Advertisement

விடுதலையைக் கனிய வைத்த போராட்டம்

Share

ஆக. 8 - வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்

ஒரு கனியை இன்று சுவைக்கிறோம் என்றால், இந்தக் கனியைத் தந்த மரக்கன்றை சில காலங்களுக்கு முன் நட்டிருக்கவேண்டும். அதுபோலவே நமது சுதந்திர தினத்தை (ஆக., 15) நாம் கொண்டாட காரணமாக இருந்தது வெள்ளையனே வெளியேறு இயக்கம். இது இந்தியா கண்ட எழுச்சிமிகு போராட்டம்.அது இரண்டாம் உலகப்போர் நேரம்.

1939 செப்டம்பர் முதல் தேதியன்று போலந்து நாட்டின் மீது ஜெர்மனி போர் தொடுத்தது. இதையடுத்து ஜெர்மனி மீது போர் செய்யப் போவதாக இங்கிலாந்து அறிவித்தது. "இந்தியாவும் ஜெர்மனியை எதிர்க்கும்" என்றார் இந்திய வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ பிரபு. தங்களது கருத்தைக் கேட்காமலேயே தங்கள் நாட்டினை போர்முனையில் நிறுத்திய இங்கிலாந்தின் செயலை இந்திய தலைவர்கள் விரும்பவில்லை. இந்திய தலைவர்களின் அதிருப்தியை ஆங்கிலேய அரசும் உணராமலில்லை.

ஆகஸ்ட் சலுகை

எனவே உலகப்போரில் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஆங்கிலேய அரசானது 1940 ஆகஸ்ட் மாதம் 'ஆகஸ்டு சலுகை'யை அறிவித்தது. "போருக்குப்பின்னர், புதிய அரசியல் அமைப்பை வரைவதற்காக இந்தியப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். சிறுபான்மையினர் சம்மதத்தைப் பெறாமல் எதிர்காலத்தில் எவ்விதமான அரசியல் சீர்திருத்தமும் செய்யப்படமாட்டாது. போர் விஷயங்கள் பற்றி ஆலோசிக்க குழு அமைக்கப்படும் என்று அந்த அறிக்கை சொல்லியது.

1942ன் துவக்கத்தில் ஜப்பானை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்க, இங்கிலாந்து ராணுவங்கள் திணறின. ஜப்பானின் அடுத்த இலக்காக இந்தியா இருக்கக்கூடும் என்ற கவலை ஆங்கில அரசுக்கு இருந்தது. இந்த நேரத்தில் இந்தியர்களின் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்த அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், இந்திய மக்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சர்ச்சிலுக்கு எழுதினார். சர்ச்சிலுக்கும் இது சரியெனப்பட்டது. தனது மந்திரிகளில் ஒருவரான கிரிப்ஸை இந்திய தலைவர்களுடன் பேச அனுப்பினார்.

பேச்சுவார்த்தை வீண்



கிரிப்ஸ் இந்திய தலைவர்களை சந்தித்து பேசினார். கிரிப்ஸ் குழுவின் அறிக்கையானது,

1. போர் முடிந்ததும் இந்தியா டொமினியன் நிலையைப் பெறும் (அதாவது கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்று பிரிட்டிஷ் மன்னரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட நாடாக மாறும்).


2. போர் முடிந்ததும் இந்திய அரசியல் சட்டத்தை அமைப்பதற்கு ஒரு குழு ஒன்று அமைக்கப்படும்.


3. மாநிலங்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் பிரிந்து போகும் உரிமை அளிக்கப்படும் என்றது. சமரசத் திட்டத்தை படித்த காந்தி "இது திவாலான வங்கிக்கு கொடுக்கப்பட்ட காசோலை போலிருக்கிறது" என்றார். "இதில் மாற்றம் ஏதும் உங்களால் செய்ய முடியாது என்றால் லண்டனுக்கு திரும்பிச் செல்லுங்கள். இங்கு பேச்சு நடத்துவது வீண் வேலை" என்றார் காந்தி.


ஜப்பானின் தாக்குதலிலிருந்து இந்தியாவை காக்க வேண்டுமானால், உடனடியாக ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று காந்தி எண்ணினார். ஆங்கிலேயரை வெளியேற்ற, போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார்.வெள்ளையனே வெளியேறுஆங்கில அரசை வெளியேற்றினால் மட்டுமே இடைக்கால அரசை அமைக்க முடியும், பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்றும் காந்தி கருதினார்.

ஆங்கிலேய ஆட்சியை அகற்றவேண்டும் என்ற வார்தா தீர்மானம் ஜூலை 14, 1942ல் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் 1942 ஆகஸ்ட் 8 ல் நடந்த பொதுக்குழுவில் இத் தீர்மானம் ஆதரவைப் பெற்றது. வெள்ளையர்களை வெளியேற்ற மக்கள் போராட்டத்தை வன்முறையின்றி நடத்தப் பொதுக்குழு முடிவெடுத்தது.


அப்போது பேசிய காந்தி, "நான் கற்பனை செய்துவைத்திருக்கும் ஜனநாயகத்தில், அதாவது அகிம்சை வழியில் நிறுவப்படும் ஜனநாயகத்தில், எல்லோருக்கும் சம அளவிலான சுதந்திரம் இருக்கும். எல்லோருமே அவரவர் எஜமானராக இருப்பார்கள். அதுபோன்றதொரு ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் கலந்துகொள்ளத்தான் அழைப்பு விடுக்கிறேன்.


இதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் என்றால், சுதந்திரத்துக்கான பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களாக மட்டுமே உங்களை எண்ணிக்கொள்வீர்கள். நாடு விடுதலை அடையும் வரை அமைதி அடையக் கூடாது. செய்வோம் அல்லது மடிவோம். இந்தியாவின் விடுதலையை நனவாக ஆக்குவோம்" என்றார்.காந்தியின் பேச்சு மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை வேகப்படுத்தியது.

ஒரு லட்சம் பேர் கைது



பொதுக்குழு முடிந்தவுடன் 1942 ஆகஸ்ட் 9ல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் கைதாகினர். முதல்கட்ட தலைவர்களை சிறையில் அடைத்தால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என ஆங்கிலேய அரசு கணக்கிட்டது. இரண்டு தினங்களில் அதைச் செய்தும் முடித்தது. இரண்டாம் கட்ட தலைவர்களாக உருவாகி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அருணா ஆசப் அலி, சுசேதா கிருபளானி போன்ற தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.தலைவர்கள் இல்லையென்றாலும் தன்னிச்சையாக இயங்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்கள் மக்கள். ஒரு லட்சம் பேர் கைதானார்கள்.

ஆங்கிலேயரின் கொடூரம்



கைது விஷயத்தில் கூட ஆங்கிலேய அரசு கொடூர எண்ணத்தை வெளிப்படுத்தியது. தமிழகத்தில் கைதானவர்களில் 30 பேரை மத்தியபிரதேசம் அமராவதி சிறைச்சாலையில் அடைத்தது. சத்தியமூர்த்தி, காமராஜர், சி.எம்.முத்துரங்க முதலியார், பக்தவச்சலம், திருவண்ணாமலை அண்ணாமலை பிள்ளை, ம.பொ.சிவஞானம், மதுரை சிதம்பர பாரதி ஆகியோர் இதில் அடங்குவர். அதேபோல் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வினோபா உட்பட 30 தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வேலுார் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.


மதுரையில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மூன்று பேர் சிறுவர்கள். நாடெங்கும் போராட்டத்தை ஒடுக்க 57 பட்டாலியன் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். சுமார் 600 முறை இவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். ஓராண்டுகாலம் போராட்டம் நீடித்தது. காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார். 21 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். 1944ல் விடுதலை செய்யப்பட்டார்.


"இது 1857க்குப் பிறகு நடந்த மிகப் பெரிய போராட்டம்" என்று வைஸ்ராய் சொன்னார். இந்திய மக்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக இருக்கிறார்கள், கிளம்புவதைத் தவிர வழியில்லை என்பதை ஆங்கிலேயரும் உறுதி செய்தனர்.வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டமாகும். இந்த இயக்கம்தான் இந்தியா முழுவதுமுள்ள மக்களின் விடுதலை உணர்வை வேகப்படுத்தியது. அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று இந்தியர்களின் ஒட்டுமொத்த தியாக மனப்பாங்கை, கூட்டு உணர்வை உலகிற்கு உணரவைத்தது.

ஒற்றுமை தேவை



இன்றைக்கும் இதுபோன்றொரு ஒற்றுமை உணர்வு தேவை என்கிறார் பிரதமர் மோடி. ''1942ம் ஆண்டில், “செய் அல்லது செத்து மடி'' என்ற எழுச்சியூட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று “செய்வோம் செய்து கொண்டே இருப்போம்” என்ற அழைப்பாக இருக்க வேண்டும். இந்த உறுதிமொழி, நம்மை இலக்கை நிறைவேற்ற வழிநடத்திச் செல்லும்'' என்றும் பிரதமர் இரண்டாண்டுகளுக்கு முன் அறிவித்தார்.


ஊழலை ஒழித்தல், ஏழைகளுக்கு அவர்களது உரிமைகளை வழங்குதல், இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு முடிவுகட்டுதல், பெண்கள் மேம்பாட்டுக்கான தடைகளை அகற்றுதல், கல்வியறிவின்மையைப் போக்குதல் ஆகியவற்றைச் செய்வோம். செய்து கொண்டே இருப்போம் என்கிறார் பிரதமர். செய்வோம். செய்துகொண்டேயிருப்போம்.

-ப. திருமலை, பத்திரிகையாளர்t

hirugeetha@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sri -

    அதற்கு திமுக என்ற விஷக் கிருமி அழிய வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement