Advertisement

'டவுட்' தனபாலு

Share

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: அதிருப்தி என்பது, தி.மு.க.,வில் நீரு பூத்த நெருப்பாக புகைகிறது. முதலில், கு.க.செல்வம் என்ற விக்கெட் விழுந்துள்ளது; அடுத்த விக்கெட், துரைமுருகனாக இருக்கலாம். அவர் மிகுந்த வருத்தத்தில் உள்ளார். அவர் எதிர்பார்ப்பது, பொதுச் செயலர் பதவி. அதை கொடுக்கிறோம் எனக் கூறிவிட்டு, 'மூன்று கோடு' போட்டு விட்டனர். இதனால், மிகுந்த வருத்தத்தில் உள்ள துரைமுருகன் தான், அடுத்த விக்கெட்டாக இருக்கலாம்.

'டவுட்' தனபாலு: ஆனால், துரைமுருகன், தொடர்ந்து, அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புவதாக கூறியுள்ளாரே... சரி, தி.மு.க.,வில் விழும் விக்கெட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு வராமல், பா.ஜ.,வுக்கு அதிகமாக செல்கிறதே ஏன் என்ற, 'டவுட்' அரசியல் பார்வையாளர்களுக்கு வந்துள்ளதே!

***

தமிழக, பா.ஜ., பொதுச்செயலர், கரு.நாகராஜன்: முருகனை அவதுாறாக பேச துாண்டி விட்டது யார் என, தெரியவில்லை. முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இது குறித்து, கண்டிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. பழநி முருகனாக இருந்தாலும் சரி, திருச்செந்துார் முருகனாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் முருகன் ஆட்சி தான் வர வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முருகனை அவமதிக்கும் படி, தி.மு.க., தான் துாண்டி விட்டிருக்குமோ என்ற, 'டவுட்' உங்களுக்கு இருப்பதாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் முருகன் ஆட்சி தான் வர வேண்டும் என சொல்லியுள்ளது, முதல்வர், 'பழனிசாமி'யை சொல்கிறீர்களா அல்லது உங்கள் கட்சித் தலைவர், முருகன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்கிறீர்களா என்ற, 'டவுட்'களும் வருகின்றனவே!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழ் கற்பதை கட்டாயமாக கொண்ட, இரு மொழிக் கொள்கை, தமிழகத்தில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்து உள்ளது. கல்லுாரி நுழைவு தேர்வுகள், மாணவர்களுக்கு பாகுபாட்டை காட்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய தேசிய கல்வி கொள்கையில், தொழிற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாக உள்ளது.

'டவுட்' தனபாலு: மத்திய கல்வி அமைச்சருக்கு நீங்கள் எழுதியுள்ள இந்த கடிதத்தின்படி, தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்கிறீர்கள். ஆனால், எல்லா விதங்களிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என, சில நாட்களுக்கு முன் தான் கூறினீர்கள். இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டி, தமிழக அரசை பாராட்டுகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறதே!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவரின் உறவுக்கூட்டம் நடத்தும் பள்ளிகளில் எல்லாம் இருமொழிக் கொள்கை தான் நிறுவப்பட்டிருக்கிறதோ? அதிமுக விக்கெட்டுகள் டில்லிப் பக்கம் தென்படுவது, தங்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, கூடாரம் மாறக்கூட தயார் என்பது போலுள்ளது, இவர் கண்டும் காணாது இருக்கிறாரா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement