந்தைகளுடனும் சேர்ந்து, அடிப்படையான வசதிகளுடன் கல்வி கற்றனர்.

சுமையாக மாறிவிடும்செல்வம் வரும் முன் தேவையான ஒழுக்கம், ஈடுபாடு, உயிருடனான தொடர்பு ஆகியவை, ஒருவர் வாழ்க்கைக்குள் வர வேண்டும். இல்லாவிட்டால், செல்வம் என்பது, உங்கள் தலையில் சுமக்கும் சுமையாக மாறிவிடும்.இந்த தலைமுறைக்கு நடப்பது அது தான். இன்னொரு காரணம், இந்நாட்களில் பெற்றோர் இருவருமே பெரும்பாலும் வேலை செய்கின்றனர். சிறு வயதில் குழந்தைக்குத் தேவையான கவனம் வழங்கப்படுவதில்லை. எனவே, இயல்பாகவே அவர்கள் கவனம், இப்படிப்பட்ட வக்கிரங்களின் பக்கம் திரும்புகிறது.

சொர்க்கங்கள் உடைகின்றனஅதோடு போதுமான உடல் செயலும் அவர்களுக்கு இல்லை. உங்கள் உடலின் உறுதியையும், அதன் உயிரோட்டத்தையும், வீரியத்தையும் நீங்கள் ரசிக்காமல் இருக்கும் போது, நீங்கள் ரசிக்கக் கூடிய ஒரே விஷயம் போதையாக மாறி விடுகிறது.வஸ்துக்கள் இப்போது போதை தருவதாக மட்டுமல்லாது, சில மணி நேரம் அவர்களை உயிரோட்டமாக உணரச் செய்கிறது. அதனால், இந்த தலைமுறை பெரிய அளவில் போதை நோக்கி நகர்கிறது.

இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம், சொர்க்கத்தை அடையும் வாக்குறுதிகள் அவர்களுக்குள் உடைந்து வருகின்றன.அதை, அவர்களால் இன்னும் தெளிவாக உச்சரிக்க முடியாமல் இருக்கலாம். அதைச் சொல்லும் தெளிவும், துணிவும் அவர்களிடத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நெடுங்காலமாக மக்கள், 'இவற்றை தவிர்த்தால் சொர்க்கத்தில் அதிக அளவில் இவற்றை அனுபவிப்பாய்' என்று அவர்களிடம் சொல்லியே சமாளித்து வந்துள்ளனர். இப்போது அந்த சொர்க்கங்கள் உடைந்து வருகின்றன.

அதனால் இங்கேயே மது குடிக்கின்றனர். இப்படி பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.போதை அதிகரிப்புஅடிப்படையாக தனி மனிதர்கள் தங்கள் பிழைப்பிற்காக உடலை வருத்த அவசியமில்லாமல் இருக்கிறது. இதுவே, போதைக்கான அவசியத்தை அதிகரிக்கிறது.

தீர்வுகள் என்ன?வளரும் குழந்தைகள் இருந்தால், அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதும், இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் பிற தீவிர செயல்களில் ஈடுபடுத்துவதும் மிக மிக முக்கியம். மலையேற்றம், நீச்சல் என்று எந்தச் செயலிலும் அவர்களை ஈடுபடுத்தலாம்.

மனம் தரவல்ல இன்பம்கலை, இசை போன்றவற்றில் அவர்கள் பேரார்வம் கொள்ள வேண்டும். புத்தி, உணர்ச்சி, உள்ளத்தின் இன்பங்களை அனுபவித்து உணர, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மனம் தரவல்ல இன்பம், புத்திக்கூர்மை, உணர்வுகள் மற்றும் விழிப்புணர்வின் ஆற்றலை, ஒருவர் ரசிக்கத் துவங்கும் போது, உடலின் இன்பங்களில் ஈடுபடுவது இயற்கையாகவே பெருமளவில் குறைந்துவிடும்.

எனவே,பல தரப்பட்ட செயல்களில் பேரார்வத்துடன் குழந்தைகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம். மது, போதை பொருட்களுக்கான தேவையை இது குறைக்கும். ஆனால், இன்று மதுவை நாம் பெருமளவில் ஊக்குவித்து, சந்தைப்படுத்தவே பார்க்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திரைப்படங்கள் அவற்றை ஊக்குவிக்கின்றன.இன்றைய சமுதாயத்தில், நீங்கள் குடிக்காவிட்டால், எதற்கும் உதவாதவர் எனும் மனப்பான்மையே எங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் குடிப்பது உண்டா?என்னிடம் சிலர், 'நீங்கள் குடிப்பது உண்டா' என்று கேட்பதுண்டு. நான் அவர்களிடம், 'ஆம், நான் தண்ணீர் குடிப்பதுண்டு' என்பேன். என்னை ஒரு வினோதமான ஜந்துவைப் போல பார்ப்பர். 'வெறும் தண்ணீரா' என்பர். 'ஆம்' என்பேன்.

நீங்கள் குடிக்கக்கூடிய மிக அற்புதமான பானம் தண்ணீர் தான். ஏனென்றால், உங்கள் உடல் எடையின், 70 சதவீதம் தண்ணீரால் ஆனது; மதுவால் ஆனதல்ல.மனித உடல் அமைப்பு, ஒரு அற்புதமான ரசாயன தொழிற்சாலை. உங்களுக்கு போதை வேண்டுமென்றால், அதை உங்களால் உள்ளிருந்து உருவாக்க முடியும்; அது, உங்களை ஒரே சமயத்தில் போதையாகவும், மிகுந்த விழிப்புணர்வாகவும் மாற்றவல்லது.

நம் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், இப்படிப்பட்ட போதையைத் தான் நாம் அறிமுகப் படுத்த வேண்டும். அதனால் தான், அனைவரின் வாழ்க்கைக்குள்ளும் யோகாவின் தொழில் நுட்பத்தை நாங்கள் எடுத்து வரப் பார்க்கிறோம்.உங்களுக்குள் நீங்கள் சில நிலைகளை அடைந்தால், எந்தவொரு வஸ்துவும், எந்தவொரு பானமும் உருவாக்க முடியாத ஒரு போதையை உணர்வீர்கள்.

அதே சமயம் மிகுந்த விழிப்புணர்வாக இருப்பீர்கள். இது, உங்கள் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அதிசயங்களை நிகழ்த்தும். எனவே, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விதத்தில் நாம் செயல்பட கற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

மாற்று வழி தேவைமனிதர்கள் வாழ்க்கையின் மிக உயர்ந்த இன்பங்களை உணர்வதற்கான வழிகள் இருக்கின்றன. நம் இளைஞர்கள், இதை அனுபவிக்க நாம் வழி வகை செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒரு மாற்று வழியை நீங்கள் வழங்காதவரை, அவர்கள் மீண்டும் மது அல்லது மாத்திரைக்குத் திரும்புவர். தற்போது நீங்கள் ஆரோக்கியமாக, அமைதியாக, ஆனந்தமாக இருப்பதற்கு அல்லது உங்களுக்குள் எதையும் உணர்வதற்கு, ரசாயனத்தின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது.

ஒரு தலைமுறை இப்படி ரசாயனங்களை பயன்படுத்தினால், தினசரி அளவில், 99 சதவீத மக்கள் மருந்துகளையும், பிற ரசாயனங்களையும் பயன்படுத்தத் துவங்கினால், நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறையினர் பலவிதங்களில் நம்மை விட குறைவானவர்களாக இருப்பர்.இது, மனித குலத்திற்கு எதிராக நாம் இழைக்கும் குற்றம். அனைவரும் விழித்துக் கொண்டு, இந்நிலையை மாற்றுவதற்கு செய்யத் தேவையானதை செய்ய வேண்டும்.

சத்குரு

நிறுவனர், ஈஷா அறக்கட்டளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Saravanan - Cairo,எகிப்து

  பாம்பறியும் பாம்பின் கால்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அனுபவம் பேசுகிறது. போதைதான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  அளவுக்கு மிஞ்சினால் எதுவும் கெட்டதுன்னு தெரிந்தும் செய்வதை இந்த சுதந்திர உலகில் யாராலும் மாற்ற முடியாது. மனித உரிமைகள் கொடி தூக்கும்.

 • Murthy - Bangalore,இந்தியா

  ஒவ்வொருவருக்கும் ஒரு போதை

 • ஆப்பு -

  எதில் அதிகமா ஈடுபட்டாலும் அது ஒருவகை போதையே... அது மதுவாக, மாதுவாக, பணமாக, அதிகாரமாக , வக்கிரமாக எதுவா வேணும்னாலும் இருக்கலாம். சிலர் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போதைக்குக் கூட அடிமையிடுறாங்க.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement