Advertisement

'டாலர் சிட்டி'க்கு போட்டி போடும் ஐவர்!

Share

''வருமானம் கொட்டும் என்பதால, 'டாலர் சிட்டி'க்கு போக, போட்டி போட்டுண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''என்ன விஷயமுன்னு சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''டாலர் சிட்டின்னு சொல்ற, திருப்பூர் மாநகர போலீசுல இருக்கற, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பதவி, ஒரு மாசமா காலியா இருக்கு... இந்த பதவிக்கு, ஐந்து பேர் போட்டி போட்டுண்டு இருக்கா ஓய்...

''மாவட்டத்துல இருக்கற அமைச்சர்களிடம், லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசிண்டு இருக்காளாம்... இதனால, பதவி நிரப்பாம கிடக்கு... எல்லாத்துக்கும் காரணம், திருப்பூர்ல கொட்டற மாமுல் தானாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க, தேர்வு வைக்க போறாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியை, ஐந்து மண்டலங்களாக பிரிச்சுருக்காவ... சென்னை மண்டலத்துல மாவட்டம், பகுதி, வட்டம் என்ற நிலையில, ஐ.டி., அணிக்கு பொறுப்பாளர் நியமிக்க போறாவ வே...

''அவங்களை, திறனாய்வு தேர்வு வழியா, நியமிக்க திட்டமிட்டுருக்காவ... அதுல, தேர்ச்சி பெறுவோரை மட்டும் தான், நேர்காணலுக்கு அழைப்பாவ... அதுலயும் தேர்ச்சி பெற்றால் தான், நிர்வாகிகளாக நியமிப்பாவ... இது, என்ன புது பார்முலா என, கட்சி நிர்வாகிகள் குமுறுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''மரத்தை வெட்டி, நீர்நிலையை ஆக்கிரமிக்க முன்னோட்டம் பார்த்துருக்காங்க...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி

''என்ன சொல்லுறீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''இதுவும் திருப்பூர் மாவட்ட சமாச்சாரம் தான்... காங்கயம் ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகள்ல, சமுதாய நலக் கூடம் கட்ட நிதி ஒதுக்கினாங்க... இதுல, சிவன்மலை ஊராட்சியில கட்டுமான பணி நடக்கும் இடத்துல, மரங்கள வெட்டியிருக்காங்க... இதைக் கண்டிச்ச பெண் தாசில்தாரை, ஒரே நாள்ல, இடமாறுதல் செஞ்சிருக்காங்க...

''உண்மை என்னன்னா... சமுதாய நலக்கூடம் கட்டுற இடத்துக்கு பக்கத்துல இருக்குற, நீர் நிலை புறம்போக்கை ஆக்கிரமிக்கிற எண்ணம் தானாம்... அதுக்கு முன்னோட்டமாக தான், இந்த மரம் வெட்டுற சம்பவம் நடந்துருக்குங்க...

''மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவிச்ச தாசில்தார், இடம் ஆக்கிரமிப்புக்கும் இடையூறாக இருப்பாங்கன்னு நினைச்சு, ஆளுங்கட்சிக்காரங்க, மாவட்ட அமைச்சரிடம் வத்தி வைக்க, அன்னைக்கே இடமாற்றம் நடந்துருக்குங்க...''இதே தாசில்தார், மண் கடத்தும் கும்பலிடம் பேரம் பேசி, பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியது, தனிக்கதைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

நாயர் கடைக்கு வந்த, புனிதவதி என்ற பெண்ணிடம், அன்வர்பாய் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். மற்ற நண்பர்கள் கிளம்பினர். பெஞ்ச் அமைதியானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா

    எங்கெங்கு காணினும் சக்தியடா என்கிறார் மகா கவி பாரதியார்.தற்போதெல்லாம் எங்கெங்கு காணினும் லஞ்சம்,வஞ்சம்,கஞ்சா என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

  • Sathiya Moorthy - Salem,இந்தியா

    மதுரை திருப்பரங்குன்றம் கண்மாய் தற்போது ஆக்ரமிக்கப்படுவதாக உணர்கிறேன். கண்மாயின் தென்மேற்கு பகுதியில் காம்பௌண்ட் சுவர் கட்டப்பட்டு கண்மாயின் உள்ளே குத்துக்கல்லும் நடப்பட்டுள்ளது. தினமலர் இதை ஆராய்ந்து ஆவண செய்து கண்மாய் யை காப்பற்றுமாறு கேட்டு கொள்கிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement