Advertisement

மது வியாபாரத்தை வளர்க்காதீர்!

Share

மது வியாபாரத்தை வளர்க்காதீர்!


வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்:கொரோனா பாதிப்பு நிதியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா, 5,000 ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும் என, தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.தமிழகத்தில், மொத்தம், 2.60 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அத்தனை கோடி மக்களுக்கும், தலா, 5,000 ரூபாய் கொடுப்பது என்றால்.... எவ்வளவு கோடி ரூபாய் வழங்க வேண்டும்... கணக்கு பார்த்தால், தலை சுற்றுகிறது!திராவிடக் கட்சிகள் போட்டி போட்டு, மக்களுக்கு இலவசங்கள் கொடுத்ததில், அரசு கஜானா, ஏற்கனவே காலி டப்பாவாக இருக்கிறது; இந்த லட்சணத்தில், அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?இந்த கொரோனா காலத்தில், ஏற்கனவே, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வீதம், இரண்டு முறை கொடுத்துள்ளது. இதில், 5,000 ரூபாய் கொடுப்பது என்பது நடக்கிற வேலையா?சரி... இத்தொகை கொடுத்தால் மட்டும், மக்களின் பசி ஆறுமா? அதற்கு, 2 மடங்காக, அவ்வளவும், 'டாஸ்மாக்' கடைகள் மூலம், திரும்பவும் கஜானாவுக்கு வந்து விடும். ஏதோ வேலைக்கு போகும் குடும்பத் தலைவர்களை, பணம் கொடுத்து, மது குடிக்க செல்லுங்கள் என, சொல்வது போல இருக்கிறது!தற்போதுள்ள நிலையில், தினக்கூலி உட்பட எல்லாரும், பழையபடி வேலை செய்து, தங்கள் உழைப்பால் கிடைக்கும் வருமானமே போதும் என்ற மனநிலையில் உள்ளனர். அவர்களுக்கு, இலவசமாக பணம் கொடுத்து, கெடுக்க வேண்டாம்.தி.மு.க.,விற்கு, தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சியில் இருந்த போது, அக்கட்சியினர் முறையற்ற வழியில் சேர்த்த பணத்தில், ஏழு கோடி மக்களுக்கும், தலா, 1,000 ரூபாய் கொடுக்கட்டும். அப்புறம், அ.தி.மு.க., அரசு மிச்சத்தை கொடுக்க முன்வரும்.மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்தாலே போதும். உழைத்து சம்பாதித்தால் தான், அதன் அருமை, மக்களுக்கு புரியும். 'இனாம்' கொடுத்து, மது வியாபாரத்தை வளர்க்க வேண்டாம். இதுவரை பட்டதே போதும் சாமி!

இந்த கூட்டணி எப்படியிருக்கு?


எஸ்.ரவிசங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊழல், போலி மதசார்பின்மை, கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றை கொள்கையாக கொண்டிருக்கும், திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து, தமிழகம் மீள வேண்டும்.ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வை இறுகப் பிடித்திருப்பது, அதிகார பசை தான். பசை காய்ந்து விட்டால், அக்கட்சியில் இருப்போர், திசைக்கு ஒருவராய், பிரிந்து விடுவர். தமிழகத்தில், தற்போது இருப்பது, காமராஜரின் காங்கிரஸ் அல்ல; அது, தி.மு.க.,வின் வழக்கறிஞர் பிரிவு, பேச்சாளர் கூட்டம் போல, காங்கிரஸ் அணி... அவ்வளவு தான்.தி.மு.க.,வினரே, 'தோல் இருக்க, சுளை முழுங்கி மன்னர்கள்' என, 'புகழ்' பெற்றவர்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியினர் செய்த அடாவடித்தனங்கள் மறக்கவே மறக்காது. ஊழல், கமிஷன், அடாவடி, அட்டூழியம், பதவி வெறி என்ற, அக்கட்சியின் மறைமுகக் கொள்கைகள், தமிழகத்தைச் சீரழித்தன.ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகள், இருக்கின்றன; அவ்வளவு தான்.இத்தகைய சூழ்நிலையில், அரசியலில் ஓரளவு பக்குவம் பெற்று, அனுபவமுள்ள தலைவராக தென்படுபவர், டாக்டர் ராமதாஸ்.அரசியல் மற்றும் சமூகம் குறித்து, இவர் வெளியிடும் அறிக்கைகள், அறிவுப்பூர்வமாக உள்ளன. பா.ம.க.,வின் நிழல் மந்திரிசபை என்பது, ஒரு சிறந்த அரசியல் கோட்பாடு. இங்கிலாந்து பார்லிமென்டில், காலங்காலமாக கடைப்பிடித்து வரும் வழக்கம். தவிர, பா.ம.க.,வின், வேளாண் துறைக்கான, தனி நிதிநிலை அறிக்கை என்பதும், பாராட்டத்தக்கது.ஆனால், பா.ம.க., மீது இருக்கும், ஜாதி முத்திரையை அகற்ற, அக்கட்சியினர் முயற்சிக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான கட்சி என்ற நம்பிக்கையை, மக்களிடம் பெற வேண்டும்.மத்தியில் ஆட்சியில் உள்ள, பா.ஜ., மற்றும் ஆன்மிக அரசியல் வழியாக, அனைத்து மக்களிடமும் செல்வாக்கு பெற்றுள்ள ரஜினியுடன், பா.ம.க., கூட்டணி அமைத்தால், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.இக்கூட்டணி, வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், டாக்டர் அன்புமணி, முதல்வராகவும், தமிழக, பா.ஜ., தலைவர், முருகன், துணை முதல்வராகவும் பதவியேற்ற வேண்டும்.ரஜினிக்கு, அரியணை தேவையில்லை; அவர், 'கிங் மேக்கர்' போல இருக்கட்டும்


இதுக்கு'கொரோனா'வே மேல்!ஏ.சி.ராஜன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும், கொரோனா எனும் நோய், எட்டு மாதங்களாக, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது, 'கொள்ளை நோய்' என்பதை விட, 'கொள்ளையடிப்போருக்கான நோய்' என்றே கூறலாம். கொரோனா எனக் கூறி, எத்தனையோ வழிகளில், மக்களிடம் கொள்ளைஅடிக்கின்றனர்.இந்நோய்க்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டோரிடம், சிகிச்சை கட்டணமாக, 5 - 15 லட்சம் ரூபாயை, தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கின்றன. அங்கு நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்து மற்றும் உணவு தான் கொடுக்கின்றனர். அதற்காகவா, இத்தனை லட்சம் ரூபாய் கட்டணம்?இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனையில், பிற நோயால் இறப்போருக்கும், கொரோனா நோய் என, சான்றிதழ் கொடுத்து விடுகின்றனராம்... ஏன் எனில், கொரோனா நோயால் இறந்தவர் உடலை, பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதற்காக, மருத்துவமனைக்கு, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை, அரசு கொடுக்கிறதாம்.இது தவிர, முகக்கவசம், 'டிஜிட்டல் தெர்மோ மீட்டர்' உள்ளிட்டவை கொள்முதலில், மோசடி நடக்கிறது.கொரோனா பாதிப்பு இருக்கும் பகுதியை, தனிமைப்படுத்தும் பணிக்காக, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு, 50 ஆயிரம் ரூபாயை, அரசு கொடுக்கிறது. வெறும், 2,000 ரூபாய்க்கு, தெருவில் இருபுறமும் தடுப்பு மற்றும் கிருமி நாசினி தெளித்துவிட்டு, 48 ஆயிரம் ரூபாயை கொள்ளையடிக்கின்றனர்.இது போக, 'இ - பாஸ்' இல்லாமல் செல்வோரிடம் வசூல், முகக்கவசம் அணியாதோரிடம் அபராதம் என, கொரோனா காலத்தில், எத்தனை கொள்ளை நடக்கிறது!இந்த கொள்ளையை விட, கொரோனாவே மேலானது எனத் தோன்றுகிறது!lllசாதனைகளுக்கு சொந்தக்காரர் யார்?

ஆர்.பாரத்வாஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தை, திராவிடக் கட்சிகளுக்கு, பட்டா போட்டு கொடுத்தாகி விட்டது போலும். இந்த இரண்டு கட்சிகளும் செய்யும் அவலங்களை, கேட்பார் இல்லை.இதோ இப்போது பாருங்கள்... மெட்ரோ நிலையங்களுக்கு, திராவிடத் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பெயர்களை சூட்டுகின்றனர்.இந்த மூன்று பேருக்கும், தமிழகத்தில் நினைவுச் சின்னமே இல்லையா என்ன... மேம்பாலம், மிருகக் காட்சி சாலை, நுாலகம் என, எதற்கெடுத்தாலும், திராவிட தலைவர்களின் பெயர்கள் தான் சூட்டப்படுகின்றன. போதாகுறைக்கு, ஊர் ஊருக்கு, அவர்களின் சிலை தான் உள்ளது.இது தவிர, புகழ்பெற்ற மெரினாவில், அவர்களுக்கு சமாதியும் உள்ளது. இந்நிலையில், மெட்ரோ நிலையங்களுக்கு, அவர்களின் பெயர் தேவையா?பாவம் காங்கிரஸ்காரர்களுக்கு, தங்கள் தலைவர்களுக்கு சிலை வைத்து, 'பிராண்ட்' உருவாக்கத் தெரியவில்லை. எத்தனையோ அரும் தலைவர்களை, நாட்டுக்கு தந்த காங்கிரசுக்கு, ஓட்டு அரசியல் செய்யத் தெரியவில்லை.சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, பூண்டி நீர்த்தேக்கம். 1940ல், சென்னை மேயராக இருந்த, சத்தியமூர்த்தி, பல்வேறு போராட்டங்களுக்கு பின், இத்திட்டத்தை செயல்படுத்தினார். அவர், பூண்டி நீர்த்தேக்கம் என்று தான் பெயரிட்டார்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மெட்ரோ ரயில் திட்டமே உருவானது. தேசிய கட்சிகள், சாதனைகள் செய்ய, மாநில கட்சிகள் பெயர் வாங்கிக் கொள்கின்றன. இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?


ஹிந்தி திணிப்பு வேண்டாமே!டாக்டர் எஸ்.பாலையா சீர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மொழி என்பது, மக்களின் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மட்டுமல்ல, ஓர் இனத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் வேலியும் கூட.ஒரு மொழியின் மேல், இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்த நினைப்பது, தவறான போக்காகும். நம் நாட்டிற்கு என, பொது மொழி ஒன்று வேண்டும் எனச் சொல்வோர், இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நம் நாட்டில், 28- மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய இரு பெரிய மாநிலங்களும்; சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்- ஆகிய, நான்கு- சிறிய மாநிலங்கள் மட்டுமே, ஹிந்தி பேசும் மாநிலங்கள்.இந்த, ஆறு மாநிலங்களின் மக்கள் தொகை, 2020 - -21-ல், 40- கோடியாக இருக்கும். இதே காலத்தில், நம் நாட்டின் மக்கள் தொகை, 138- கோடியாக இருக்கும் என, கணக்கிடப்படுகிறது. அதாவது, நம் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர், ஹிந்தி பேசுவோர் கிடையாது. சிலர் ராஜஸ்தான், பீஹார் போன்ற மாநிலங்களை, ஹிந்தி பேசும் மாநிலங்களாகத் திரித்துக் கூறுகின்றனர். ராஜ்தானி, பிஹாரி என்பது தான், அந்த மாநிலங்களின் மொழி. மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும், ஹிந்தியில் சுற்றறிக்கை அனுப்புவது விதண்டாவாதமாகும். ஹிந்தி கற்றுக் கொள்வது, மாணவர்களின் விருப்பம். ஆனால் ரயில் நிலையம், விளம்பரம், சுற்றறிக்கை என, மத்திய அரசு, நாடு முழுதும் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. இது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்காலத்திற்கேற்றமாற்றம் அவசியம்!-பா.விஜய், பால்ஸ் சர்ச், வெர்ஜீனியா, அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளாக, கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது, 21ம் நுாற்றாண்டிற்கான புதிய கல்வி கொள்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கல்வித்துறையில், முக்கியமான சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.'இஸ்ரோ' முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான, கஸ்துாரி ரங்கன், 'அடுத்த தலைமுறையினரின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும்; தரத்தில், சமரசமின்றியும், புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.புதிய கல்விக் கொள்கையில், 5ம் வகுப்பு வரை, தாய்மொழி வழி கல்வி பயிற்றுவிக்கப்படுவது, அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்று.தற்போதுள்ள, 10 + 2 என்ற முறைக்கு மாற்றாக, 5 + 3 + 3 + 4 என்ற முறையில், வகுப்புகள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 3, 5, 8ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடத்தப்படுவதோடு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு வரை, பொதுத் தேர்வு நடத்தப்படாததால், கல்வித் தரம் அதல பாதாளத்திற்குச் சென்றது. இதை தடுக்கும் விதமாக, பொதுத் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மெச்சத் தக்கதாகும்.ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பிலேயே, 'பெயில்' ஆனவர் உண்டு. அதன் காரணமாகவே, ஐந்தாம் வகுப்பு முடித்தவர் கூட, நல்ல கல்வியறிவுடன், இன்றைக்கும் திகழ்கின்றனர்.'இடை நிற்றல்' என்ற காரணத்தைக் கூறி, பொதுத் தேர்வு இல்லாமல், அனைவரும் பாஸ் என அறிவித்ததால், மாணவர் சமுதாயம், பாழாய்ப் போனது என்பது, ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும்.இனி, அந்தந்த வகுப்பை முடிக்கும் போது, அதற்குண்டான தகுதியை, மாணவர் பெற வேண்டும் என்பது, உயர்ந்த கல்விக் கொள்கை தானே!தொழிற்கல்வியை உள்ளடக்கிய உயர் கல்வியில், 2018ல் மொத்த சேர்க்கை விகிதம், 26.3 சதவீதம் என்பதை, 2035ல், 50 சதவீதமாக உயர்த்துவதையும், உயர் கல்வியில், புதிதாக, 3.50 கோடி இடங்கள் உருவாக்கப்படுவதையும் இலக்காகக் கொண்டுள்ள, இக்கல்விக் கொள்கை சிறப்புக்குரியது தானே!ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றுக்கு இணையாக, உலகத்தர கல்வியைப் போதிக்க, தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. உலகத் தரவரிசைப் பல்கலைகளில், நம் நாட்டின் பல்கலை எதுவும் இடம் பிடிக்காத நிலையை மாற்றியமைக்க, இது கை கொடுக்கும்.காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்ளடக்கிய, புதிய கல்விக் கொள்கையை, அனைவரும் மனமுவந்து வரவேற்போம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ரஜினியுடன், பா.ம.க., கூட்டணி அமைத்தால், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.இக்கூட்டணி மக்கள் நம்பும் அளவுக்கு ஏற்றதல்ல.. ராமதாஸ் அறிக்கையெல்லாம் கெட்டிக்காரனின் புளுகு...

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.சி.ராஜன் அவர்கள் கூறியது போல மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மணப்புரம் ஊராட்சிக்கு சென்னையில் வேலை பார்த்த கம்பேனி வண்டி மூலமாக கொராணா வைரஸ் பெண் ஜுரம் என்று வீட்டில் இறங்குகிறார். அவர்கள் குடும்பம் ஜூரம் என்ற போர்வையில் கால்பால் மாத்திரையை வாங்கி கொடுத்து அவர்களது மகளை ஐந்து பிள்ளைகளுடன் குடும்பத்தில் உள்ளே வைத்து பாதுகாத்து வந்தார்கள். காலனி என்பதால் பலரும் நெருங்கி மண்மலை கிராமத்தில் வாழ்வதால் ஊராட்சி தலைவர் மற்றும் பிற எம்ஏ க்கு தெரிவித்தேன் நோயாளிக்கு கொராணா தொற்று உறுதியானாலும், அவர்கள் குடும்பத்தை தனிமைப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விட்டார்கள்..பின்னர் நாங்களே பம்ப் பெட்டில் அவர்களை தனிமைப்படுத்தி வைத்தோம். ஊராட்சியில் வந்து பிலிச்சிங் பவுடர் வாசல் சாலையிலும் குடிநீரிலும் போட்டு விட்டு சென்றார்கள். மக்களுக்கு இது பாதுகாப்பானதா என்பதை கடவுள்தான் முடிவு எடுப்பார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement