Advertisement

பின்னணி என்ன?

Share

பின்னணி என்ன?

'ஏதோ பெரிதாக திட்டம் போடுகிறார் போலிருக்கிறது' என,மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதியின் அதிரடி அரசியலைப் பார்த்து, அம்மாநில, பா.ஜ.,வினர் குழம்பியுள்ளனர். உமா பாரதி, பா.ஜ.,வில் உள்ள பேச்சாற்றல் மிகுந்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். தன் மீது வழக்கு வந்ததை அடுத்து, 2004ல், ம.பி., முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பின் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், மோடியின் முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்தார். கடந்த லோக்சபா தேர்தலில், உடல் நலனை காரணம் காட்டி, போட்டியிடாமல் ஒதுங்கினார். இதற்கிடையே, மத்திய பிரதேச, பா.ஜ., வில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து விட்டார். இப்போது, உமா பாரதிக்கு மீண்டும் மாநில அரசியலில் ஆர்வம் வந்து விட்டது. தன் ஆதரவாளர்களுக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளை தர வேண்டும் என, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ம.பி., மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். தினமும், கட்சி நிர்வாகிகள் பலர், உமா பாரதியை சந்தித்து, வாழ்த்து பெற்று வருகின்றனர். உமா பாரதியின் இந்த திடீர் ஆர்வம், சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு லேசாக கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'மாநில அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த அவர், மீண்டும் சலசலப்பை ஏற்படுத்துவதன் பின்னணி என்னவாக இருக்கும்' என, கவலையில் ஆழ்ந்தள்ளார்.

'ஒலிம்பிக்' போட்டிக்கு தயாராகும் அமைச்சர்!



'மத்திய அமைச்சர்களின் நடவடிக்கைககளில் சமீப காலமாக சில மாற்றங்கள் தென்படுகின்றன. அதற்கான காரணம் தான் தெரியவில்லை' என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரன் ரிஜிஜுவை பற்றி கூறுகின்றனர், டில்லி அரசியல்வாதிகள். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அமைச்சரவையில், உள்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார் கிரன் ரிஜிஜு. போதிய முன் அனுபவம் இல்லாத நிலையிலும், முக்கியமான இலாகா, இவருக்கு அளிக்கப்பட்டது, சக அமைச்சர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு அமைந்தபோது, கிரன் ரிஜிஜுவிடமிருந்து, உள்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு துறை தரப்பட்டது. 'ஏற்கனவே, இணை அமைச்சராக இருந்தார். தற்போது தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளார்' என, கட்சி மேலிடம் விளக்கம் அளித்தது.இப்போதெல்லாம், கிரன் ரிஜிஜு, வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் அமைத்து, கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். கேள்வி கேட்பவர்களுக்கு, 'விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர், உடலை கட்டுக்கோப்பாக வைத்து, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டாமா' என, புன்முறுவலுடன் விளக்கம் அளிக்கிறார். எதிர்க்கட்சியினரோ, 'உள்துறை அமைச்சர் பொறுப்பு கிடைக்காத விரக்தியில், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார் போலிருக்கிறது' என, கிண்டலடிக்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement