dinamalar telegram
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் ஓராண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

Share

இம்மாதம், 5ல், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு, இதே நாளில் தான், ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம், ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது, 2019 ஆகஸ்ட், 5க்கு முன் அமலில் இருந்த, 354 சட்டங்களில், காலத்திற்கு ஒவ்வாத, 164 சட்டங்கள் ரத்தாகி உள்ளன. 138 சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன; மத்திய அரசின், 170 சட்டங்கள் அமலாகி உள்ளன. மேலும், மத்திய உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, அங்கு வன்முறைகளும், பயங்கரவாத நடவடிக்கைகளும், 36 சதவீதம் குறைந்துள்ளன. 2019 ஜனவரி, 1 முதல் ஜூலை, 15 வரையிலான காலகட்டத்தில், 188 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன.இந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை, 120 ஆக குறைந்துள்ளது. அதேபோல, பயங்கரவாத சம்பவங்களில், பாதுகாப்பு படையினர், அப்பாவி மக்கள் பலியாகும் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளில், உள்ளூர் இளைஞர்கள் சேருவதும், 40 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டின், முதல் ஆறரை மாதங்களில், 67 இளைஞர்கள் மட்டுமே, மூளை சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத இயக்கங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஜம்மு -காஷ்மீரை சேர்ந்த, 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், அனைத்து துறைகளிலும், 10 ஆயிரம் காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை எளிமையான முறையில் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில முதன்மை செயலர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், பகாரி மொழி பேசுவோருக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின், 7வது சம்பள கமிஷன் பரிந்துரையும், ஜம்மு -- காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு அமலாகியுள்ளது. இதனால், மூன்று லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். இதுதவிர, பல பாலங்கள் கட்டப்பட்டு, துவக்கப்பட்டுள்ளதோடு, உலகிலேயே உயரமான ரயில் பாலமும், செனாப் நதியின் மீது கட்டப்பட்டு வருகிறது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, மின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிலங்கள் பதிவு நடவடிக்கையில், சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட பின், பல கோடி ரூபாய் அளவுக்கு, யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு வருவாய் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா உட்பட, பல வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்காக, இந்த ஆண்டு ஜனவரியில், 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இதனால், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திட்டப்பணிகள், மீண்டும் புத்துயிர் பெறவுள்ளன. ஐ.ஐ.எம்., -- ஐ.ஐ.டி., - எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் துவக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுபோன்ற பல சாதகமான அம்சங்கள் இருந்தாலும், ஜம்மு -- காஷ்மீருக்கு கணிசமான வருவாய் ஈட்டித்தரும் சுற்றுலா பெருமளவு பாதித்துள்ளது. 2019 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 50 ஆயிரத்திற்கும் குறைவான சுற்றுலா பயணியரே, இங்கு வந்துள்ளனர். இதனால், ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது என, வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உட்பட பலர் விடுவிக்கப்பட்டாலும், மற்றொரு முன்னாள் முதல்வரான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உட்பட, பலரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவைகளிலும் மாற்றம் நிகழ்ந்தால், ஜம்மு -- காஷ்மீரில் மாமூல் நிலைமை திரும்பி விடும் என்பதில் ஐயமில்லை. கடினமான சில முடிவுகளை எடுக்கும் போது, குறிப்பிட்ட காலத்திற்கு, அரசும், மக்களும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பது நிதர்சனமானது. அது போன்றது தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்திலும், மத்திய அரசு எடுத்த முடிவு. அங்குள்ள மக்களும், மத்திய அரசின் முடிவை முழு மனதோடு ஏற்றுக் கொண்டால், அந்த மாநிலம், விரைவில் நல்ல வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement