Advertisement

ஓடி வா...மாணவ சமுதாயமே

Share

கல்லுாரி, தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து என்ற செய்தி வந்தவுடன், மாணவர்களின் மகிழ்ச்சிப் பொங்கி வழிந்ததைப் பார்த்திருப்போம். வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் தேர்வு ரத்துக்குக் காரணமானவர்கள் கொண்டாடி வைத்த ஸ்டேட்டஸ் அவர்கள் சிறகில்லாமல் பறப்பதை தெரிவித்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு ரத்தானது சூழல் காரணமாக. அதே சூழலே இப்போதும் தேர்வை ரத்து செய்ய வைத்துள்ளது. கொடூரமான விலங்குகளை விட ஏன் கொரோனாவை விடவும் கூட, தேர்வும், மதிப்பெண்களும் மாணவர்களை பீதியில் தள்ளுகின்ற உணர்வை இந்தக் கொண்டாட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் மாணவ சமூகம் எதிர் கொள்கிற 'இந்த முறை' அச்சப்பட வைக்கிறது.

சிந்திக்கும் வாய்ப்பு:கல்வி என்பதே அறிவுடன் நல்லொழுக்கமும் கூடிய தலைமுறையை உருவாக்கி சமூகம் சீராக, நாகரீகமாக செயல்பட உதவுவதே. பாடங்கள், தேர்வு, மதிப்பெண் எல்லாம் ஆர்வத்துடன் கல்வியைக் கற்க உதவும். ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுத் தெளிய வேண்டியவை என நம் தமிழக பாடத்திட்டக் குழு வரையறை செய்துள்ளது. படிப்பு எந்த பிரிவாக இருந்தாலும் அதற்கேற்ப மாறுதல்களுடன் பாடங்கள் உள்ளன. அதன் படி புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் வாசித்த சமச்சீர்க் கல்வியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளப் புத்தகங்கள் அவசியமானவற்றை உள்ளடக்கி இருப்பதுடன் கூடுதலாக சிந்திக்கும் வாய்ப்பை வழங்கவும் செய்கின்றன.

ஆனால் பள்ளிக்கூட பாடவேளைகளில் மாத்திரம் முழுமையாக அவற்றைக் கற்றுக் கொடுப்பது கடும் சவாலாகவே ஆசிரியர்களுக்கு இருக்கும். முந்தைய ஆண்டுகளில், வகுப்புகளில் தெளிவாகக் கற்றிருந்தால் கற்றல் ஓரளவு எளிமையாக இருக்கும்.

பாடமும், தேர்வும்:பெரும்பாலும் பாடங்கள் சென்ற ஆண்டு பயின்றவற்றின் தொடர்ச்சியே. வேகவேகமாக தேர்வுக்கு முன்னால் பாடங்களைப் பயிற்றுவிக்க ஓடும் நிலை கல்லுாரி ஆசிரியர்களுக்குமே உண்டு. பாடம் நடத்தினோமா, பரீட்சை வைத்து மதிப்பெண்ணை குறித்துவைத்தோமா என அடுத்தடுத்து ஓட்டம். இதில் கற்றல், கற்பித்தல் செய்தே ஆக வேண்டியது கடுமையான வேலையைப் போல இருக்கிறது. பிடித்த புத்தகத்தை வாசிப்பதைப் போலவோ, விருப்பமான இசையை ரசிப்பது போலவோ பாடமும், தேர்வும் இருக்கும்பட்சத்தில் கற்றல் இனிமையான ஒன்றாக இருக்கும்.

பால்யத்தில் பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடத்திய ஓரிருவரை நம்மால் எத்தனையோ வயது தாண்டியும் மறக்க முடிவதில்லை. இன்றும் அவர்களின் பெயரைச் சொன்னாலே அன்பும், மரியாதையும் கலந்தே நினைத்துப் பார்ப்போம். எளிமையாக, அருமையாக, அன்பாக, ஆழமாக பாடம் நடத்திய ஆசிரியர்களாலே அந்தப் பாடங்களின் மீது பெரும் விருப்பம் கொண்டிருப்போம். அவர்களின் பாடவேளைக்காகக் காத்திருந்திருப்போம். அந்த வகுப்பை மட்டும் இயன்றளவு தவறவிடமாட்டோம்.

அந்தப் பாடங்கள் அவர்கள் நடத்தும் விதத்திலேயே பாதி உள்ளே உட்கார்ந்து விடும். மீதி ஒரு முறை வாசித்தாலே போதும். அந்தப் பாடத்தின் தேர்வுக்கு முந்தைய நாள் பதட்டம் இருக்காது. மதிப்பெண்ணும் அகம் மலரக் கிடைக்கும்.

ஆசிரியர்களுக்கு சவால்:புதியப் பாடத்திட்டம், குறைவான நேரம், ஆர்வமில்லாமல் 'கடனே என்று' அமர்ந்திருக்கும் மாணவர்கள் இவற்றையெல்லாம் சமாளித்து பாடங்களை நடத்துவதே பெரும்பாடாக ஆசிரியர்களுக்கு இருக்கும். பாடங்களை கடகடவென முடித்துச் செல்லும் ஆசிரியர்களை விட, புரியும்படி நடத்தும் ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்கும். வேகவேகமாக நடத்திச் செல்வதோடு எளிமையாக விளங்கவும் செய்தல் என்பது ஆசிரியர்களுக்கான சவால்.

பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு அறைக்கு செல்லும் நேரத்தில் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் சேர்த்தே ரத்த அழுத்தம் உயர்கிறது என அண்மையில் படித்தேன். அந்தளவு ஆசிரியர்களின் நிலையும் உள்ளது. எண்களில் சுழன்று கொண்டிருக்கும் பெற்றோரைப் பரிசோதித்தால் அவர்களுக்கும் இருக்கலாம்.

மாணவர்கள் மன ஓட்டம்:ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடங்கள் இருந்து ஆசிரியர்கள் சுவாரஸ்யத்துடன் வகுப்புகளை நடத்தினால் தேர்வு ரத்து என்ற செய்தி வந்தால், 'எனக்கு இந்தப் பாடம் ரொம்பப் பிடிக்குமே, எப்படிக் கேட்டாலும் சொல்வேனே, எக்ஸாம் இல்லையா மிஸ் பண்ணிட்டேனே'-இப்படி மாணவர்களின் மன ஓட்டம் இருந்திருக்கும். தற்சமயம் விளையாடுகிற, பொழுது போக்குகிற சாதனத்தின் வழியே வகுப்புகள் நடக்கின்றன. கட்டுப்படுத்திக் கொண்டு வகுப்பில் அமர்ந்து கேட்டுப் புரிந்து கற்கும் குழந்தைகள் ஆச்சர்யமூட்டுகிறார்கள்.

ஆன்லைன் வகுப்பு என்பதை சாத்தியப்படுத்தித் தன் குழந்தைகளுக்குத் தர, தன்னிடம் இருந்தே ஒரே ஒரு பசுவை விற்று அலைபேசி வாங்கிய வடமாநிலத்தை சேர்ந்த தந்தையைப்பற்றிய செய்தியை சில நாட்களுக்கு முன் படித்திருப்போம். இப்படி தன் வாழ்விற்கான ஆதாரத்தை அழிக்கத் தயாராய் உள்ள பெற்றவர்களைப் பார்க்கும் போது, பள்ளிக்கூடம், வகுப்பறை என்பதன் அவசியத்தை கூடுதலாக உணர்கிறோம்.

குழந்தைகளின் ஆர்வம்:அலைபேசியை எடுக்காதே என்று சொன்ன பெற்றோர், நேரத்திற்கு அலைபேசியை எடுத்து வகுப்பைக் கவனிக்கிறார்களா என பிள்ளைகளை மேற்பார்வையிடுகிறார்கள். முன்னமே விளையாட்டு, வேடிக்கை எனப் பழகிப் போயிருந்த குழந்தைகள் வகுப்பு என்றதும் ஆர்வத்துடனே வந்தமர்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்படும் என அறிவித்திருப்பது நல்ல விஷயம். நோய்த் தொற்றுக் காலத்தில், பொருளாதார மந்த சூழலில் பாடங்கள் குறைக்கப்படும்போது வகுப்பெடுப்பவர்க்ளுக்கும் மாணவர்களுக்கும் சற்று பாரம் குறைந்தது போல இருக்கும்.

என்னால் முடியும்:பாடங்களைப் பற்றிய புரிதல் மாறினால் மதிப்பெண்ணும் மாறும். தெளிந்த அறிதலுடன் தேர்வை எதிர்கொள்ள என்னால் முடியும் என்பதை மாணவர்கள் நம்ப வேண்டும்.மதிப்பெண் குறைவாக வந்தால் சோர்ந்து போவது எந்தளவுக்குத் தவறோ அதே அளவு அலட்சியமும் தவறே. மாறாக... 'சரியாக படித்து முயற்சி செய்யாததால் குறைவாக மதிப்பெண் வந்துள்ளது. தோல்வியடைந்தாலும் சிறிதளவாவது கற்றுள்ளேன். என் விடைத்தாள் பற்றிய ஆசிரியரின் விமர்சனத்தை காது கொடுத்து வாங்கித் திருத்திக் கொள்வேன். காலம் இருக்கிறது. இன்னும் என்னை மேம்படுத்தி நிதானமாக கற்றுத் தேர்வேன்' என தனக்குள் சொல்லிக் கொள்ளலாம்..

மதிப்பெண் என்பது வெறும் எண். நம் அறிவுத் தேடலை நிகழ்த்தும் களமே பள்ளிக்கூடமும், கல்லுாரியும். விருப்பமான பாடங்களில் சகலத்தையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நவீன தொழில் நுட்ப உலகம் வழங்கிக் கொண்டிருக்கிறது.ஆசிரியர்களின் துணையோடு ஆரம்பிக்கும் தேடலில், ஒரு கட்டத்தில் ஆசிரியர்கள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தை மாணவர் அடைந்திருப்பர்.

கொடுக்கப்பட்டிருக்கிற காலத்துக்குள், கொடுக்கப்பட்டிருக்கிற பாடங்கள் எல்லாம் சோளப்பொரி என்கிற அளவில் ஊதித் தள்ளிவிட்டு விரிந்துக் கிடக்கிற காலத்துக்குள் கொட்டிக்கிடக்கிற ஏராளமான விஷயங்களைக் கற்று, பெருவாழ்வு வாழ... ஓடி வருகிற மாணவ சமுதாயம் உருவாக வேண்டும்!

-தீபா நாகராணி, எழுத்தாளர்
மதுரை.
nraniji@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • vbs manian - hyderabad,இந்தியா

    அறிவு தாகம் வாழ்க்கை முன்னேற்றத்தில் நம்பிக்கை உள்ள எந்த மாணவனும் தேர்வுகள் ரத்து செய்ய படுவதை வர வேர்க்க மாட்டான்

  • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

    நல்ல அறிவுறுத்தல்கள் பாராட்டுக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement