dinamalar telegram
Advertisement

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவு சரியானதா?

Share

ஆண்களுக்கான திருமண வயது, 21; பெண்களுக்கான திருமண வயது, 18 ஆக தற்போது உள்ளது. இதில், பெண்களுக்கான திருமண வயதை, 18ல் இருந்து உயர்த்த, மத்திய அரசு தீர்மானித்திருப்பதாகவும், இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஜெயா ஜெட்லி தலைமையில், 10 பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி தன் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். கடந்த, 1929ம் ஆண்டில் பெண்களின் திருமண வயது, 15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 50 ஆண்டுகளாக, இது நடைமுறையில் இருந்த நிலையில், 1978ல் தான், பெண்களின் திருமண வயது, 18 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அதை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு முற்பட்டுள்ளது. இது, ஒரு நல்ல நடவடிக்கையே. உலகில் நடக்கும் குழந்தை திருமணங்களில், மூன்றில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக, ஐ.நா., மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இளம் வயதில் நடக்கும் திருமணங்களால், பெண்கள் இளம் பருவத்திலேயே தாய்மை அடைவதும், ஊட்டச்சத்து குறைபாடுகளால், பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு நிகழ்வதாகவும் விமர்சனங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, வயது முதிர்ச்சி அடையாத பருவங்களில், பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படுவது, காதல் வலையில் வீழ்ந்து பிரச்னைகளை சந்திப்பது, மோசமான வாழ்க்கையை தேடிக் கொள்வது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் எனில், பெண்கள் மன முதிர்ச்சி அடைந்த பருவத்தில், தங்களின் துணையை தேடிக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதே சரியான முடிவாகும். பெண்கள், 'டிரைவிங் லைசென்ஸ்' வாங்கவும், தேர்தலில் ஓட்டளிக்கவும், 18 வயதே தகுதியானதாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் போது, பெண்களின் திருமண வயதை மட்டும் உயர்த்துவது சரியான முடிவல்ல என, சில தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இருந்தாலும், செக்ஸ் ரீதியான அத்துமீறல்கள் தொடர்பாக, நாளிதழ்களில் தினமும் வரும் செய்திகளை பார்க்கும் போது, அவர்களின் திருமண வயதை உயர்த்துவதே சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, திருமண வயதை அடையும் முன், அவசரப்பட்டு மணம் புரிந்தால், அதற்கு கடும் தண்டனை உண்டு என்பதையும், தெளிவாக அறிவிக்க வேண்டும். இந்திய அளவில் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆனாலும், பக்குவம் இல்லாத வயதில் வரும் காதலாலும், பணத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது கடமையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களாலும், ஏராளமான பெண்கள், உயர் கல்வி கற்க முடியாமல் போவதுடன், இளம் வயதிலேயே வாழ்க்கை சுழலில் சிக்கி, அவதிப்பட நேரிடுகிறது. குடும்ப வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர். அவர்களின் எதிரியாக உள்ள இந்த தடைகள் அகற்றப்பட வேண்டும் எனில், அவர்களின் திருமண வயதை உயர்த்துவதே சரியானது. அதுவும், ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை மத்திய அரசு உயர்த்தினால் சிறப்பு. அத்துடன், மன ரீதியான முதிர்ச்சி அடையும் போது, பெண்கள் தங்களின் வாழ்க்கை துணைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், பகுத்தாய்ந்து முடிவெடுப்பர். இதுதவிர, பள்ளிப் படிப்புடன் கல்வி கற்பதை கைவிடும், மாணவியரின் எண்ணிக்கை குறைவதோடு, உயர் கல்வியில் அவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில், 27 சதவீத பெண்களுக்கு, 18 வயதிற்கு முன்னரே திருமணம் நடப்பதாகவும், 7 சதவீத பெண்களுக்கு, 15 வயதிற்கு முன்னதாகவே திருமணம் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 என, சட்டம் இருக்கும் நேரத்திலேயே, இந்த நிலைமை உள்ளது. எனவே, பெண்களின் திருமண வயதை உயர்த்தும் போது, அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி, நம் சமூகத்திற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். கடந்த, 2017ம் ஆண்டில், கர்ப்பக்காலம், மகப்பேறின் போது ஏற்பட்ட உடல் நலக்குறைவுகளால், 35 ஆயிரம் பெண்கள் இறந்ததாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், பெண்களின் திருமண விஷயத்தில், நீண்ட காலமாக பின்பற்றப்படும் பழமையான நடைமுறைகளை மாற்ற, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும். பெண்கள் மற்றும் ஆண்களுக்கான திருமண வயது, ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என, தேசிய மனித உரிமைகள் ஆணையமும் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தது. பெண்களின் திருமண வயதானது, 143 நாடுகளில், 18 என்றும், 19 முதல், 21 வயதாக, 29 நாடுகளிலும் உள்ளன. எனவே, பாரம்பரியம், குடும்ப சூழ்நிலை என்ற பழைய பல்லவியை பாடுவதை விடுத்து, மத்திய அரசின் புதிய அணுகுமுறைக்கு மாறுவதே நல்லது. இதனால், பெண்களின் வாழ்வு மேம்படுவதோடு, அவர்களின் சுயசார்பும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement