Advertisement

கருங்கல்லில் நாதஸ்வரம் செய்துள்ளேன்!

Share

கருங்கல்லில் நாதஸ்வரம் செதுக்கியுள்ளது பற்றி, தென்காசி, காளி சிற்பக் கூடத்தின் சிற்பக் கலைஞர் மாரியப்பன்: பரம்பரை, பரம்பரையாகவே நாங்கள் கல் சிற்பக் கலைஞர்கள் தான். கோவில்களுக்கு சுவாமி சிலைகள் செதுக்கி தருவது தான் வேலை.இந்த கொரோனா நேரத்தில், பல தொழில்கள் அடிபட்டுள்ளது போல, எங்களின் சிற்பம் வடிக்கும் தொழிலும் பாதிப்படைந்துள்ளது.

வேலையே இல்லை; வீட்டில் தான் முடங்கியுள்ளோம். வருமானம் ஈட்ட வழியின்றி, கலைஞர்கள் அவதிப்படுகின்றனர். முழு ஓய்வு தான் என்பதால், நிறைய நேரம் கிடைக்கிறது.நாதஸ்வர இசைக்கருவி, கோவில்களிலும், புனிதமான விழாக்களிலும் பயன்படுத்தக் கூடியது. இசைக்கருவிகளில் மிகவும் இனிமையான இசையைத் தரும் இந்த கருவி, மரத்தில் தான் செய்யப்படுகிறது.ஆச்சா என்ற மரத்தை கடைந்து தான், நாதஸ்வரத்தின் குழல் பகுதியை செய்வர்.

வட்ட வடிவமான தலைப் பாகத்தை, வாகை மரத்தில் செய்வர். எனக்கு தெரிந்த வரை, நம் கோவில்களில், இரண்டு இடங்களில் தான், கல் நாதஸ்வரம் உள்ளது.ஒன்று, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் கோவில்; மற்றொன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில். இங்குள்ள கல் நாதஸ்வரத்தை, முக்கியமான நாட்களில் மட்டும், இசைக்கலைஞர் இசைப்பார்.ஆழ்வார் திருநகரி கோவிலில் உள்ள கல் நாதஸ்வரத்தை, கடந்த ஆறேழு ஆண்டுகளாக யாரும் எடுத்து இசைக்கவில்லை.பாதுகாப்பு காரணங் களுக்காக, மரப்பெட்டியில் வைத்துள்ளனர். அவ்வளவு புனிதமான நாதஸ்வரத்தை, கல்லில் வடித்துள்ளதை, பெருமையாக கருதுகிறேன்.

கல்லில் விதவிதமான சிற்பங்களை வடித்துள்ளோம். அப்படியே, நாதஸ்வர இசைக்கருவியையும் செய்ய முடிவு செய்தேன்.ஒரே வாரத்தில் அருமையான நாதஸ்வரத்தை செய்து முடித்து விட்டேன். அதை, எங்கள் பகுதியில் உள்ள நாதஸ்வர இசைக் கலைஞரிடம் கொடுத்து வாசிக்க சொன்னேன். வாசித்த அவர், அருமையாக இருப்பதாகவும், மரத்தால் ஆன நாதஸ்வரத்தை போலவே இருப்பதாகவும் கூறி மகிழ்ந்தார்.

எங்களின் கல் நாதஸ்வரம், 1 அடி நீளம் கொண்டது. அலசு எனப்படும் முனையில் உள்ள விரிந்த பகுதி, 4 அங்குலம் விட்டம் கொண்டது. நாதஸ்வரத்தின் உடல் பகுதியில், ஏழு துளைகள் போடப்பட்டுள்ளன.எடை போட்டுப் பார்த்தேன். 850 கிராம் தான் இருந்தது. இதனால், இந்த இசைக்கருவியை யார் வேண்டுமானாலும், எளிதாக எடுத்து இசைக்க முடியும்.என் கல் நாதஸ்வரமும், காலம் காலத்திற்கு, எங்கள் பெயரை சொல்லும் என்ற நம்பிக்கை உள்ளது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Rajalakshmi - Kuwait City,குவைத்

  மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். நாதஸ்வர இசை மிகவும் மங்களகரமானது. கோவில்களிலும் , ஹிந்து திருமணங்களிலும் நாதஸ்வர இசைதான் களையூட்டுகின்றது.

 • KUMAR. S - GUJARAT ,இந்தியா

  பாராட்டுக்கள் சிற்ப கலைஞரே ..

 • Sundar - Hartford,யூ.எஸ்.ஏ

  வாழ்த்துக்கள் நண்பா. youtube channel-ல் வீடியோ போடவும். வேலை இல்லாத போது தயவு செய்து you tube channel ஆரம்பியுங்கள். உங்கள் தொழில் சார்ந்த சிரமங்களையும், உழைப்பையும், வெளிப்பாடுகளையும் சிறப்பு அம்சங்களையும் வீடியோ போடுங்கள். பின்னர், கோவில்கள் மற்றும் பிற இடங்களைப்பற்றியும், உங்கள்ப சாஸ்திரப்படி விளக்குங்கள். youtube மூலமாகவே நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். முயற்சியுங்கள்.

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  பாராட்டுக்கள் .ஒரு போட்டோ போடலாமே ?.

 • VIJAYAN S - மாங்காடு,இந்தியா

  கல்லிலே கலை வண்ணம் கண்டவர் நீங்கள் வாழ்த்துக்கள்

  • Srinivas - Chennai,இந்தியா

   நாதஸ்வரமும், தவிலும் முன்பு போல் அதிக அளவில் மக்களால் முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையால் போற்றப்படுவது இல்லை. எந்த மங்களகரமான நிகழ்ச்சியாக இருந்தாலும் நாதஸ்வர, தவில் கச்சேரிகள் பிரபலமாக இருந்த காலம் போய்விட்டது. செவியை அதிரவைக்கும் வெளிநாட்டு இசைக் கருவிகள் பின்னால் இன்றைய தலைமுறை சென்று கொண்டுள்ளது. நாதஸ்வரம், தவில் இன்று பெயருக்காக திருமணங்களில் இசைக்கப்படுகிறது. கோயில்களில் தொடர்ந்து இசைக்கப்படுவது ஆறுதலான செய்தி. நாதஸ்வரம், தவில் போன்ற இசைக்கருவிகளில் தங்களது ஈடுபாட்டை காண்பித்து புகழ் பெற்று மிகப்பெரும் வித்வான்களாக இருந்தவர்கள் பலர். அவர்களின் இசைத்திறமையை பல திரைப்படப்பாடல்களில் வெளிக்காட்டியிருப்பர். பல நூறு மேடைக்கச்சேரிகளிலும் இசைத்து தங்களின் திறமையை அனைவரும் அறியச்செய்த பல இசை மகான்களின் வாசிப்புகள் இன்றும் அழியாமல் இசைத்தட்டுகளில் ஒலித்துக்கொண்டுள்ளன. அப்படிப்பட்ட தெய்வீக இசைக்கருவிகளின் மீது ஆர்வம் இல்லாமல் இன்றைய தலைமுறை இருப்பது வேதனையான விஷயம். அதைச்சார்ந்த இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் சிறப்படுகின்றனர்.

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  பாராட்டுதல்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement