Advertisement

எம்.பி.ஏ., படித்து ஆடுகள் வளர்க்கிறேன்!

Share

எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் படித்து விட்டு, ஆட்டுப் பண்ணை வைத்துள்ள, ஈரோடு மாவட்டம், தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்: நல்ல பசுமையான, இரைச்சல் இல்லாத கிராமத்தில் பிறந்து, வளர்ந்த எனக்கு, வெளியில் சென்று வேலை பார்க்க, சுத்தமாக பிடிக்கவில்லை. படித்து முடித்ததும், சொந்தமாக பிசினஸ் ஏதாவது செய்ய வேண்டும் என, நினைத்தேன்; பல தொழில்களை ஆராய்ந்தேன். எதுவும் பிடிபடவில்லை.

ஒருநாள் ஊருக்கு வெளிப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்த போது, முதியவர் ஒருவர், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இப்படி, சில கிராமங்களில், சிலர் தான், ஆடு, மாடு மேய்க்கின்றனர்.இவர்கள் காலத்திற்கு பின், யார் இந்த தொழிலில் ஈடுபடுவர் என, சிந்தித்தேன். அப்போது தான், ஆட்டுப் பண்ணை அமைக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. சில நாட்கள் அந்த சிந்தனையிலேயே இருந்தேன். வீட்டில் சொன்னேன். பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

நான், எம்.பி.ஏ., முடித்த காலத்தில், ஐ.டி., தொழில் துறை உச்சத்தில் இருந்தது. லேசாக, மாதத்திற்கு, சில லட்சங்களை சம்பளமாக வாங்கும் நிலை இருந்தது. எனினும், நான், 'ஏசி' அறைக்குள் இருந்தபடி, சம்பாதிக்க விரும்பவில்லை.'விநாயகர் கோட் பார்ம்' என்ற பெயரில், ஆட்டுப் பண்ணை துவக்கும் முன், அந்த தொழிலில் உள்ள லாப, நஷ்டங்களை ஆராய்ந்தேன்.

ஆட்டு இறைச்சிக்கு எந்த காலத்திலும் வரவேற்பு இருப்பதை உணர்ந்தேன். இந்த கொரோனா காலத்திலும், ஆட்டு இறைச்சி விற்பனை சிறப்பாகத் தான் இருக்கிறது. இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு முன், முதலில், 25 ஆடுகளுடன் பண்ணையை துவக்கினேன். நினைத்தது போலவே, துவக்கத்தில் சில ஆண்டுகள், நிறைய ஆடுகள், குட்டிகள் இறந்தன; வருவாய் இல்லை.

ஏன் இந்த தொழிலுக்கு வந்தோம் என்று கூட எண்ணினேன். பல நேரங்களில், பைக்குக்கு பெட்ரோல் போடக் கூட பணம் இருக்காது. அதன் பின், ஆடுகளுக்கு வரும் நோயை குணப்படுத்த, நோய் வராமல் தடுக்க, ஆரோக்கியமாக அவற்றை வளர்க்க, படிப்படியாக கற்றுக் கொண்டேன். இப்போது, மாதம், சில லட்சம் ரூபாய்களில் வருமானம் வருகிறது; முழு நேரமும், பிசியாக இருக்கிறேன். ஐ.டி., துறையில் இருந்திருந்தால் கூட, இவ்வளவு நிம்மதியாக இருந்திருக்க முடியாது.

தொழில் நல்ல லாபமாக செல்கிறது. எந்த தொழிலாக இருந்தாலும், லாபம் சம்பாதிக்க, நான்கைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்; அதை, தாமதமாகத் தான் உணர்ந்தேன். விநாயகர் கோட் பார்ம் என்றிருந்ததை, இப்போது, விநாயகர் கோட் பார்ம் பிரைவேட் லிமிடெட் என, உயர்த்தி விட்டேன்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Govind - Delhi,இந்தியா

    வாஸ்த்துக்கள் அன்பரே உங்கள் வெற்றி மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    சிறப்பாக வாருங்கள் .பிரைவேட் லிமிடெட் செய்தது ஏன் ?.அது உங்களை கடன் வாங்க வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்க தூண்டும் .எச்சரிக்கையாக இருக்கவும் .

  • Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா

    தொழிலதிபர் அருண்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement